காதலும் ஆன்மிகமும் கலந்த கட்டு!‘பசங்க’ ராம், ‘சாட்டை’ யுவன் இணைந்து நடிக்கும் படம் ‘கமர கட்டு’. ‘‘இது காதல், திரில், ஆன்மிகம் கலந்த கமர கட்டு’’ என்று படத்தைப்பற்றிக்  குறிப்பிடுகிறார் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன். பிளஸ்-டூ முடித்து கல்லூரிக்குச்செல்லும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை திரைக்கதை  ஆக்கியிருக்கிறாராம் இயக்குனர்.

காதல் கதையாக ஆரம்பமாகும் படம், இடைவேளைக்குப்பிறகு திரில்லருக்கு மாறி, இறுதியில் ஆன்மிகமாக முடியுமாம்.‘‘கமரகட்டு சிறியதாக இருந்தாலும் இனிப்பு, புளிப்பு கலந்து ரொம்பவும் உறுதியாக இருக்கும். அதை கடிப்பது சிரமம். மீறி கடித்தால் பல் வலிக்கும்.  அப்படித்தான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடையிலான பருவம். இந்த பருவத்தை சரியாகக் கையாளாமல் விட்டுவிட்டால் பல்வேறு விளைவுகளைச்  சந்திக்க நேரிடும் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம்.

பள்ளிச் சீருடையில் காதல் செய்வதுபோல புகைப்படங்கள் வெளிவருவது வெறும் பப்ளிசிட்டிக்காக மட்டும்தானே தவிர, படத்தில் அப்படி எந்த  காட்சியும் வைக்கவில்லை. நான் சொந்த அனுபவத்தில் பார்த்து வியந்த விஷயங்களை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். நாயகனைவிட  நாயகிக்கே முக்கியத்துவம் இருக்கும். திருவண்ணாமலை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை ஒரு பாடலில் சொல்லியிருக்கிறோம்.

 திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடவுளாக நினைத்து வழிபடும் ஒரு குன்றை படமாக்க எண்ணினோம். அந்த குன்றுக்கு அருகில்  யாரும் செல்ல முடியாது என்பதால் ஹெலி கேமை வைத்து படமாக்க நினைத்தோம். ஆனால், அதை கடைசி வரை எங்களால் படமாக்க  முடியவில்லை. ஏதோ ஒரு சக்திதான் எங்களைப் படமாக்கவிடாமல் தடுத்தது’’ என்கிறார் இயக்குனர்.