அடித்தட்டு மக்களின் வலி!ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிப்பவரை விட கேரக்டர் ரோலில் நடிப்பவர்கள் ‘பெத்த’ பேர் வாங்குவதுண்டு. பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் அந்த  வகையறாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் செய்தி அவரைப் பற்றி அல்ல. அவரைப் போல் தனித்து பேர் வாங்கும் ராஜ்கிரணைப் பற்றி... ‘கழுகு’ வெற்றிப்  படத்தைக் கொடுத்த சத்யசிவா இயக்கியிருக்கும் படம் ‘சிவப்பு’.

இந்தப் படத்தை முக்தா ஆர்.கோவிந்த், புன்னகைப்பூ கீதா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படம் முடிந்து முதல் காப்பி தயாரான  நிலையில் படத்தை எஸ்.எஸ்.மீடியா ேதசிகனுக்கு ஸ்கிரீன் செய்திருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் இமை மூடாமல் படம் பார்த்த தேசிகன்,  ராஜ்கிரணின் அற்புதமான நடிப்பைப் பார்த்து வியந்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், தன் நிறுவனத்தின் சார்பில் படத்தை வெளியிடும் உரிமையைப்  பெற்றுக் கொண்டாராம்.

இதன் நாயகன் நவீன் சந்திரா. ரூபா மஞ்சரி நாயகி. இவர்களோடு தம்பி ராமையா, ஏ.வெங்கடேஷ், போஸ் வெங்கட் ஆகியோரும் இருக்கிறார்கள். ‘‘இது புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம். இந்திய முகாம்களில் அகதிகளாக தங்கிக் கொண்டிருக்கும் அவர்களின்  போராட்டத்தை உண்மைக்கு மிக அருகில் சென்று சொல்லியிருக்கிறேன்.

அவர்களைப் பாதுகாக்கும் கோனார் என்ற கம்பீரமான கேரக்டரில்  ராஜ்கிரண் நடித்திருக்கிறார். இதில் அழகிய காதலையும் சொல்லியிருக்கிறேன். அடித்தட்டு மக்களின் வலியையும் சொல்லியிருக்கிறேன்’’ என்கிறார்  சத்யசிவா.

-எஸ்