யாரிடம் கையேந்துவது?



எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தன்னையறியாமல் முணுமுணுக்கும் பாடல், ‘இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…’  இஸ்மாயில் முகமது ஹனீபா என்கிற இ.எம். ஹனீபாவின் கணீர்க்குரலில் இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் இதயத்துக்குள் ஒரு இனம்புரியாத அமைதி குடிகொள்வதை, கேட்கும் சக்தியுள்ள அத்தனைபேரும் அனுபவித்திருப்பார்கள்.

‘ஓடி வருகிறான் உதயசூரியன்…’, ‘கல்லக்குடிகொண்ட கருணாநிதி வாழ்கவே…’, ‘அழைக்கின்றார் அண்ணா…’ ஆகிய பாடல்கள் இல்லாமல் எந்த ஒரு தி.மு.க மேடையும் துவங்குவதுமில்லை; முடிவதுமில்லை.

 ஆன்மிகப்பாடகராக இருந்தும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தீவிர உறுப்பினராகவும், ஆஸ்தான பாடகராகவும் விளங்கியவா் நாகூர் ஹனீபா. அந்த இசைமுரசுவின் முரசொலியை இனி நாம் நேரடியாகக் கேட்கமுடியாமல், காலம் அவரை அபகரித்துக்கொண்டது. ஒலிபெருக்கி இல்லாமலே ஊராரின் காதுகளைக் கவுரவித்த அந்த கானக்குரலைப்போல் இன்னொரு குரலுக்கு நாம் யாரிடம் போய் கையேந்துவது?

செருக்குமிகு ஜெயகாந்தன்!

கழுத்துப்பிடி வந்தாலும் கருத்துப்பிடியை விடாத ஒரு எழுத்துச்சிங்கம், நிரந்தரத்துயிலில் ஆழ்ந்துவிட்டது. எல்லோருக்கும் ‘ஃ’ மட்டும் ஆயுத எழுத்தாக இருக்கும்போது, இவரது விரல்களுக்கு எல்லா எழுத்துகளும் ஆயுத எழுத்துக்களாக வசப்பட்டன. பாராட்டுவிழாவுக்கு அழைத்தவர்களையும் பதம் பார்த்துவிடும் பதங்கள் அவருக்குச் சொந்த
மானவை.

ஐந்தாம் வகுப்பைத்தாண்டாத அந்த ஞானசூரியனின் தலையை ‘ஞான பீடம்’, ‘சாகித்ய அகாடமி’, ‘பத்மபூஷண்’ உள்ளிட்ட உயரிய விருதுகள் அலங்கரித்தன.
குடியரசுத்தலைவர் சான்றிதழ் பெற்ற ‘உன்னைப்போல் ஒருவன்’, தேசிய விருது பெற்ற ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘யாருக்காக அழுதான்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘ஊருக்கு நூறுபேர்’ என அவரது திரைப்பங்களிப்பு குறைவாக இருந்தாலும், சினிமாவை நேசிப்பவர்களுக்கு நிறைவைத் தந்தவை.

அடித்தட்டு மக்களின் வாழ்வியலை அழகுற பதிவு செய்த அவரது எழுத்துக்கள் காலம் கடந்தும் வாழ்ந்து நிற்க வலுப்பெற்ற வரலாற்றுப்பதிவுகள்.
செல்வச்செழிப்போடு வாழ ஆசைப்படும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், கருத்துச் செருக்கோடு கம்பீர நடைபோட்டவர் ஜெயகாந்தன்.

 நெல்பா