துணை முதல்வர்



போக்குவரத்து, கல்வி, மருத்துவமனை என அடிப்படை வசதிகளுக்காக அல்லல்படுகிறார்கள் மஞ்சமாக்கானூர் கிராம மக்கள். அவசர ஆபத்துக்கு முதலுதவி வேண்டும் என்றாலும் படகில் அக்கரைக்கு சென்றுதான் உயிர்பிழைக்க முடியும். அந்தப் படகு சவாரியில் சிலர் பிழைத்திருக்கிறார்கள், சிலர் இறந்திருக்கிறார்கள்.

இதைத் தடுக்க, அக்கரைக்குச் சென்று வர பாலம் கட்ட வேண்டும். ஆனால் அதை அரசு செய்து தரவில்லை. விரக்தியின் உச்சத்துக்குச் செல்லும் கிராம மக்கள் தங்கள் ஊரில் அதிகம் படித்த (ஐந்தாம் வகுப்பு) பாக்யராஜை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைக்கிறார்கள். அதன் பிறகு அந்தக் கிராமத்துக்கு விமோசனம் எப்படி கிடைக்கிறது என்பது க்ளைமாக்ஸ்.

பாக்யராஜ் தன்னுடைய டிரேட் மார்க்கை கச்சிதமாக வழங்கியிருக்கிறார். டைட்டானிக் படம் பார்க்கும்போது ஹீரோ, ஹீரோயினை அண்ணன், தங்கை என்று டிரான்ஸ்லேட் பண்ணும் காட்சியில் தியேட்டரை சிரிக்க வைக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் ஜெயராமன் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். மலையாள சேச்சியாக வரும் ஸ்வேதா மேனன் நடித்திருக்கிறார் என்பதை விட கவர்ச்சி வலம் வந்திருக்கிறார்.

மிச்ச சொச்ச அழகை வைத்துக் கொண்டு பாடலுக்கு மட்டும் வந்து போகிறார் ‘காதல்’ சந்தியா. பாக்யராஜை எதிர்த்து போட்டியிடும் மணவை பொன் மாணிக்கம் நன்றாக நடித்திருக்கிறார். இன்றைய அரசியலை மிகை இல்லாமல் சொன்னால்தான் தனக்கு திருப்தி கிடைக்கும் என்ற மனநிலையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விவேகானந்தன். ஆனால் ரசிகர்களின் திருப்தி அதைவிட முக்கியம் !