“ஐந்து ரூபாய்கூட சம்பாதிக்க வழியில்லாத பசங்க, அம்பானி ரேஞ்சுக்கு வரணும்னு ஆசைப்படறாங்க. ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதைச் சொல்வதுதான் ‘அழகான நாட்கள்’ படம்’’ என்கிறார் இயக்குனர் விஜய்ஷங்கர். இவர் டி.பி.கஜேந்திரனிடம் சினிமா கற்றவர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார் இவர்.

நண்பர் விஜய்ஷங்கர் சொன்ன கதையைக் கேட்டதும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துவிட்டார் எஸ்.ஏ.இந்திரஜித். இவர் பத்திரிகைத்துறையிலிருந்து படத்தயாரிப்புக்கு வந்திருக்கிறார். இவரது ஓம் சாய்ராம் என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரண்ட்ஸ் மாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் இது.
அறிமுக நாயகன் அரீஷ்- ‘களவாணி’ புகழ் மனிஷா ஜோடி சேர்ந்துள்ள இந்தப்படத்தில் பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, கோவை செந்தில், டெலிபோன்ராஜ், ஜானகி என நகைச்சுவைப் பட்டாளமும் இருக்கிறது.
புலவர் சிதம்பரநாதன், யுகபாரதி, சினேகன் எழுதியுள்ள பாடல்களை உன்னி மேனன், வேல்முருகன், சுனந்தன், பெல்லிராஜ், கிரேஸ் கருணாஸ், சுர்முகி, மகிழினி, தீபா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். ஜாக்கப் சாம்யேல் இசையமைத்திருக்கிறார். மா.பொ.ஆனந்த் ஒளிப்பதிவில் கிருஷ்ணகிரி அருகே உள்ள நாட்ராம்பள்ளியில் வசனப்பகுதிகள் எடுத்து முடிவடைந்த நிலையில், ஊட்டி மற்றும் மூணாறு பகுதிகளில் பாடல் காட்சிகளை படமாக்க உள்ளனர்.