சஞ்சலப்படும் சார்மி





அதென்னவோ தெரியவில்லை, சார்மி மட்டும் எப்போது தமிழ்ப் படவுலகத்தை நோக்கி வந்தாலும், அதே வேகத்தில் ‘கெட் அவுட்’ சொல்லப்படுகிறது. 11 வருடங்களுக்கு முன் தெலுங்கில் அறிமுகமான அவர், பிறகு சிம்பு ஜோடியாக ‘காதல் அழிவதில்லை’ படத்தில் நடித்தார். டி.ராஜேந்தரின் அறிமுகங்கள் பெரும்பாலும் சோடை போனதில்லை. அடுத்து ‘ஆஹா! எத்தனை அழகு’, ‘காதல் கிசுகிசு’, ‘லாடம்’ ஆகிய படங்களில் நடித்தார். என்ன பயன்? தெலுங்கில்தான் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். இடையிடையே கன்னடம், மலையாளம், இந்தி யிலும் தலையைக் காட்டிவிட்டு வருகிறார். ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவும் அவர் தயங்குவது இல்லை.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்துடன் இணைத்து காதல் கிசுகிசு வந்ததில் இருந்து சார்மிக்கு இறங்குமுகமாகி விட்டது. இருவரும் அந்த வதந்தியை பலமாக மறுத்து வருகிறார்கள். ஏற்கனவே சார்மி, தமிழில் நடித்த ஒரு படத்தின் இயக்குநரை ரகசியமாக காதலித்தார் என்ற கிசுகிசுவும் பரவியது. ஆனால், அது பொய்யாகி விட்டது. அந்த இயக்குநர், தெலுங்குப் படங்கள் இயக்கி, அங்குள்ள ஒரு நடிகையை காதல் திருமணம் செய்துகொண்டார். இப்படி பல்வேறு செய்திகளில் அடிபட்டாலும், சார்மிக்கு ஏதோ ஒரு வகையில் மவுசு இருக்கத்தான் செய்கிறது. காரணம், அவரது அழகும், இளமையும்.

‘இப்ப கடுமையா எக்சர்சைஸ் பண்ணி உடம்பை குறைச்சிருக்கேன். தெலுங்கு, இந்திப் படங்கள்ல நடிக்கிறேன். தமிழ்ல மறுபடியும் எப்ப நடிப்பீங்கன்னு கேட்டா, அதுக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல’ என்று சஞ்சலப்படும் சார்மி, ‘தசாவதாரம்’ படத்தில் கமல் பல வேடங்களில் தோன்றியது போல், ஒரே படத்தில் 10 கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறாராம்.
- தேவராஜ்