நாரதருக்காக நகுல் குடித்த பால்!தமிழுக்கு எண் ஒன்றை அழுத்திய சந்தோஷத்தில் இருக்கிறார் நகுல். அடுத்து எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘நாரதன்’ படத்தில் நடித்துக்  கொண்டிருக்கிறார். பணிவுக்கு அக்கா தேவயானியின் தப்பாத தம்பி. “அண்ணே என்னோட ‘நாரதன்’ ஷூட்டிங் வாங்கண்ணே! ரொம்ப ஜாலியான  படம். நீலாங்கரை ஒயிட் ஹவுஸ்ல தான் ஷூட்டிங்” - தொலைபேசியில் நகுல் அழைக்க, மறுநாளே ஒயிட் ஹவுசில் ஆஜராகி இருந்தோம். ஒயிட்  ஹவுஸ் கதைப்படி ராதாரவியின் வீடாக மாறியிருந்தது.

இன்றைக்கு என்ன சீன் எடுக்கிறார்கள் என்று உதவியாளர்களிடம் விசாரித்தோம். ‘பெட்ரூம் சீன் சார்’ என்றார்கள். அவ்வளவுதான் உற்சாகம் தொற்றிக்  கொண்டது. படத்தில் நிகிஷா பட்டேல், ஸ்ருதி ராம கிருஷ்ணன் என்று இரண்டு ஹீரோயின்கள். பெட்ரூம் சீனில் இன்று நடிப்பது ஸ்ருதி  என்பது  அங்கேயே கிடைத்த தகவல்.

அந்த விசாலமான அறை முழுவதும் வெளிச்சம் பரவிக் கிடந்தது. அங்கு இருக்கும் பெட்டில் நகுல் அமர்ந்திருக்க... அருகில் இருந்த ஸ்ருதி  ராமகிருஷ்ணன், அவருக்கு வெட்கத்துடன் டம்ளரில் பால் கொடுக்க, அதை வாங்கி மொடக் மொடக்கென்று குடித்து விட்டு எழுந்தார். “என்ன மாமா!  மொத்த பாலையும் நீங்களே குடிச்சீட்டிங்க. எனக்கு?” என்று சிணுங்கினார். “சீ..சீ... எச்சிப்பால் குடிக்கக் கூடாது. நீ வேணா இன்னொரு டம்ளர்  எடுத்து குடிச்சுக்கோ” என்கிறார் நகுல்.

“அய்யோ இந்த மாமாவுக்கு ஒண்ணுமே புரியமாட்டாங்குதே...” என்று ஸ்ருதி கடுப்பாக வேண்டும்போல.... “புரிய மாட்டேங்குதே” என்ற வார்த்தை  ஸ்ருதி வாயில் நுழைய மாட்டேங்குது. ‘மீண்டும் ரீ டேக் போலாம்’ என்கிறார் இயக்குனர் நாகா வெங்கடேஷ். “சார் பால் தீர்ந்துபோச்சு” என்கிறார்  உதவியாளர். “அடப்போங்கய்யா, போய் பால் வாங்கிட்டு வாங்க” என சொல்லி சின்ன பிரேக் விட்டு நம்மிடம் வந்தார். தூரத்திலிருந்து தன்  ஸ்டைலில் வணக்கம் வைத்து நன்றி சொன்னார் நகுல்.

‘என்ன சார் இது? முதலிரவு சீன் மாதிரி தெரியுது. ஆனாலும் அப்படித் தெரியலையே’ என்றோம்... “கதைப்படி நகுல் கோவையிலிருந்து சென்னைக்கு  ஒரு வேலையாக வருகிறார். அப்படி வரும்போது சென்னையில் இருக்கும் மாமா ராதாரவி வீட்டில் ஒரு நாள் தங்குகிறார். நகுலை உயிராக நேசிக்கும்  மாமா மகள் ஸ்ருதி, அவரை நிரந்தரமாக சென்னையில் தங்க வைக்க தன் கைவித்தைகளைக் காட்டுகிறார். அதில் ஒன்றுதான் இது. நகுலுக்கு பால்  கொடுத்து அன்பை அதில் சேர்த்துக் கொடுத்து கவிழ்க்கிற சீன்.

ஆனால் நகுலுக்கோ தான் வரும் வழியில் ரெயிலில் சந்தித்த நிகிஷா பட்டேல் மீதுதான் மயக்கம். நிகிஷாவுக்கு ஒரு ஆபத்து வர, அதிலிருந்து அவரை  நகுல் காப்பாற்றப்போய் ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டுகிறார். இதனால் தொடர்ந்து சென்னையில் தங்குகிறார்.  அவர் நிகிஷாவை காப்பாற்றச்  செல்லும்போது அவரை கண்காணிக்க ஒரு காமெடி பட்டாளத்தை அனுப்புவார் மாமா ராதாரவி. நாரதன் எனப்படும் பிரேம்ஜி இந்த  கலாட்டாக்களுக்குள் புகுந்து கலவரம் செய்கிறார். நாரதரின் கலகம் எப்படி நன்மையில் முடிகிறது என்பது கதை.”

மளமளவென சொல்லிக்கொண்டே வந்தவர்... “அடடா, புரட்யூசர்கிட்ட சொல்ற மாதிரி உங்ககிட்ட முழுக் கதையையும் சொல்லிட்டேனே,  அம்புட்டையும் எழுதிடாதீங்க” என்றவர் சின்ன கேப் விட்டு “எழுதினாலும் தப்பில்லை. கதையில புதுசா என்ன இருக்கு? ஸ்கிரீன் ப்ளேலதான் புகுந்து  விளையாடியிருக்கோம். நகுலோட ஓப்பனிங் சாங்கே ஓடுற ரெயில்லதான். க்ளைமாக்ஸ் சண்டையில அனல் பறக்கும். அந்தமான் தீவுக்கு நிகிஷாவை  அழைச்சிட்டுப் போய் அழகா படம்பிடிச்சிட்டு வந்திருக்கோம்.

 செம ஜாலியான படமா இருக்கும்” என்று சொல்லி முடிக்கவும், “சார் பால் ரெடி” என உதவியாளர் அழைக்கவும், மீண்டும் பாலை படம் எடுக்க  கிளம்பினார். வேகமாக ஓடிவந்த நகுல், “சொன்னபடி வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்ணா” என்று கைபிடித்து குலுக்கி விட்டு வேகமாக பால்குடிக்கச்  சென்றார்.

-மீரான்