யாரிடமாவது ஜொள் விட்டது உண்டா?





தன்ஷிகா என்கிற தைரியலட்சுமியே! வசந்தபாலனால் வடிவமைக்கப்பட்டு, பாலாவால் பட்டை தீட்டப்பட்ட நீங்கள், திடீரென்று காமெடி படத்தில் நடிப்பது ஏன்?
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை.

ஒரேமாதிரி காதலித்து, ஒரேமாதிரி அழுது நடித்து, ஒரே மாதிரி டூயட் பாடிக் கொண்டிருந்தால், உங்களைப் போன்ற ரசிகர்களுக்கு போரடித்து விடும். ஏன், எனக்கே கூட போரடித்து விடும் என்பதால்தான் காமெடிக்கு மாறினேன். சிவா ஜோடியாக நான் நடித்துள்ள ‘யா யா’ படம், முழுநீள காமெடி விருந்தாக அமையும். சந்தானம் பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார்.

நடிக்க வராமல் இருந்தால், என்னவாகி இருப்பீர்கள்?
- கே.சுதா, கும்பகோணம்.

சின்ன வயதிலிருந்தே எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால்தான் கணிதம் படித்தேன். நடிக்க வராமல் இருந்தால், கம்ப்யூட்டர் என்ஜினீயராகி இருப்பேன்.

பள்ளியில் படிக்கும்போது, உங்களை யாராவது ‘சைட்’ அடித்தது உண்டா? நீங்கள் யாரிடமாவது ‘ஜொள்’ விட்டது உண்டா?
- மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம்.

என்னை பலர் ‘சைட்’ அடித்தது உண்டு. காதலிப்பதாக சொல்லி, லவ் லெட்டர் கொடுத்தது உண்டு! அதுபோல், நானும் ‘ஜொள்’ விட்ட அனுபவம் உண்டு!

பாத்ரூமில் குளிக்கும்போது பாடுவீர்களாமே! பிளீஸ், எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்.
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

ஹலோ, இது பத்திரிகை. எதையும் எழுத்து வடிவில்தான் சொல்ல முடியும். எஃப்.எம் அல்லது டி.வியில் நான் நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது கேளுங்கள், பாடுகிறேன், ‘மைக்’கை மறைத்துக்கொண்டு!

வீட்டில் அழுது சாதித்தது என்ன? சிரித்து சாதித்தது என்ன?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

வீட்டிலுள்ள எல்லோரும் இறுக்கமாக அல்லது கோபமாக இருக்கும் நேரங்களில், சிரித்து சிரித்தே என் காரியங்களை சாதித்து விடுவேன். அழுது சாதித்தது ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும்தான். அது, ஐபேட் வாங்கும் விஷயத்தில் நடந்தது.

கோபம் வந்தால், யாரை கடித்துக் குதறுவீர்கள்?
- இஸ்மாயில், அரக்கோணம்.

எளிதில் வராது. ஒருவேளை வந்தால், வீட்டில் இருப்பவர்களை துவம்சம் செய்துவிடுவேன்! அப்பாவும், தங்கையும் அலறியடித்து ஓடுவார்கள். என் கோபத்துக்கு முன்னால் யாரும் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை என்றால், அது புஸ்சென்று அடங்கி விடும்!



உங்களைப் பற்றி கிசுகிசு வந்தால், பதற்றம் அடைவீர்களா? கண்டுகொள்ளாமல் விட்டு விடுவீர்களா?
- ஜி.மகேஷ், வேலூர் - 6.

பொய்ச் செய்தி என்றால், வாய்விட்டுச் சிரிப்பேன். உண்மைத் தகவல் என்றால், ‘அடடே! நானும் சினிமாவில் வளர்ந்து விட்டேனாக்கும்’ என்று, என்னை நானே பாராட்டிக்கொள்வேன்! மோசமான கிசுகிசுவாக இருந்தால், மனசுக்கு ரொம்பவும் சங்கடமாக இருக்கும். என்னைக் கட்டுப்படுத்த முடியாமல், வாய்விட்டு அழுத சம்பவங்களும் உண்டு!

ஒரு பெண்ணுடைய அழகு, அவளுக்கே எதிரியாக மாறுவது எப்போது?
- ஜோசப், நாகர்கோவில்.

வெளியிடங்களுக்கு தனியாகவும், யாருடைய பாதுகாப்பு இல்லாமலும் செல்லும்போது எதிரியாக மாறிவிடும் அபாயம் உண்டு. எனவே, ஒவ்வொரு பெண்ணும் தகுந்த பாதுகாப்புடன் செல்வது மிகவும் நல்லது. இதனால், எதிர்பாராமல் நடக்கும் விபரீதங்களைத் தவிர்க்க முடியும்.

உங்களை பிகினி டிரெஸ்சில் பார்க்க ஆசைப்படுகிறேன். நிறைவேறுமா?
- கண்ணன், வாணியம்பாடி.

இனி அந்த தவறை கனவில் கூட செய்ய மாட்டேன்! ஏற்கனவே ‘மாஞ்சா வேலு’ படத்தில் பிகினி அணிந்து நடித்தேன். அந்த உடை என் உடல் அமைப்புக்கு பொருத்தமாக இல்லை. எனவே, உங்கள் ஆசை நிராசைதான்!

ஹீரோவை கட்டிப்பிடித்து நடிக்கும்போது உணர்ச்சிவசப்படுவீர்களா தன்ஷிகா?
- மந்திரமூர்த்தி, பாண்டிச்சேரி.

ஓவராக பில்டப் செய்ய வேண்டாம், மூர்த்தி. அப்படிச் செய்வது எல்லாமே நடிப்புதான். எந்த உணர்ச்சிக்கும் அங்கே இடம் கிடையாது. ‘அரவான்’ படத்தில் மட்டும் அதிக நெருக்கம் காட்டி நடித்திருப்பேன்! உணர்ச்சிவசப்பட்டால், நடிப்பு வராது.
(இன்னும் சொல்வேன்)
தொகுப்பு: தேவராஜ்