ஹன்சிகா படிக்கும் தமிழ்ப் பத்திரிகை





தமிழ்ப் படவுலகைச் சேர்ந்த 3 இயக்குநர்கள் அகால மரணம் அடைந்து விட்டனர். இதில் சோகம் என்னவென்றால், அவர்கள் பார்த்துப் பார்த்து செதுக்கிய தங்கள் படங்களை, இனி அவர்களால் பார்க்க முடியாது என்பதுதான். அஸ்வின் சேகர், கீர்த்தி சாவ்லா நடித்த படம் ‘நினைவில் நின்றவள்’. வஸந்த் உதவியாளர் அகஸ்திய பாரதி இயக்கினார். இது அவருக்கு முதல் படம். ரிலீசுக்கு பலமுறை தேதி குறித்தும் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், உடல்நிலை குன்றியிருந்த அகஸ்திய பாரதி, திடீரென்று இறந்து விட்டார். ஜானி, யுவன், லியாஸ்ரீ நடித்துள்ள படம் ‘சொகுசு பேருந்து’. ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து, பாடல் வெளியீடு நடக்க விருந்த நிலையில், புற்றுநோய் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இயக்குநர் ராசு மதுரவன், திடீரென்று மரணம் அடைந்தார். புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘உன்னோடு ஒருநாள்’ படத்தின் இயக்குநர் துரை கார்த்திகேயன், சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் அகால மரணம் அடைந்தார். இப்படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து முடித்துள்ள அஜீத், அடுத்து ‘சிறுத்தை’ சிவா டைரக்ஷனில் ‘வீரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து புதுப்படம் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம், விரைவில் அவர் காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறார். கடுமையான கால் வலி காரணமாக சிகிச்சை பெற்றவர் அஜீத். ‘ஆரம்பம்’ ஷூட்டிங் மும்பையில் நடந்தபோது, கார் மோதியதால் அதே காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓய்வெடுக்க பலர் வற்புறுத்தினர். ஆனால், தன்னால் ஷூட்டிங் தடைபடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, கடுமையான கால் வலியையும் பொறுத்துக்கொண்டு நடித்தார். ‘வீரம்’ படத்தின் ஷூட்டிங் 40 நாட்களில் முடிந்து விடும். எனவே, அக்டோபர் மாதம் அஜீத்துக்கு ஆபரேஷன் நடக்கும் என்று தெரிகிறது.

ஷாஜிகைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே ஹீரோவாகவும், மீனாட்சி தீக்ஷித் ஹீரோயினாகவும் நடிக்கும் படத்துக்கு முதலில் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்றும், பிறகு ‘இ.பி.கோ’ அதாவது, ‘இந்தியனாகப் பிறந்தவனின் கோரிக்கை’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருந்தது. இப்போது நல்ல தருணம் போலும். மீண்டும் ஷூட்டிங் தொடங்குகிறது. படத்துக்கு ‘என் வழி தனி வழி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஆஹா’ ஹீரோ ராஜீவ் கிருஷ்ணா வில்லனாக நடிக்கிறார்.



‘அட்ட கத்தி’, ‘எதிர்நீச்சல்’ படங்களைத் தொடர்ந்து ‘நளனும் நந்தினியும்’ படத்திலும் கிராமத்துப் பெண்ணாக நடிக்கும் நந்திதா, கன்னடத்தில் சில நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால், தமிழில் அவருக்கு அவரே பேசும் சந்தர்ப்பம் அமையவில்லையாம். ‘‘விஜய் சேதுபதி ஜோடியாக ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’ படத்தில் முதல்முறையாக காமெடி செய்திருக்கிறேன். ரசிகர்களை அழவைப்பது சுலபம். சிரிக்க வைப்பது மிகவும் கஷ்டம் என்பதை ஷூட்டிங் ஸ்பாட்டில் புரிந்துகொண்டேன். சமீபத்திய சந்தோஷம் என்னவென்றால், பெங்களூரில் பி.காம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன்’’ என்றார்.

‘வில்லன், குணச்சித்திரம், காமெடி என எந்த வேடமாக இருந்தாலும் சரி. என் பாடிலாங்குவேஜுக்கு பொருத்தமாக இருக்கும் பட்சத்தில், படத்தில் என் கேரக்டரும் பேசப்படும்படியாக இருந்தால், எல்லா வேடத்திலும் நடிப்பேன். இப்போது போலீஸ் கான்ஸ்டபிளாக ‘அசத்தப்போவது நீயா? நானா?’, ஐ.டி கம்பெனியில் பணியாற்றுபவனாக ‘13’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். இதில் ‘13’ என்ற படத்தை பாலாஜி சக்திவேலின் உதவியாளர் சுரேஷ் இயக்குகிறார். தவிர, காமெடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இனி நடிப்பிலும், டைரக்ஷனிலும் கவனம் செலுத்துவேன்’’ என்ற மனோஜ் கே.பாரதி, இதற்கு முன் மணிரத்னம் இயக்கிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

‘முரட்டுக்காளை’ ரீமேக் ரிலீசான பிறகு சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கவில்லை. மூன்று வெற்றிப் படங்களை இயக்கிய பிறகுதான் ஹீரோவாக நடிப்பேன் என்று சொல்லியிருந்தார். அதன்படி அவரது இயக்கத்தில் ‘கலகலப்பு’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்கள் ரிலீசானது. விரைவில் ‘மதகஜ ராஜா’ வருகிறது. இதையடுத்து சுந்தர்.சி ஹீரோவாக நடித்து, இயக்கும் படத்துக்கு ‘அரண்மனை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘சந்திரமுகி’ மாதிரி ஆவி சம்பந்தப்பட்ட கதை. மூன்று ஹீரோயின்களில் ஹன்சிகா, ஆண்ட்ரியா நடிப்பது உறுதியாகி விட்டது. இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.



வெளிநாட்டில் நடக்கும் கலைநிகழ்ச்சியில் நடனமாட கிளம்பிக் கொண்டிருந்த பானு, இனி ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எழில் இயக்கத்தில் ‘தேசிங்கு ராஜா’ படத்தில் நான்தான் ஹீரோயினாக நடித்திருக்க வேண்டும். சில காரணங்களால் முடியவில்லை. பிறகு டைரக்டர் கேட்டதற்காக, விமலுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடினேன். ஏற்கனவே ‘பொன்னர் சங்கர்’ படத்தில் சினேகாவுடன் சேர்ந்து ஆடினேன். தமிழில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். எனவே, இனி ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன். இப்போது ‘காதலில் விழுந்தேன்’ டைரக்டர் பிரசாத் ஜோடியாக ‘சகுந்தலாவின் காதலன்’, சாந்தனு ஜோடியாக ‘வாய்மை’, மலையாளத்தில் ‘ஆங்கிரி பேபிஸ்’ படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறேன்’’ என்றார்.

சுசீந்திரன் டைரக்ஷனில் விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கும் ‘பாண்டிய நாடு’ படத்தில், விக்ராந்த் ஜோடியாக நடிக்கும் அத்வைதா, தன் பெயரை ‘க்ரித்தி ஷெட்டி’ என்று மாற்றியுள்ளார். ‘சகாக்கள்’ படத்தில் அவர் நடித்தபோது, ஷூட்டிங்கில் இருந்த வெண்ணிற ஆடை மூர்த்தி, நியூமராலஜிப்படி அவரது பெயரை ‘அத்வைதா’ என்று மாற்றினாராம். பிறகு அந்த பெயரில் ‘அழகர்சாமியின் குதிரை’, ‘கொண்டான் கொடுத்தான்’ படங்களில் நடித்திருந்த அவர், தன் பெயரை ரசிகர்கள் உச்சரிக்க சிரமப்படுவதை நேரடியாகப் பார்த்து மனம் புழுங்கினாராம். எனவே, தன் பெயரை ‘க்ரித்தி ஷெட்டி’ என்று மாற்றியுள்ளார். இதுதான் அவரது ஒரிஜினல் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘செவிலி’, பத்திரிகையாளர் முத்து ராமலிங்கன் இயக்கும் ‘சிநேகா வின் காதலர்கள்’, ‘மாங்கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
- தேவராஜ்

சென்றவார ‘வண்ணத்திரை’யில் ‘கன்னித்தாய்’ என்ற தலைப்பில் ஹன்சிகா குறித்து செய்தி வெளியாகியிருந்ததல்லவா? அந்தப் பக்கத்தை ஸ்கேன் செய்து தன் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருக்கிறார் ஹன்சிகா. அத்துடன் ‘என் செயல்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து ‘வண்ணத்திரை’ இதழில் வெளியாகியிருக்கும் செய்தி என்னை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.