ரஜினிக்கும் சிவாஜிக்கும் பொருந்திய குரல்!



பாலக்காடு ஒத்தப்பாலத்தை பூர்வீகமாகக்கொண்ட வாசுதேவன், மலேசியாவில் பிறந்ததால், தமிழராகவே வளர்ந்தார். சாது நாயர் அம்மலு பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப்பிறந்த வாசுதேவன், தமிழ்வழிக்கல்வி கற்றார். அம்மாவைத்தவிர, குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் இசை ஈடுபாடு இருந்ததால், வாசுதேவனும் அதன்பால் ஈர்க்கப்பட்டார். முதன்முதலாக மேடையேறிப் பாடும்போது அவருக்கு வயது எட்டு.

தமிழ் நாடகங்களில் நடிகராகவும் பாடகராகவும் பரிமளித்த வாசுதேவனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவர் நடித்த ‘ரத்தப் பேய்’ நாடகம் படமாக்கப்பட்டபோது, குழுவோடு சென்னைக்கு வந்து, ஜி.கே.வெங்கடேஷ் இசையில் ஒரு பாடலைப் பாடினார் வாசுதேவன்.  நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. வாசுதேவனை தமிழ் சினிமா  பின்னணிப் பாடகராக வரவு வைத்தது. ஜெய்சங்கர் வித்யா நடிப்பில் வி.குமார் இசையமைத்த ‘டெல்லி டூ மெட்ராஸ்’ படத்தில் ‘பாலு விக்கிற பத்மா, உன் பாலு ரொம்ப சுத்தமா…’ என்ற காமெடிப்பாடலைப் பாடி கோடம்பாக்கத்தில் கால் பதித்தார் வாசுதேவன்.

இளையராஜாவின் இசைக்குழுவில் ஐக்கியமானபோது அவரது சினிமாத்தொடர்பு எல்லை விரிவாக்கம் பெற்றது. அதே இசைக்குழுவில் அங்கம் வகித்திருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் உற்ற நண்பராக உடனிருந்து உதவிகள் செய்தார்.பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தில் தனது இசையமைப்பில் வாசுதேவனை  எஸ்.ஜானகியுடன் இணைந்து ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…’ பாடலைப்பாடவைத்தார் இளையராஜா. அந்தப்பாடல் பட்டி சிட்டியெல்லாம் பரவலான வெற்றியைப்பெற்றது. அதே படத்தில் பி.சுசீலாவுடன் சேர்ந்து அவர் பாடிய ‘செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா…’ பாடல் கிராமத்து தேசிய கீதமாக ஒலித்து, பெரிய வரவேற்பைப்பெற்றது.

ஒரு மேடைக்கச்சேரியில் வாசுதேவன் பாடியதைக்கேட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் ‘பாரத விலாஸ்’ படத்தில் ‘இந்தியநாடு என் வீடு…’ பாடலில், பஞ்சாபி பாடுவதாக அமைந்த பகுதியைக் கொடுத்து பாடச்செய்தார்.

‘குமாஸ்தாவின் மகள்’ படத்தில் அவர் பாடிய ‘காலம் செய்யும் விளையாட்டு…’ பாடல், குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பெயர் வாங்கிக்கொடுத்தது. வாசுதேவனாக இருந்தவரை, அந்தப்படத்திலிருந்து ‘மலேசியா வாசுதேவன்’ என்று பெயர் சூட்டிப் பாராட்டினார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.

‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் ‘இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு…’, ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ‘வான் மேகங்களே…’, ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் ‘தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி…’, ரஜினியின் ‘தர்மயுத்தம்’ படத்தில் ‘ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு…’,‘நண்டு’ படத்தில் ‘அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா…’, ‘புதுக்கவிதை’ படத்தில் ‘வா வா வசந்தமே…’, ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் ‘பட்டுவண்ண ரோசாவாம்…’, ‘எங்க ஊரு ராசாத்தி’ படத்தில் ‘பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்…’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் பாடிய ‘‘தென்கிழக்குச் சீமையிலே…’ என மலேசியா வாசுதேவன் பாடிய மெல்லிசைப்பாடல்கள் இன்றைய தலைமுறையும் காலர் ட்யூனாய் வைத்துக்கொள்ளும் கவுரவம் பெற்றவை.

‘அடுத்த வாரிசு’ படத்தில் ‘ஆசை நூறுவகை…’, ‘பில்லா’ படத்தில் ‘வெத்தலையப் போட்டேண்டி…’, ‘நெற்றிக்கண்’ படத்தில் ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு…’, ‘அருணாசலம்’ படத்தில் ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே…’, ‘எஜமான்’ படத்தில் ‘எஜமான் காலடி மண்ணெடுத்து…’, ‘வேலைக்காரன்’ படத்தில் பாடிய ‘பெத்து எடுத்தவதான் என்னையும் தத்துக் கொடுத்துப்புட்டா…’ ‘மனிதன்’ படத்தில் ‘மனிதன் மனிதன்…’ என்று ரஜினிக்காக இவர் கொடுத்த குரல், ரசிக்கப்பட்டது. எஸ்.பி.பியுடன் இணைந்து ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் பாடிய ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா…’ பாடல், சத்யராஜின் மேடைப்பேச்சுக்கு விளிச்சொற்களாய் அமைந்துவிட்டன.

டி.எம்.செளந்தரராஜனுக்குப்பிறகு சிவாஜிகணேசனுக்குப் பொருத்தமான குரல், மலேசியா வாசுதேவனுக்கே உரியது என்பதை ‘படிக்காதவன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்புக்க்குயிலாக…’ பாடலும், ‘முதல் மரியாதை’ படத்தில் வரும் ‘வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்…’, ‘பூங்காத்து திரும்புமா…’ பாடல்களும் சாட்சியாக நின்று சபைக்குச் சொன்னவை.

‘சட்டம் என் கையில்’ படத்தில் ‘ஆழக்கடலில் தேடிய முத்து…’, ‘கல்யாணராமன்’ படத்தில் ‘காதல் வந்திருச்சி ஆசையில் ஓடிவந்தேன்…’, ‘புன்னகை மன்னன்’ படத்தில் ‘மாமாவுக்கு குடுமா குடுமா…’ என கமல்ஹாசனுக்காக மலேசியா வாசுதேவன் கொடுத்த குரல், கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ‘கோவில் மணியோசை தன்னை…’, ‘சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் ‘காதல் வைபோகமே…’, ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தில் ‘ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது…’, ‘கரகாட்டக்காரன்’ படத்தில் ‘ஊரு விட்டு ஊரு வந்து…’, ‘மாரியம்மா மாரியம்மா…’ என மலேசியா வாசுதேவனின் வெற்றிப்பாடல்களின் வரிசை வெளிச்சம் பெற்று நீள்கின்றன.

‘முதல் வசந்தம்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘பாலைவன ரோஜாக்கள்’ என நூற்றைத்தொடும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, அபிநயத்திலும் முத்திரை பதித்தார் மலேசியா வாசுதேவன்.தமிழக அரசின் ‘கலை மாமணி’ மற்றும் சிறந்த பின்னணிப்பாடகருக்கான விருதுகளைப் பெற்ற மலேசியா வாசுதேவன் மறைந்தபோது, அவரது உடலை தனக்குச் சொந்தமான கோதண்டபாணி ஒலிப்பதிவுக்கூடத்தில் வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்திருந்தார் அவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

அடுத்த இதழில் பின்னணிப்பாடகி பத்மலதா

நெல்லை பாரதி