ஒழுக்கமான ஒரு மாணவனின் வாழ்க்கை ஒழுக்கமில்லாத போலீஸால் எப்படி சீரழிகிறது என்பதை காட்சிக்கு காட்சி திகிலுடன் சொல்லும்படம்.
கல்லூரி மாணவரான அருள்நிதி, தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருக்கும் நிலையில் தேவையில்லாத ஒரு பிரச்னையில் போலீஸ் அருள்நிதியின் வாழ்க்கையில் நுழைகிறது. அத்துடன் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று முத்திரையையும் மருத்து வர்களின் துணையோடு குத்துகிறது. தன் மீது விழுந்த பழியிலிருந்து தப்பிக்க அருள்நிதி எடுக்கும் முயற்சி வெற்றியா தோல்வியா என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லி யுள்ளார்கள்.
மாணவனாக வரும் அருள்நிதி நடிப்பு குருவாக மாறி நடிப்பில் அசத்தி யுள்ளார். அம்மாவிடம் செல்லமாக கொஞ்சும் போதும்சரி, காதலியிடம் கண்களால் காதல் பேசும் போதும் சரி நடிப்பில் மின்னுகிறார்.
இனியாவுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் மனதில் தங்குகிறார். கர்ப்பிணி போலீஸ் கேரக்டரில் வாழ்ந்து காட்டியுள்ளார் உமா ரியாஸ்கான். போலீஸாக வரும் ஜான் விஜய், பாலகிருஷ்ணன், கிருஷ்ண மூர்த்தியின் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு மிரட்டல் ரகம். மகேஷ் முத்து சாமியின் ஒளிப்பதிவு, தமனின் இசை, ராஜா முகமதுவின் எடிட்டிங் படத்துக்குப் பலம் சேர்க்கிறது.
நேர்த்தியான முறையில் கதை சொல்லி ஜெயிக்கும் மிஷ்கின், வெற்றிமாறன் வரிசையில் அறிமுக இயக்குனர் சாந்தகுமாருக்கும் முக்கிய இடத்தை கொடுக்கலாம்.