சங்கம் வளர்க்கும் சினிமாக் கவிஞர்!



விழுப்புரம், விக்கிரவாண்டி சாத்தனூரை பூர்வீகமாகக் கொண்டவர் தமிழமுதன். அப்பா - த.ஜெயராமன், அம்மா - ஜெயலட்சுமி.  ஜெ. தணிகாசலம்  என்கிற இயற்பெயரைக் கொண்ட இவர், கவிஞர் தமிழன்பன் மீதுள்ள பற்றின் காரணமாக தமிழமுதன் என்று பெயர் மாற்றிக் கொண்டவர்.   சென்னையில் சாமராவ் துவக்கப்பள்ளி மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றவர்.

 பழ வியாபாரம்  செய்துவந்த அப்பாவுக்குத் துணையாக, படித்துக்கொண்டே  சிறுவயதிலிருந்தே வாணிகத்தில் ஈடுபட்டு வந்தார் தமிழமுதன்.  ஓவியர்  ஆக வேண்டும் என்பதே இவரது ஆரம்பகால விருப்பமாக இருந்தது. கவிதைகள் எழுதி பள்ளியில் பரிசுகள் வாங்கியதால், அதிலேயே தொடர்ந்து  இயங்க ஆரம்பித்தார். ஒருநாள் தெருவில் பழம் விற்றுக் கொண்டிருந்தபோது, ஈரோடு தமிழன்பன் இவரைக் கடந்து சென்றிருக்கிறார்.

அவரது கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பதால்,  பழ வண்டியைப் பார்த்துக்கொள்ளும்படி  நண்பரிடம் சொல்லிவிட்டு கவிஞரைப்  பின்தொடர்ந்துபோய்,  சந்தித்துப்பேசி, அவரை மானசீக ஆசிரியராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். இவரது முதல் கவிதை  ‘பாக்யா’ சித்திரைச்  சிறப்பிதழில் வெளியானது. கண்ணதாசன் பதிப்பகம், கவிதை உறவு, உரத்த சிந்தனை இணைந்து நடத்திய கவிதைப்போட்டியில், ‘மதக்கலவர களத்தில்/  செருப்புகள் மட்டும்/ ஒன்றாகக் கிடந்தன/ மனிதர்கள் பிரிந்து பி...ரி...ந்து’ என்ற கவிதைக்கு முதல் பரிசு மட்டுமல்லாமல், ‘வைரவரிக் கவிஞர்’ என்று  காந்தி கண்ணதாசன் அளித்த  விருதும் கிடைத்தது.

‘அரைக்கம்பத்தில்’ என்ற  முதல் புதுக்கவிதை நூலுக்கு  ‘சிறந்த புதுக்கவிதை நூல்’ என்ற முதல் பரிசு பெற்றிருக்கிறார்.
ஆய்வக நுட்பனர் (லேப் டெக்னீஷியன்) பட்டயப்படிப்பு படித்து,  இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே   திரைப்படத்திற்குப் பாட்டெழுத முயற்சி செய்தார்.

இயக்குனர் விக்ரமன் உதவியாளர்  நம்பி மூலம் சுனில் சேவியர் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக இயக்குனர் எழில் பழக்கமானார். அவர்  இயக்கிய ‘அமுதே’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுத வைத்து அறிமுகப்படுத்தி அழகு பார்த்திருக்கிறார் எழில். அதன் தயாரிப்பாளர்கள் கரு.  நாகராஜன், சௌந்தரபாண்டியன், சுரேஷ் ஆகியோரின் நட்பும் கிடைத்தது.

இவர் எழுதிய முதல் பாடலை உன்னிமேனனும், சுஜாதாவும் பாடினார்கள். ‘அன்பே அது ஒரு காலம்/ என் தோட்டத்தில் பூக்களே இல்லை/ உன்னைப்  பார்த்ததினாலே/ ஒரு வசந்தம் வந்தது உண்மை...’ என்ற பல்லவி இயக்குனர் எழிலுக்காக எழுதப்பட்டதாகவே படக்குழு பாராட்டியது. இரண்டாவது  பாடலை சொர்ணலதா பாடினார். ‘என்ன என்ன நான் சொல்ல/ நானோ மாறிப் போகின்றேன்/ வண்ணம் வண்ணம் நான் வாங்கி/  பட்டாம்பூச்சியாகின்றேன்...’ என்கிற அந்தப்பாடலை சொர்ணலதா எந்த நாட்டுக்குப் போனாலும் ரசிகர்கள் பாடச் சொல்லிக் கேட்பார்களாம்.

மாணிக்க விநாயகம் குரலில் ‘மதுர ஜில்லா மரிக்கொழுந்து...’, கார்த்திக் - மால்குடி சுபா குரல்களில் ‘வளையல் காடு வளையல் காடு/ வசதியாக  வளைச்சுப்போடு...’, கிருஷ்ணராஜ் குரலில் ‘போட்டுத் தள்ளுடா போட்டுத் தள்ளுடா...’ என தமிழமுதனின் பாட்டுச்சாலைப் பயணம் தொடர்ந்தது.
‘கலக்குற சந்துரு’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். சுனில் சேவியர் இசையில் சுஜாதா -நரேஷ் அய்யர் குரல்களில் ‘சொல்லவா நான்  சொல்லவா...’ என்ற பாடல் ஒலித்தது.

அவர் இசையிலேயே ‘அங்காடி தெரு’ மகேஷ் நடித்த ‘கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்’ படத்தில் மூன்று பாடல்கள் எழுதினார். ‘முதல் முதலாய்  வந்த காதல்/ முதல் முதலாய் வந்த கவிதை/ மறக்காதே மறக்காதேயம்மா...’ என்று கார்த்திக் பாடினார். அனிதா குரலில் ‘வளைவு களாலே  நெளிவுகளாலே...’ என்றொரு பாடல் பிறந்தது.  திப்பு -சுர்முகி குரலில் ‘என் எதிரே...’ என்ற பாடல் காற்றிலும் காதுகளிலும் கலந்தது.

சுனில் சேவியர் இசையில்  நடன இயக்குனர் வின்சென்ட் ஜெயராஜ் இயக்கத்தில் ‘அரூபம்’ படத்தில் ‘தொட்டுத் தொட்டுப் போகும் காற்றே...’ பாடல்   சாய் - பிரியதர்ஷினி குரலில் இசைந்தது.முதன் முதலில் கவியரங்க மேடையில் இவரை ஏற்றியவர்கள் பாலகுருவும், பத்ரியும்.  தந்தை பெரியார்  திராவிடர் கழக தொடக்கவிழாவில் அப்துல்காதர் தலைமையில் கவிதை படித்திருக்கிறார் தமிழமுதன்.

இராசு. மதுரவன் தொடர்பு ஏற்பட்டதும், அவர் இயக்கிய ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படத்தின்  பாடல்தான் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. சபேஷ்முரளி, ரஞ்சித், மதுமிதா பாடிய ‘களவாணியே களவாணியே/  நெஞ்சத் திருடும் களவாணியே...’ என்ற பாடல் அது.

 ‘கோரிப்பாளையம்’ படத்தில் இவர் எழுதி, சபேஷ்முரளி, ரஞ்சித், விஜிதா பாடிய ‘அழகுக் காட்டேரி அழகுக் காட்டேரி அடிக்கப் பார்க்கின்றது...’  பாட்டு ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்பட்டது. ரவிமரியா இயக்கிய ‘மிளகா’ படத்தில் எழுதிய ‘கிறுக்குப் பையா கிறுக்குப் பையா...’ பாடலைக்கேட்டு  கட்டியணைத்துப் பாராட்டியிருக்கிறார் அந்தப் படத்தின் கதாநாயகன் நட்டி.  ரவிகிருஷ்ணா நடித்த ‘நேற்று இன்று நாளை’ படத்தில் 4 பாடல்கள்  எழுதியவர், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ‘ஊலலலா’ படத்தில் ,‘தோழனே எனக்குப் பிடித்த தோழனே...’ என்ற பாடலை எழுத, ரஞ்சித்- சின்மயி  பாடினார்கள்.

இதுவரை ஒரு பாட்டை இரண்டு ஆண் கவிஞர்கள் சேர்ந்து எழுதிய வரலாறு உண்டு. ஆனால் ஆணும், பெண்ணும் சேர்ந்து எழுதியதில்லை. அதுவும்  கணவனும், மனைவியும் சேர்ந்து எழுதியதில்லை. முதன் முதலாக அன்புச்செல்வன் இசையில், கார்த்திகைமுருகன் இயக்கத்தில் ‘கரிசல்பட்டியும்  காந்திநகரும்’ படத்தில் கார்த்திக், சின்மயி பாடிய பாடலை  மனைவி அ.இசையுடன் இணைந்து எழுதினார் தமிழமுதன்.

 ‘அடியாத்தி பாதகி/ என்னை கொன்றது என்னடி நியாயம்/ கருவேலங்காட்டுல ரோசா மொளைக்குது என்னடி மாயம்...?’ என்று தமிழமுதன் எழுத,  ‘நெசமாவே கேக்குறேன் உசுரோட சாகுறேன்/ இருவாட்சி செடியில மல்லியப்பூ பாக்குறேன்...’ என்று தொடர்ந்தார் இவரது மனைவி அ.இசை.

எஸ்.ஏ. ராஜ்குமார் எப்போதும் அவரது பாடல்களுக்கு அவரே பல்லவியை எழுதி விடுவார். புகழ் வாய்ந்த கவிஞர்கள் கூட அவர் பல்லவியை மீறி  வேறு பல்லவியைக் கொடுத்ததில்லை. இவர், அவரது பல்லவி இல்லாமல் 5 பல்லவிகளை  எழுதிக்கொடுத்தார். என் பல்லவியை மீறிய முதல் கவிஞன்  நீதான் என்று பாராட்டியிருக்கிறார் எஸ்.ஏ.ராஜ்குமார்.

‘கண்டதும் காணாததும்’ படத்தில் சார்லி இசையில் கார்த்திக் குரலில் ‘இது என்னடா மாயம்...’, அனிதா குரலில் ‘அசக்கு புசக்கு ஆச தோச அப்பள  வடைடா...’ என்று பயணம் தொடர்ந்தார் தமிழமுதன்.n ‘உனக்கு 20 எனக்கு 40’ படத்தில் ஜாய் மேக்ஸ்வெல் இசையில் கார்த்திக்- சின்மயி குரலில்  ‘சிரிக்கிற தீயே...’ என்றொரு சுடர்ப்பாடல் இவருடையதுதான்.

‘ஒருதலைராகம்’ சங்கர்  இயக்கத்தில், ரனில்கவுதம் இசையில் மூன்று பாடல்கள் எழுதினார். ‘நதி போகும் திசை அது கடல்தானம்மா/ விதி எங்கு  போகும் என்ன சொல்வது...’ என்று ஹரிஹரசுதன் குரலில் ஒலித்த  அந்தப் பாடலில் ‘மணல் நகர வெயிலிலும் முக்குளித்து முத்தெடுத்தோம்’ என்ற  வார்த்தைகளைக்கேட்டு, ‘துபாயில் வேலைக்காகச் சென்று துன்பப்படுபவர்களின் நிலையை வேறு எந்த வகையிலும் சொல்லமுடியாது’ என்று சங்கர்   பாராட்டியிருக்கிறார். அனிதா குரலில் வந்த ‘உஷாரய்யா உஷார்...’, சல்பீக் குரலில் ஒலித்த ‘தீயாக தீயாக...’ பாடல்கள் துபாயில் பட்டையைக் கிளப்பி,  பாராட்டுகளை வாங்கிக் கொடுத்தவை.

காந்த் தேவா இசையில் ‘சரவணக்குடில்’,  ‘காட்டுப்பய’,  தேவா  இசையில் ‘வாடாசெல்லம்’ மற்றும் பரத்வாஜ் இசையிலும் எழுதிக்  கொண்டிருக்கிறார் கவிஞர்.பாவேந்தர் பட்டயம், கவிஞர் கண்ணதாசன் விருது, கவிமாமணி ஈரோடு தமிழன்பன் விருது ஆகியவை இவரது கவி  வார்த்தைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம்.

 தமிழ்த்திரையில் 1931ஆம் ஆண்டு முதல் மதுரகவி பாஸ்கரதாஸ், நட்ராஜ் ஆகியோரால் பாடல்கள் எழுதப்பட்டு அவர்களைத் தொடர்ந்து பல  ஜாம்பவான்கள் பாடல்கள் எழுதியும் பாடலாசிரியர்க்கென்று தனியாக சங்கம் ஆரம்பித்ததில்லை. கண்ணதாசன், வாலி, மருதகாசி ஆகியோர் முயற்சி  எடுத்தும் முடியாத சூழலில், இவர் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்கம் தொடங்கியுள்ளார்.  இவரது  தோழர் பாலமுரளிவர்மனுடன்  இணைந்தே இந்த சங்கத்தைத் துவக்கினார்.  முதல் கூட்டத்தில் கவிஞர்கள் மதுரகவி, மதுமதி, பச்சியப்பன், தமிழ்க்குமரன், சீர்காழி சிற்பி, சி. புண்ணியா  கலந்து கொண்டனர்.

சங்கம் நடத்துவதற்கு அலுவலகம் கொடுத்து உதவுகிறார் தயாரிப்பாளரும், நடிகரும், கவிஞருமான கோட்டைக்குமார். அதை வழிநடத்துபவர்களாக  கவிஞர் முத்துலிங்கம், புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் இருக்கிறார்கள். நெறியாளர்களாக கவிஞர். கோட்டைக்குமார், பாலமுரளி வர்மன், கவிஞர்  சொற்கோ உள்ளனர்.

அடுத்த இதழில் இசையமைப்பாளர் சலீல் செளத்ரி

நெல்லைபாரதி