சஞ்சனாவுக்கு பிடிக்காத சதிராட்டம்





இந்தியில் சிறு வேடங்களில் நடித்த சஞ்சனா சிங், ‘மறுபடி யும் ஒரு காதல்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். பிறகு ‘ரேனிகுண்டா’, ‘காதல் பாதை’, ‘யாருக்கு தெரியும்?’, ‘கோ’, ‘மயங்கினேன் தயங்கினேன்’ படங்களிலும் நடித்தார். என்றாலும், எந்த எண்ணத்துடன் மும்பையில் இருந்து பிளைட் ஏறினாரோ அந்த எண்ணம் இதுவரை நிறை வேறவில்லை. அதாவது, ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். அதற்காக கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கிறார். ஆனால், சில இயக்குநர்கள், வேண்டுமென்றே அவரை ஒரு பாட்டுக்கு ஆட அழைக்கிறார்களாம். எனவே, இனி யார் கேட்டாலும் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறாராம்.

‘வெயிலோடு விளையாடி’, ‘அமளி துமளி’, ‘ரகளபுரம்’, ‘ரெண்டாவது படம்’, ‘வெற்றிச்செல்வன்’, ‘இரவும் பகலும்’, ‘வெற்றி’, ‘தப்புத்தாளங்கள்’ என கைவசம் பல படங்களை வைத்திருக்கும் சஞ்சனா, நடிப்பு விஷயத்தில் பாலிவுட்டிலுள்ள திறமையான நடிகைகளை இன்ஸ்பிரேஷனாக நினைக்கிறார். தபு, கொங்கணா சென், நந்திதாதாஸ், தீப்தி நாவல், திவ்யா தத்தா, ரூபா கங்குலி, ஸ்மிதா பாட்டீல் போன்றவர்களின் நடிப்பு பற்றி பெருமையாகப் பேசுகிறார்.



தவிர, உடல்நலத்தைப் பேணுவதில் சஞ்சனாவுக்கு நிகராக யாரையும் சொல்ல முடியாது என்கிறார்கள். தினமும் ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும் அவர், யோகா மற்றும் தியானம் செய்வதிலும் அதிக ஈடுபாடு காட்டுவாராம். மும்பை வீட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடுவாராம். இது அவரை ரொம்ப ‘பிரெஷ்’ஷாக வைத்திருக்க உதவுகிறதாம். அழகுக் குறிப்புகளை தனக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கு உதவும் வகையிலும் சொல்கிறாராம்.

கோலிவுட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் அவர், மற்ற மொழி வாய்ப்புகளை புறக்கணிக்கவில்லை என்றாலும், ஹீரோயின் கேரக்டர் அல்லது அதிக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை ஹீரோயின் வேடம் கிடைத்தால் நடிப்பாராம். கிளாமர் குயினாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்துவது அவருக்குப் பிடிக்கவில்லையாம். தமிழில் வெற்றிக்கொடி நாட்ட எண்ணம் கொண்டு, தற்போது தமிழில் தெளிவாகப் பேசவும், படிக்கவும் பயிற்சி பெறுகிறாராம். வந்தாரை வாழவைக்கும் தமிழகம், சஞ்சனாவை கைவிட்டு விடுமா என்ன!
- தேவராஜ்