அப்பாவை எதிர்க்கும் மகள்





சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி, ‘போடா போடி’ மூலம் நடிகையாகிவிட் டார். அடுத்து ‘மதகஜ ராஜா’வில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து முடித்திருக்கிறார். ‘ரொம்பவே போல்டான பொண்ணு’ என்று சினிமாவில் இவருக்கு பெயர் இருக்கிறது. அதேபோல் விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் நட்பைத் தாண்டி ஒரு பலமான அன்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

இப்போது பிரச்னை இது இல்லை. நடிகர் சங்கத்துக்கு எதிராக இளம் நடிகர்களை விஷால் திரட்டி வருவதாக பேச்சு அடிபடுகிறதல்லவா? இந்த விஷயத்தில் விஷாலை ஆதரிக்கும் கதாநாயகிகளில் முதலிடத்தில் இருப்பது வரலட்சுமிதானாம். அப்பாவுக்கு எதிராக மகளே போர்க்கொடி உயர்த்தியிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள்.

‘விஸ்வரூபம்’ தொடர்பான பிரச்னையில், ‘கமலுக்கு நடிகர் சங்கம் உதவவில்லை’ என்று தனது சமூக வலைத்தளத்தில் விஷால் குற்றம் சாட்டினார். அதற்கு முதல் ஆளாக கமெண்ட் போட்டவர் வரலட்சுமிதான். ‘விஷால் சொல்வது ரொம்ப கரெக்ட்’ என்றார். அப்போது கிளம்பிய புகை, இப்போது பற்றி எரிவதாகச் சொல்கிறார்கள்.

உண்மை என்ன? விஷாலிடம் கேட்டோம். ‘‘பாண்டு, இப்ப எனக்கு என் படம்தான் முக்கியம். ‘மதகஜ ராஜா’ல உசுரக் கொடுத்து நடிச்சிருக்கேன். அது ரிலீசாகாம முடங்கினப்ப நொந்துட்டேன். பத்து வருட அனுபவம், பணம் எல்லாத்தையும் அதுல போட்டு இப்ப வெளியிடறேன். படம் ரிலீசாகட்டும். அப்புறம் இதபத்தி விரிவா பேசலாம்’’ என்றார்.

அடுத்து வரலட்சுமியைத் தொடர்பு கொண்டோம். ‘‘நடிகர் சங்க மேட்டருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. யார் நல்லது சொன்னாலும் உடனே அதுக்கு லைக்கோ கமெண்டோ போடுவேன். பொதுவா நான் எப்போதுமே நியாயத்தின் பக்கம் நிப்பேன். இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும்’’ என்றார்.
- சினிமா பாண்ட் 007