கேப்டனுக்குப் பிடித்த கேமராமேன்!



சேலத்தில் பிறந்த பூபதி, கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படிக்கும்போதே போட்டோகிராபியில் கவனம் செலுத்தியவர். பாலசந்தரிடம் வாய்ப்புக்கேட்டு பிரகாஷ்ராஜ் கொடுத்த ஸ்டில்ஸ் இவரால் எடுக்கப்பட்டதே. பின்னாளில் பிரகாஷ்ராஜ் நடித்து தேசிய விருது வாங்கிய ‘அந்தப்புரம்’ தெலுங்குப்படத்துக்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்தார். 1986ல் சென்னை திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தவர், 90ல் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவராக வெளியே வந்தார். ராஜீவ் மேனனிடம் உதவியாளராகப் பணியாற்றியபோது சினிமா வட்டாரத் தொடர்புகள் பரிச்சயமானது.

இன்றைய முன்னணி ஹீரோ ரவிதேஜா அறிமுகமாகி, கிருஷ்ணவம்சி இயக்கிய ‘சிந்தூரம்’ தெலுங்குப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான பூபதி, அனைத்து முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்குப்படவுலகில் இவரது திறமையைக்கண்ட இயக்குனர் திருப்பதிசாமி, விஜயகாந்திடம் சொல்லியிருக்கிறார். ‘நரசிம்மா’ படத்தின் மூலம் இவரை தமிழ்த்திரைப்பட ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த். அடுத்து அவரது ‘தவசி’, ‘விருதகிரி’ படங்களுக்கும் பூபதிதான் ஒளிப்பதிவாளர்.

அர்ஜுன் நடித்த ‘மாசி’, சரத்குமாரின் ‘1977’, சினேகா நடித்த ‘பவானி ஐ.பி.எஸ்’, பரத் நடித்த ‘ஆறுமுகம்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பூபதி, தெலுங்குப்படஉலகில் பிசியாகிவிட்டார். இவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் விஜயகாந்த். அவரது மகன் சண்முக பாண்டியன் அறிமுகமான ‘சகாப்தம்’ படத்துக்கு ஒளிப்பதிவு இவர்தான்.

‘‘அறிமுக ஹீரோ நடிக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது எல்லா ஒளிப்பதிவாளர்களுக்கும் சவாலாகத்தான் இருக்கும். என்னை நம்பி மகனை ஒப்படைத்திருக்கிறார் விஜயகாந்த் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு பணிபுரிந்தேன். சண்முக பாண்டியனும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். ஒளிப்பதிவுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் தயாரிப்பாளர் சுதீஷ் செய்துகொடுத்தார். கல்லறையில் பெய்யும் ஆலங்கட்டி மழையை சிஜியில்தான் செய்துகொடுத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது’’ என்று உற்சாகமாகப்பேசும் பூபதிக்கு, என்னதான் தெலுங்குப்படங்களில் பேர் வாங்கினாலும், தமிழ்ப்படங்களில் திறமை காட்டவேண்டும் என்பதே லட்சியம்.

நெல்பா