‘போராளி’ படத்தில் பேச்சுலர் குடிகாரர் ‘டக்கர்’ வேடத்தில் நடித்தவர் திலீபன். இவருடைய நடிப்பை சசிகுமார், ஆர்.கண்ணன், சுசீந்திரன், பாண்டிராஜ், கரு.பழனியப்பன் உள்பட பலரும் பாராட்டினார்களாம். உதவி இயக்குனரான இவருக்கு சொந்த ஊர் கோயமுத்தூர். டைரக்டராக வேண்டும் என்ற கனவோடு வந்த இவருக்கு இயக்குனர் விக்ரமன் டெஸ்ட் வைத்துள்ளார். டெஸ்டில் வெற்றி பெற்ற இவருக்கு ‘வானத்தைப் போல’ படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. சமுத்திரக்கனியிடம் ‘நெறஞ்ச மனசு’, கே.பாலசந்தரிடம் ‘பொய்’ சுசீந்திரனுடன் ‘ராஜபாட்டை’ படங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘‘‘போராளி’ படத்தில் போதையில் முத்தம் கொடுக்கும் அந்த கேரக்டர் எல்லோராலும் பாராட்டப்படுகிறது என்றால் அதற்கு முழு காரணம் சமுத்திரக்கனிதான். . அடுத்து, சமுத்திரக்கனி டைரக்ஷனிலும் ‘ஆடுபுலி’ விஜயபிரகாஷ் டைரக்ஷனில் நகைச்சுவை கலந்த வேடத்தில் நடிக்கவுள்ளேன்’’ என்று சொல்லும் திலீபனுக்கு நவரசத்தையும் வெளிப்படுத்தும் ரகுவரன் தான் ரோல்மாடலாம்.
மலை வாழ் மக்கள் வாழும் வாச்சாத்தியில் நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாகக் கொண்டு குமாரி டாக்கீஸ் ரெத்னா பிலிம்ஸ் தயாரிக்கும் படம்தான் ‘வாச்சாத்தி’. கதையின் நாயகனாக ரெத்னா ரமேஷ் நடித்துள்ளார். நாயகியாக தர்ஷணா நடித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை சிதைக்காமல் அந்த கால கட்டத்தில் இருந்த வீடுகள், குதிரை வண்டிகளை பயன்படுத்தி படம்பிடித்துள்ளோம். கிராம மக்களுக்காக குரல் கொடுத்த டி.எஸ்.பி.ஜெகநாதன், மலை வாழ் மக்கள் சங்கத்தலைவர் சண்முகத்தையும் நடிக்க வைத்துள்ளோம். வனப்பகுதியில் எங்களுக்கு இருந்த தடைகளையும் அச்சத்தையும் போக்கி படமாக்கினோம்’’ என்கிறார் இயக்குனர் ரவிதம்பி.
சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘தங்கம்’. இந்தத் தொடரில் நடிக்க ‘சின்தால் சரும பாதுகாப்பு சீசன்-2’ என்ற மகளிருக்கான போட்டியை அறிவித்துள்ளார்கள். சிறந்த புது முகத்தை இயக்குனர் டி.பி.கஜேந்திரன், காவேரி தேர்வு செய்யவுள்ளார்கள். ‘‘வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு ‘தங்கம்’ தொடரில் ரம்யா கிருஷ்ணனுடன் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும்“ என்கிறார் ஒருங்கிணைப்பாளர் விட்டல் நாராயணன்.