ஒரே படத்தில் நடிக்கும்போது, ஹீரோ தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயினைப் புகழ்வார். அதை மீடியாவிலும் பரப்புவார். அதுபோல், ஹீரோயினும் ஹீரோவைப் பற்றி ஆஹா... ஓஹோ என்று அளப்பார். அதுவும் மீடியாவில் வரும். ஹீரோ அடுத்த படத்துக்கும், ஹீரோயின் வேறொரு ஹீரோவுடனும் நடிக்கச் சென்றால், அந்த ரயில் சிநேகம் ‘கட்’ ஆகிவிடும். இப்படித்தான் ‘எதிர்ஸ்விம்மிங்’ படத்தில் நடித்தபோது ‘கார்த்திகேய’ நடிகரும், ‘ஆனந்த’மான ஹீரோயினும் ஒருவரை ஒருவர் புகழ்ந்தார்கள். பேட்டி கொடுத்தார்கள். அவர்களுடடைய நட்பு எங்கு போய் முடியுமோ என்று சினிமா ஆர்வலர்கள் காத்திருந்த நேரத்தில், அம்மணி வெவ்வேறு இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். நடிகரும் ‘ஹன்ஸ்’ உட்பட சில இளம் ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி விட்டார். இந்நிலையில், எந்த மீடியாவிலும் நடிகர் அந்த நடிகை குறித்தும், நடிகை அந்த நடிகரைப் பற்றியும் பேசுவதில்லை!
சினிமா படத்துக்கு என்ன தலைப்பு வைத்தாலும், அதை எதிர்ப்பதற்காகவே சிலர் காத்திருக்கிறார்கள். இது எங்களை குறை கூறுகிறது என்று சொல்லியே, தலைப்பை நாசப்படுத்தி விடுகிறார்கள். இதனால்தான் முன்னணி நடிகர்கள் நடிக்கும் சில படங்களுக்கு முன்கூட்டியே டைட்டில் வைக்காமல், எல்லா பணிகளும் முடிந்த பிறகு தலைப்பை அறிவிக்கலாம் என்று இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் முடிவு செய்துவிட்டனர். முதலாவதாக ‘தல’ நடிக்கும் இரு படங்களுக்கும் தலைப்பு முடிவாகவில்லை என்றே இயக்குநர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. உண்மை அதுவல்ல. ‘வர்த்தன்’ இயக்கும் படத்திலும், ‘சீட்டா’ பட இயக்குநரின் புதுப்படத்திலும் நடிக்கும் ‘தல’, அந்தப் படங்கள் ரிலீசாகும்போது டைட்டிலை அறிவிக்கலாம் என்று சொல்லிவிட்டாராம். முதலிலேயே சொன்னால், எந்த தரப்பில் இருந்து எப்படிப்பட்ட எதிர்ப்பு வருமோ என்று, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறாராம்.
மல்லுவுட்டின் முன்னணி ஹீரோ ‘ப்லீதி’ மனைவியான ‘வாரியர்’ கூட முன்னாள் கதாநாயகிதான். இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். வாரிசும் இருக்கிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கேரளாவில் தனியாகப் பிரிந்து வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதை இருவருமே மறுத்தாலும், அவர்களுக்கு இடையே பனிப்போர் நிலவி வருவதை மலையாளப் படவுலகினர் உறுதி செய்துள்ளனர். அம்மணி நடத்திய நடன நிகழ்ச்சி, அங்குள்ள சில பிரசித்தி பெற்ற கோயில்களில் நடந்தபோது, அவரை வாழ்த்துவதற்கு ‘ப்லீதி’ வரவில்லையாம். அதுபோல், நடிகர் கேரளாவில் ‘புட்டு’ கடை திறந்தபோது, அம்மணி வராமல் புறக்கணித்து விட்டாராம். இதை வைத்து, அவர்கள் இருவரும் டைவர்ஸ் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவியுள்ளது. காவியமான ‘மாதவ’ நடிகையின் பக்கம் நடிகரின் கவனம் திசை திரும்பி இருப்பதால்தான் நட்சத்திர தம்பதிகளுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக மல்லுவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.
ஒவ்வொரு படத்திலும் ‘ஐஸ்’ நடிகைக்கு சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறார் என்று, ‘சேதுபதி’ ஹீரோவுக்கு புதிய தலைவலியை உண்டாக்கி இருக்கிறது ஒரு குரூப். இதை வன்மையாகக் கண்டித்துள்ளார் ஹீரோ. ‘ரெண்டு படத்துல ஜோடி சேர்ந்து நடிச்சிட்டா, உடனே நான் அவருக்கு சிபாரிசு பண்றதா சொல்றதா? யாரை ஹீரோயினா நடிக்க வைக்கணும்னு முடிவு பண்றது நான் இல்ல. அதை அந்தந்த படத்தோட டைரக்டர்தான் பார்த்துக்கிறாங்க’ என்று சொல்லும் அவர், ஒரு படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகையை, அடுத்த படத்தில் ஜோடி சேர்க்கக்கூடாது என்ற விஷயத்தில் கவனமாக இருக்கிறாராம். ஹீரோவுக்கு மனைவி மற்றும் வாரிசுகள் இருக்கின்றனர். இந்நிலையில், திட்டமிட்டு தன்னைப் பற்றி சிலர் வதந்தி பரப்பி வருவதாக வருத்தப்படுகிறார்.
‘அய்யோ பாவம்’ என்ற கதையாகி விட்டது, ‘ஜே ஜே’ அறிமுக நடிகையின் நிலை. பல மொழிகளில் கவர்ச்சியுடன் கூடிய திறமையைக் காட்டி நடித்தும் பெரிய பலன் இல்லை. பாலிவுட்டில் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்த ‘வர்மா’ இயக்குநரும் கழற்றி விட்டுவிட்டார். இந்நிலையில், மீண்டும் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிய நடிகைக்கு அது எட்டாத கனி என்று புரிந்துவிட்டதாம். எனவே, குத்துப்பாட்டுக்கு தாறுமாறாக ஆட்டம் போடுவது என்று உறுதியான முடிவு செய்துவிட்டாராம். சமீபத்தில் இளம் ‘பவர்’ ஹீரோவுடன் ‘பூர்ண’ நடிகை ஜோடி சேர்ந்துள்ள ‘பிலிம் பேசும்’ படத்தில், அரைகுறை உடையுடன் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார்.
கோலிவுட்டில் இழந்த இடத்தை, கன்னட டப்பிங் படமான ‘மேடு’ ரிலீசாகி நிவர்த்தி செய்துவிடும் என்று மலையளவு நம்பிக்கையுடன் காத்திருந்த ‘பூஜை’ நடிகையின் ஆசையில் மண் விழுந்து விட்டது. ஆமாம், படம் பப்படமாகி விட்டது. சாண்டல்வுட், டோலிவுட் ஏரியாக்களில் கல்லா கட்டிய படம், கோலிவுட்டில் குப்புறப் படுத்து விட்டது. இப்படம் வென்றால், மறு படியும் தமிழில் தனது ஆட்டத்தை தொடரலாம் என்று முடிவு செய்திருந்த நடிகை, கர்நாடக அரசியலைத் தொடர்ந்து, தமிழ்ப் படவுலகில் மற்றொரு நட்சத்திரமாக ஜொலிக்கலாம் என்ற விஷயத்திலும் தோல்வியடைந்து விட்டார். இனி தனக்கு அரசியலும் வேண்டாம், கோலிவுட் இயக்குநர்களின் கரிசனமும் வேண்டாம் என்று முடிவு செய்துள்ள அவர், சாண்டல்வுட்டில் அதிக கவனம் செலுத்தி, இழந்த இடத்தைப் பிடிக்க முடிவு செய்துள்ளாராம்.
தன்னைக் காதலித்த கேரள தொழிலதிபரான ‘நேயலு’வுடன் ரகசிய வாழ்க்கை நடத்தி வந்த ‘அனன்ய’ நடிகை, திடீரென்று அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக மல்லுவுட்டில் செய்தி பரவியுள்ளது. இதுகுறித்து அம்மணியிடம் விசாரிக்க போன் செய்தால், ‘உங்கள் நம்பரை இன்னொருமுறை சரி பார்க்கவும்’ என்ற தகவல் வருகிறதாம். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்து வரும் அம்மணியை நேரில் போய் சந்தித்த சிலர், இந்த விஷயத்தைப் பேச முயற்சிப்பதற்கு முன்பே கையைத் தூக்கி, ‘ஸாரி, என் பெர்சனல் லைஃப் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை. யார், என்ன வதந்தி பரப்பினாலும் எனக்கு கவலை இல்லை’ என்று பேச்சை முடித்துக் கொள்கிறாராம்.
‘நடிக்க வாய்ப்பு குறைந்தால் என்ன செய்வது?’ என்று சில முன்னாள் கதாநாயகிகள் தீவிரமாக யோசித்ததன் விளைவு, அவர்கள் இப்போது படம் இயக்க வந்து விட்டார்கள். அதில் இரு கதாநாயகிகள் தங்கள் படத்தையும் முடித்து விட்டார்கள். மறைந்த வில்லன் நடிகரின் மனைவியான ‘ரோ’வும், ‘அந்த செவன் டேஸ்’ நாயகியும் படத்தை இயக்கி முடித்து விட்டனர். குறுகிய காலத்தில் அவர்கள் படத்தை இயக்கியதால், செலவு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாம். இதனால், படம் ரிலீசான பிறகு மிகப் பெரிய லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதையறிந்த ‘ஆட்டுக்கார அலமேலு’ ஹீரோயின், ஏற்கனவே சில படங்களை இயக்கிய அனுபவத்தை வைத்து, இப்போது மலையாளத்தில் ரிலீசாகி வெற்றிபெற்ற ‘கோட்டயம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆயத்தமாகி விட்டார்
தனது டுவிட்டர் இணைய தளத்தில், தனக்குப் பிடித்த சிலரைப் பற்றி, ‘ஆஹா... ஓஹோ... பேஷ் பேஷ்... சூப்பர்’ என்று கமெண்ட் போட்டு, அவர்களது போட்டோக்களையும் இடம்பெறச் செய்துள்ளார் ‘பால்’ நடிகை. மேலும், வெளிநாடு சென்றாலும், வெளியூர் படப்பிடிப்புகளுக்குச் சென்றாலும், அந்த தளத்தில் எல்லா தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்துவிடுகிறார். அதைப் பார்க்கும் சில நபர்கள், நடிகையை நேரில் சந்தித்துப் பேசியதைப் போல், தங்கள் மீடியாவில் கதையளக்கிறார்கள். இதை நடிகையின் தோழி ஒருவர் எடுத்துச் சொல்ல, ‘அட... இது நல்ல ஐடியாவா இருக்கே. இனிமே நான் எந்த ரிப்போர்ட்டர் கிட்டேயும் பேச வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன். எனக்கு என்னென்ன விஷயம் சொல்லணும்னு தோணுதோ, அதையெல்லாம் என் அக்கவுண்ட் மூலம் சொல்லிடறேன்’ என்று, அதில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளாராம்.
தமிழில் சுத்தமாக வாய்ப்பு கிடைக்காத நிலையில், ‘ஸ்ரேய’ நடிகைக்கு தெலுங்கில் நடித்த ஒரு படமும், கன்னடத்தில் நடித்த ஒரு படமும் தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. இது அவருக்கு ஓரளவு ஆறுதல் அளித்துள்ளதாம். தன்னை ஏன் எல்லா ஹீரோக்களும் புறக்கணித்து விட்டார்கள் என்ற விஷயம் புரியாமல், மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வருவேன் என்று தன் தோழிகளிடம் கதை விடுகிறாராம். இந்நிலையில், தெலுங்கில் உருவாகும் மூன்று தலைமுறை கதை கொண்ட ஒரு படத்தில், ‘ரட்சகன்’ ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். இதில் அந்த ஹீரோவின் முதல் மனைவியின் மகனும் நடிக்கிறார். அவருக்கு ‘சமந்த’ நடிகையை ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தன்னை மூத்த நடிகருக்கு ஜோடியாக்கி விட்டதாக நினைத்து புலம்புகிறாராம் நடிகை.
(படத்தில் இருக்கும் நடிகைகள் மதுரிமா, காவ்யா சிங், மயூரி, நிஹரிகா ஆகியோருக்கும் இந்தச் செய்திகளுக்கும் தொடர்பில்லை)
- மாயன்