வருவதாகச் சொன்ன நேரத்துக்கு வராமல் தேர்தல் கூட்டங்களை வேடிக்கை பார்த்துவிட்டு மெதுவாக வந்து சேர்ந்தார் சரோஜா. “நாங்கள் எவ்வளவு சீரியஸாக உங்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம், கொஞ்சமும் கவலை இல்லாமல் இருக்கிறீர்களே” என்று நாம் கோபிக்க, “ரொம்பவும் சீரியஸாக இருக்காதீர், உடம்புக்கு ஆகாது. உங்களுக்காக ஒரு ஜாலியான செய்தியைச் சொல்கிறேன்” என்றவர், “பிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் மூன்று நாயகர்கள் சேர்ந்து நடிக்கிறார்கள் அல்லவா?
முதல் கட்டப் படப்பிடிப்பிலேயே அவர்களுக்குள் மோதல் வந்து விட்டதாம்” என்று சொல்லத் தொடங்கினார். அவரை இடைமறித்து, “என்ன ஜாலியான செய்தி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு படுசீரியஸான மேட்டரைச் சொல்லுகிறீர்” என்று கேட்டோம். அதற்கு, “அவசரப்படாதீர்கள். இது ஜாலிதான். அவர்களுக்குள் என்ன மோதல்? என்பது தெரிந்தால் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்’’ என்றவர், “படத்தில் நாயகியாக நடிக்க அண்டை மாநிலத்திலிருந்து கொடியிடையாளரை அழைத்து வந்திருக்கிறார்கள் அல்லவா? அவரிடம் யார் கடலை போடுவது என்பதில் தான் மூவருக்கும் போட்டியாம்.
இளையமுன்னணி நடிகரை முந்திக்கொண்டு சூப்பர் தயாரிப்பாளர் மகனும் இளையகாந்தரும் நடிகையிடம் பேச்சுக்கொடுக்க உட்கார்ந்து விடுகிறார்களாம். இருவரும் சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள் என்பதால் அவர்களுக்கு அது எளிதாகிவிட்டது. ஆனால் நம்ம முன்னணி நாயகருக்கு ஆங்கிலம் சரளமாக வராது என்பதால் மற்ற நாயகர்கள் இருவரிடமும் நேரடியாகவே, எனக்கும் கொஞ்சம் வாய்ப்புக் கொடுங்கள். நீங்களே பேசிக் கொண்டிருந்தால் எப்படி?’’ என்று கேட்டாராம். இப்படியாக மூவரில் யார் நாயகியோடு பேசுவது என்பதில் கடும்போட்டி ஓடிக்கொண்டிருக்கிறதாம்’’ என்று சொல்லி முடித்தவர், “இது ஜாலியான விசயம்தானே” என்றும் கேட்டார். “ரொம்ப முக்கியம்” என்று நாம் அலுத்துக்கொள்ள வேறெதுவும் சொல்லாமல் அடுத்த விசயத்துக்குப் போனார்.
“தேர்தல் நேரமென்பதால் அதையொட்டி நடந்த ஒரு விசயம் சொல்கிறேன்” என்றவர், “இளைய முன்னணி நடிகரின் தந்தை தேர்தல் நேரத்தில் நம் படம் வெளியானால் பரபரப்பாகப் பேசப்படும் என்று நம்பி அவசர அவசரமாகப் படத்தை வெளியிட்டாராம்.ஆனால் வந்த வேகத்தில் அந்தப் படம் பெட்டிக்குள் முடங்கிவிடவே பெரியஇரண்டு நட்டமாகி விட்டதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம். இதையே காரணமாகச் சொல்லி தான் ஆதரிக்கும் கட்சியில் ஏதாவது பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறாராம். அதிலும் அவருக்கு ஏமாற்றம்தான்” என்று சொன்ன சரோஜா, அடுத்த மேட்டருக்குத் தாவினார்.
“வாய்பேச முடியாவிட்டாலும் நடிப்பிலும் அழகிலும் அனைவரையும் கவர்ந்த அந்த நடிகையைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்தாலும் அவர் சம்பளமாக இரண்டு பத்துகளைக் கேட்டதால் பலரும் தெறித்து ஓடிக் கொண்டிருந்தார்கள் என்பது பற்றி நாம் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். அந்த நடிகை இப்போது சம்பளத்தை ஏற்கெனவே கேட்டதில் பாதிக்கும் குறைவாக்கிக் கொண்டாராம்.அதன் பலன், வளரும் நடிகர் ஒருவரின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். மேலும் ஒரு படமும் கிடைக்கிற மாதிரி இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று சொல்லிமுடித்த சரோஜா, “அடுத்த வாரம் சரியாக வந்துவிடுகிறேன்” என்று உறுதியளித்துவிட்டுக் கிளம்பிச் சென்றார்.