‘‘அப்பா தியாகராஜனுக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்த படம் ‘மம்பட்டியான்’. அந்த கதையில் மீண்டும் அப்பா டைரக்ஷனில் நடிப்பது பெருமையாக உள்ளது’’ என்கிறார் பிரஷாந்த். அவரிடம் லஷ்மி சாந்தி மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்துள்ள ‘மம்பட்டியான்’ பட அனுபவத்தை கேட்டோம்.
‘‘இது ஆக்ஷன், காதல், காமெடி என்று எல்லாம் கலந்த ஜனரஞ்சகமான படமாக இருக்கும்.
தொடர்ந்து ஒரு மனிதனை அடிக்கும் போது அவன் பொங்கி எழுவான். அதுபோல ஒரு பவர்ஃபுல் ரோலில் மம்பட்டியான் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் ‘மாடர்ன் டே ராபின்ஹுட்’ என்று சொல்லலாம். நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். ‘தேசிய விருது’ நடிகையான அவர் சரிதா நடித்த ரோலில் கச்சிதமாக நடித்துள்ளார்.
போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ், நாட்டமையாக வடிவேலு, நாட்டுப்புற நடன கலைஞராக முமைத்கான், கோட்டா சீனிவாசராவ், விஜயகுமார், ரியாஸ்கான், மனோபாலா என்று காட்சிக்கு ஒரு நட்சத்திரம் எனுமளவுக்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் உண்டு. அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் என்று புதுப்புது இடங்களை தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தினோம்.
பாஸ்ட் பீட், காதல், மெலோடி என்று ஒவ்வொரு பாடல்களையும் தனி ஸ்டைலில் உருவாக்கியிருப்பதுடன் பின்னணி இசையிலும் மிக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் தமன்.
‘பொன்னர் சங்கர்’ படத்துக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார், எடிட்டர் டான் மேக்ஸ் இதிலும் இணைந்துள்ளார்கள். இந்தப்படம் பழைய ‘மம்பட்டியான்’ படம் பார்த்தவர்களுக்கு புதுமையாகவும் இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ப ட்ரெண்டியாகவும் இருக்கும்’’ என்கிறார் பிரஷாந்த்.
சுரேஷ்ஜி