“வேலை பறிபோன சமயம் இனி என்ன செய்வது என்று நான் தத்தளித்த நிலையில்தான் என்னுடைய வாழ்க்கையில் முகவை ராஜமாணிக்கமும், முன்னாள் எம்.எல்.ஏ கோதண்டராமனும் திருப்பு முனையை ஏற்படுத்தினார்கள். ஆம், இவர்கள் இருவரும் என்னை இயக்குநர் முக்தா சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்...’’ என்று நிறுத்திய ஜூடோ ரத்னம், தொடர்ந்தார்.
‘‘அப்போது முக்தா சினிவாசன் ‘தாமரைக்குளம்’ என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் எனக்கு ஒரு சிறிய வேடம் கிடைத்தது. அந்தப் படத்தில் எம்.ஆர்.ராதா வில்லன். அவருடைய அடியாளாக நான் நடித்தேன். அந்தப் படத்தில் நான் ஒரு நடிகனாக இருந்தாலும் படப்பிடிப்பின் இடைவேளை நேரத்தில் நான் கற்றுக் கொண்ட சிலம்பம், பாக்ஸிங் என என்னுடைய வித்தைகளைக் காண்பிப்பேன். என்னுடைய வித்தைகள் முக்தா சீனிவாசனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அந்த ஆச்சர்யம் எனக்கு அந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியை எடுக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. நானும் மகிழ்ச்சியுடன் அந்தப் படத்துக்காக ஒரு சண்டைக்காட்சியை எடுத்துக் கொடுத்தேன். அதுதான் சினிமாவில் நான் அமைத்த முதல் சண்டைக் காட்சி. என்னுடைய திறமையைப் பார்த்துப் பாரட்டிய முக்தா சீனிவாசன் என்னை பிரபல தெலுங்கு இயக்குநர் விட்டலாச்சார்யாவிடம் அறிமுகம் செய்துவைத்தார்.
அந்த அறிமுகம் மிகவும் பயனளித்தது. தெலுங்கு நடிகர் காந்தாராவ் உட்பட பல பிரபலங்களுக்கு டூப் போட ஆரம்பித்தேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு சண்டைக் காட்சிக்கு பத்து அல்லது பதினைந்து ரூபாய்தான் கிடைக்கும். இந்நிலையில் எனக்கு சம்பளம் இவ்வளவு வேண்டும் என்று கேட்கமாட்டேன். எனக்குக் கிடைத்த வாய்ப்பை எந்தளவுக்கு சிறப்பாக பயன்படுத்த முடியும் என்றுதான் யோசிப்பேன். சண்டைக் காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மலை உச்சியில் இருந்து குதிக்க வேண்டிய காட்சிகளிலும் துணிச்சலாக குதிப்பேன். என்னுடைய உழைப்புக்கு பலனாக விட்டலாச்சார்யா என்னைப் பாராட்டி 150 ரூபாய் சம்பளம் கொடுத்தார்.
அதன் பிறகு ஸ்டண்ட் சோமுவின் குழுவில் சேர்ந்து ஏராளமான படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தேன். சிவய்யா, சாமிநாதன் குழுவிலும் ஸ்டண்ட் நடிகராக நடித்தேன். ஒரு கட்டத்தில் ஸ்டண்ட் நடிகராக நடிப்பதை குறைத்துக் கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் வாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக சைக்கிளில் படையெடுத்தேன். ஆனால், வாய்ப்புதான் கிடைக்கவில்லை.
பிறகு சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திடம் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனம் தயாரித்த ‘கவிதா’ படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு ‘டூப்’பாக நடித்தேன். மலை மீது படமாக்கப்பட்ட அந்தக் காட்சியில் நம்பியாருக்கு ‘டூப்’பாக நடித்த நடிகர் என்னை பாய்ந்து தள்ளிவிட்டார். தலையில் மிகப் பெரிய சேதாரம். மூன்று மாதம் நினைவில்லாமல் படுக்கையில் இருந்தேன். பிறகு மீண்டும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில் மனோகருக்கு ‘டூப்’பாக நடித்தபோது மாடியில் இருந்து வீழ்ந்ததால் பலமாக அடிபட்டது. மீண்டும் மூன்று மாதம் நினைவு இல்லாமல் படுக்கையில் இருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு ஆதரவுக் கரம் நீட்டியவர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்தான். ஏனெனில் அவருடைய தயாரிப்பில்தான் எனக்கு தொடர்ந்து வேலை கிடைத்தது. அப்படி கிடைத்த மறக்க முடியாத பட வாய்ப்பு ‘கொஞ்சும் குமரி’.
மனோகர், மனோரமா நடித்த ‘கொஞ்சும் குமரி’ படத்தில் மனோரமாவின் சகோதரனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னுடைய துணிச்சலான நடிப்பைப் பார்த்து வியந்த டி.ஆர்.சுந்தரம், என்னை அந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை செய்ய வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படம்தான் திரையுலகில் ஸ்டண்ட் டைரக்டருக்கான அடையாளத்தை எனக்குக் கொடுத்தது. அந்தப் படத்தில் ஒரு சீன், இரண்டு சீன்களில் நடித்தவர்களுக்குக் கூட நான்தான் ‘டூப்’ ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தேன். ‘நடந்து காட்டு... நடந்து காட்டு...’ என்கிற பாடலுக்கு மனோகருக்கு பதிலாக நான்தான் ‘டூப்’ ஆர்டிஸ்ட்டாக நடித்தேன். அந்தப் படமும் பெரியளவில் வெற்றி அடைந்தது. டி.ஆர்.சுந்தரம், தன்னைச் சந்திப்ப வர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகச் சொல்லி மகிழ்வார்.
ஆனால், அந்த மகிழ்ச்சி ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஏனெனில் அந்தப் பட சமயத்தில்தான் டி.ஆர்.சுந்தரம் இயற்கை எய்தினார். அவரது மரணத்துக்குப் பிறகு பிழைப்புக்காக குடியாத்தத்தில் ஒரு ஹோட்டல் தொடங்கினேன். ஹோட்டல் தொழில் குடும்பம் நடத்த உதவியாக இருந்தாலும் மனம் எல்லாம் சினிமாவையே சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு நாள் என் காதில் தேன் போல் ஒரு செய்தி பாய்ந்தது. அந்தச் செய்தி...டி.ஆர்.சுந்தரம் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் டி.ஆர்.ராமசுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார் என்பதுதான்.
இவர் பொறுப்புக்கு வந்ததும் ஹாலிவுட் படங்களைப் போல் தமிழில் ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரிக்க ஆர்வம் காண்பித்தார். அப்படி உருவான படங்கள்தான் ‘வல்லவன் ஒருவன்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘இரு வல்லவர்கள்’, ‘எதிரிகள் ஜாக்கிரதை’. ராமசுந்தரம் தயாரித்த அந்தப் படங்களில் ஜெய்சங்கர்தான் ஹீரோ. மனோகர் வில்லன். அந்தப் படங்களில் சண்டைக் காட்சிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். காரணம், அந்த படங்களில்தான் ஜூடோ கலையைப் பயன்படுத்தினேன். அந்த காலத்தில் அந்த ஜூடோ சண்டைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்த நேரத்தில்தான் மக்கள் திலகம் எம்ஜிஆரைச் சந்தித்தேன்...’’ என்ற ஜூடோ ரத்னம், அது குறித்து நெகிழ்ச்சியுடன் சொல்ல ஆரம்பித்தார். அது அடுத்த வாரம்...
- சுரேஷ் ராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்