ஒளிப்பதிவாளர் தயாரிப்பில் எழுத்தாளர் இயக்கும் படம்





வித்தியாசமான கதையுடன் ‘அஃகு’ படத்தை இயக்கிய மாமணி, ‘கானகம்’ என்ற படத்தை தயாரித்து, இயக்குகிறார். ஒரு காட்சி, மூன்று பார்வை என்ற தியரியுடன் உருவாகும் இதில் அறிமுகமாகும் ஹீரோயின் அஞ்சனா, விமானப் பணிப் பெண் வேலையை உதறிவிட்டு நடிக்க வந்துள்ளார். ‘அஃகு’ படத்தில் வெடிகுண்டை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் கேரக்டரில் நடித்த அனுஹாசன், இதில் விஞ்ஞானி வேடத்தில் நடித்துள்ளார். லண்டனில் இருந்து வந்த அவர், இயக்குநரின் மீதுள்ள கரிசனம் காரணமாக, இலவசமாக நடித்துள்ளார். ‘காட்டில் நடக்கும் ஆக்ஷன் கதை. முக்கியமான காட்சிகளுக்கு கிராபிக்ஸ் செய்ய செலவழித்த தொகையில், இன்னொரு படத்தையே தயாரித்து இருக்கலாம்’ என்கிறார் மாமணி.

‘தூள்’, ‘கில்லி’, ‘ஒஸ்தி’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத், இப்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல், புதுமுகம் ஊர்வசி, பிரகாஷ்ராஜ் நடிக்கும் ‘சிங் சாஃப் தி கிரேட்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலை யில், முதல்முறையாக சொந்தப் படம் தயாரிக்கும் எண்ணத்தில், ‘கோபிநாத் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தை தொடங்கியுள்ளார். காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு ஹீரோவாக அறிமுகமாகும் அந்தப் படத்துக்கு ‘தேரடி வீதி திருக்கண்ணபுரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கரண் நடிப்பில் ரிலீசான ‘கந்தா’ படத்தை இயக்கிய பிரபல எழுத்தாளர் பாபு கே.விஸ்வநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.


‘புதுமுகங்கள் தேவை’ படத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்த ராஜேஷ் யாதவ், அடுத்து ‘திலகர்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். புது ஹீரோவுடன் மற்றொரு ஹீரோவாக கிஷோர் நடிக்கிறார். புதியவர் பாலகுமார்.ஜி இயக்குகிறார். கண்ணன் இசையமைக்கிறார். ராஜேஷ் தயாரிக்கிறார். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகிறது.
பிரபல நடன இயக்குநர் எம்.சுந்தரம். அவரது மகன்கள் ராஜுசுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத். மூவரும் நடன இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள். இவர்களில் ராஜுசுந்தரம், அஜீத் நடித்த ‘ஏகன்’ படத்தை இயக்கினார். பிரபுதேவா தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்கள் இயக்கியுள்ளார். பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக இருக்கிறார். நால்வரும் இணைந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் ‘எம்.எஸ்.எம் நடனப் பள்ளி’ தொடங்கியுள்ளனர். லண்டனில் ‘மாஸ்டர் ஆஃப் கோரியோகிராபி’ முடித்துள்ள நாகேந்திர பிரசாத், புதிதாக வரும் திறமையாளர்களுக்கு நடனப் பயிற்சி அளிக்கிறார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில், ஹன்சிகா ஜோடியாக நடிக்கிறார். ஹன்சிகாவுக்கு தெலுங்கு ‘கோல்மால் 3’ தவிர, தமிழில் சூர்யாவுடன் ‘சிங்கம் 2’, கார்த்தியுடன் ‘பிரியாணி’, சிம்புவுடன் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’, புதுமுகம் சித்தார்த்துடன் ‘வாலிபன்’ ஆகிய படங்கள் இருக்கின்றன. தனக்கு மார்க்கெட் இருப்பதை அறிந்த அவர், சம்பளத்தை ஒரு கோடி ரூபாய்க்கு உயர்த்தியதாக சொல்கிறார்கள்.


பாரதிராஜா இயக்கும் ‘அன்னக்கொடி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சுபிக்ஷா, அடுத்து விக்ரமன் இயக்கும் ‘நினைத்தது யாரோ’ படத்தில் நிமிஷா, ‘பரதேசி’ ரித்விகா ஆகியோருடன் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். தவிர, மலையாளத்தில் ‘ஒலிப்போரு’, கன்னடத்தில் ‘மனம் கொத்திப் பறவை’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். கதைக்கு அவசியம் தேவைப்பட்டால், கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதாக சொல்லும் சுபிக்ஷா, சென்னையில் வசிக்கிறார்.

விதார்த் ஜோடியாக ‘வெண்மேகம்’ படத்தில் அறிமுகமாகும் சரண்யா நாயர், கோலிவுட்டில் சரண்யா என்ற பெயரில் பல நடிகைகள் இருப்பதால், தன் பெயரை ‘இஷாரா’ என்று மாற்றியுள்ளார். தவிர, செந்தில் ஜோடியாக ‘பப்பாளி’ படத்தில் நடிக்கும் இவர், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் எந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பாராம். புடவையில் கூட கிளாமர் காட்ட முடியும் என்பது அவரது நம்பிக்கை. ‘வெண்மேகம்’ படத்தில் புடவை அணிந்து, தன் முதுகு அழகை பளிச்சென்று காட்டி நடித்து ‘கிக்’ ஏற்றியுள்ளாராம்.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில், அஜீத்துக்கு தம்பியாக வரும் விதார்த் ஜோடியாக நடிக்கிறார் மனோசித்ரா. ஏற்கனவே அவர் நடித்த ‘தாண்டவக்கோனே’, ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’ படங்கள் எப்போது ரிலீசாகும் என்று தெரியவில்லை. எனினும், மனோசித்ராவின் கைவசம் மலையாள ‘பியானிஸ்ட்’, அதே படம் தமிழில் ‘ஒரு வானவில் போலே’ இருக்கின்றன. இதையடுத்து, சிவரஞ்சனியின் கணவர் ஸ்ரீகாந்த் ஜோடியாக ‘மல்லிகாடி மேரேஜ் பீரோ’ என்ற தெலுங்குப் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திரபோஸின் திருப்பதி பிரதர்ஸ் ஒரே நேரத்தில் ஏழு படங்கள் தயாரிக்கிறது. கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் ஒரு படம். ஆகஸ்டில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா ஜோடி சேரும் மற்றொரு படம். சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படம். ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘இவன் வேற மாதிரி’. ரிலீசான ‘ரேணிகுண்டா’, ‘18 வயசு’ படங்களின் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் டைரக்ஷனில், லிங்குசாமியின் உறவினர் மகன் வினோத் ஹீரோவாக அறிமுகமாகும் புதுப்படம். சற்குணம் இயக்கத்தில் விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடிக்கும் ‘மஞ்சப் பை’. தவிர, சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ‘அட்ட கத்தி’ தினேஷ் நடிக்கும் ‘சொந்த ஊரு’ ஆகிய படங்களை தயாரிக்கிறார் லிங்குசாமி.