பேப்பர் பையனுக்கும் பணக்காரப் பொண்ணுக்கும் லவ்வு!



‘‘எங்கள் ஊரில் நடந்த சினிமா படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துதான் இயக்குநரானேன்’’ என்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீதர் கோவிந்தராஜ். படத்தின் பெயர் ‘பேப்பர் பாய்’. இவர் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டனிடம் சினிமா பயின்றவர். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து  கொரோனாவுக்கு அடுத்த ஷெட்யூலுக்கு தயாராக இருந்த இயக்குநர் ஸ்ரீதர் கோவிந்தராஜிடம் பேசினோம்.

“முதல் படத்தையே ரீ-மேக்காக எடுக்க காரணம்?”

“இந்தப் படம் இசையமைப்பாளர் அருணகிரி மூலம் கிடைத்தது. அவர்தான் தயாரிப்பாளர் பழனிராஜன் சாரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த சமயத்தில் நான் ஒரு கதை பண்ணி வைத்திருந்தேன். அது அருணகிரி சாருக்கு தெரியும்.
ஆனால் பழனி ராஜன் சாரிடம் என்னிடம் இருக்கும் கதை உங்கள் மகனுக்கு பொருத்தமாக இருக்காது என்றதுடன் வேறு ஒரு கதை சொல்கிறேன் என்றேன். என்னுடைய இந்த வெளிப்படையான பேச்சு அவருக்கு பிடித்திருந்ததால் நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்றார். அதன் பிறகு தெலுங்கில் வெற்றி பெற்ற ‘பேப்பர் பாய்’ கதை உங்கள் மகன்  சுவாதிஷ் ராஜா நடிக்க பொருத்தமாக இருக்கும் என்று சொன்னேன். அப்படிதான் இந்தப் படம் உருவாகியது.

மற்றபடி ரீ-மேக் படத்தை எந்தக் கட்டத்திலும் குறைவாக மதிப்பிட முடியாது. நேரடி படமாக இருந்தாலும் ரீ- மேக் படமாக இருந்தாலும் அது இயக்குநரின் படமாகதான் வெளியே வரும். அந்தவகையில் படத்தை இயக்கும் இயக்குநர் மிகுந்த கவனத்துடன் தான் இருப்பார். அதுமட்டுமல்ல, ரீ-மேக் படங்கள் கோலிவுட்டுக்கு புதுசு இல்லை. பிரபல இயக்குநர்கள் நிறையப் பேர் ரீ-மேக் பண்ணியிருக்கிறார்கள். மற்றபடி, ரீ-மேக் பண்ணுபவர்களுக்கு கதை பண்ணத்தெரியவில்லை என்று அர்த்தம் அல்ல.”

“என்ன மாதிரி கதை?”

“அழகான காதல் கதை. காதலால் உயர்தர குடும்பமும் சாதாரண குடும்பமும் எப்படி பாதிப்படைகிறது என்பதுதான் படத்தோட லைன். தெலுங்குப் படத்தோட கருவை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழுக்கு ஏற்ற மாதிரி முழுக் கதையையும் மாற்றியுள்ளேன். சென்னை கோட்டூர்புரம் சற்று வித்தியாசமான வாழ்விடப் பகுதி. அதன் ஒரு பகுதியில் அடித்தட்டு மக்களும் அடுத்த பகுதியில் மிகப் பெரிய செல்வந்தர்களும் வசிக்கிறார்கள். இருவேறு கலாச்சாரங்களை உடைய அவர்களுக்குள் இருக்கும் ரிலேஷன்ஷிப்பையும் படத்தில் சொல்லியிருக்கிறேன்.

தினமும் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனுக்கும் கோடீஸ்வர நாயகிக்கும் காதல் பிறக்கிறது. அதனால் அவர்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வருகிறது. அதை மென்மையாகச் சொல்லியுள்ளேன்.இது வணிகப் படமாக இருந்தாலும் அழகான காதல் இருக்கும். அந்தவகையில் இந்தப் படத்தில் சொல்லப்படும் காதலுக்காகவே இந்தப் படம் பேசப்படும்.”

 “ஹீரோ?”

“சுவாதிஷ் ராஜா. ஆர்க்கிடெக் படித்தவர். சினிமா மீதுள்ள காதலால் நடிக்க வந்துள்ளார். முதல் படமாக இருந்தாலும் தேர்ந்த நடிகராகதான் என்னிடம் வந்தார். படப்பிடிப்புக்கு முன்பாக சீன் பேப்பரை வாங்கி ரிகர்சல் பண்ணிவிட்டுதான் வருவார். ஒருநாள் டே அண்ட் நைட் ஷூட் நடந்தது. அது எமோஷ்னல் காட்சி.

சுவாதிஷ் ராஜா கிளிசரின் இல்லாமல் அழுகிறார். நான் கட் சொன்னதும் யூனிட்டில் இருந்த அனைவரும் கைத்தட்டி பாராட்டினார்கள். நான் எவ்வளோவோ படங்களில் வேலை செய்துள்ளேன். ஒரு புதுமுக ஹீரோ அப்படி நடிப்பது சாத்தியமற்றது. அதுமட்டுமல்ல, யூனிட்டில் இருப்பவர்கள் எல்லாரிடமும் சகஜமாக பழகுவார்கள். என்னிடம் ஒரு இயக்குநராக பழகாமல் ஒரு சகோதரன் போல்தான் பழகுவார்.”

“ஹீரோயின்?”

“யாமினி பாஸ்கர். தெலுங்கில் பன்னிரெண்டு படங்கள் பண்ணியவர். மிக பிரமாதமான நடிகை. எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் சிங்கிள் டேக்கில் ஓ.கே.பண்ணிவிடுவார். ஃபெர்பாமன்ஸும் அருமையாக இருக்கும். ஹீரோ, ஹீரோயின் இருவரும் சேர்ந்தால் எனக்கு வேலை மிச்சம். யாமினையை இந்தப் படத்தில் கமிட் பண்ணும்போது அவருக்கு தமிழ் தெரியாது. இப்போது தமிழ் பேசினால் புரியும். தொடர்ந்து தமிழ் கற்றுக் கொண்டு வருகிறார். ஆடியோ விழாவில் தமிழ் பேசினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.”

“மற்ற நடிகர்கள்?”

“வடிவுக்கரசி, ‘தலைவாசல்’ விஜய், சுஜாதா, ‘கடலோரக் கவிதைகள்’, ரேகா, ‘ராட்சசன்’ பட வில்லன் சரவணன், எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன், ‘தாரை தப்பட்டை’ அக்ஷயா,  பாலா, அமுதவாணன்  ஆகியோர் நடிக்கிறார்கள்.”

“மியூசிக்?”

“அருணகிரி பண்றார். ‘சண்டிவீரன்’, ‘கோலிசோடா’ போன்ற ஹிட் படங்களுக்கு பண்ணியவர்.  கார்த்திக் நேத்தா, அருணகிரி இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். படத்தில் மொத்தம் 6 பாடல்கள். ஒளிப்பதிவு ஜெகதீஷ் வி.விஸ்வா பண்ணுகிறார். அவர்தான் இந்தப் படத்தின் முதுக்கெலும்பு. நானும் அவரும் ஒரு படம் இணைந்து வேலை பார்த்துள்ளோம்.

அவருடைய லைட்டிங் அமேசிங்காக இருக்கும். அது எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருடைய ஒளிப்பதிவு பேசப்படும் விதமாக இருக்கும்.  தயாரிப்பாளர் பழனிராஜன் சார் பற்றி சொல்ல வேண்டும். அடிப்படையில் சினிமா ரசிகர் என்பதால் கதைக்கான எல்லா வசதிகளையும் மறுக்காமல் செய்து கொடுத்துவிடுவார். ஒரு இயக்குநராக நடத்தாமல் தன் மகன் மாதிரி என்னை நடத்தினார்.”

“உங்களைப் பற்றி சொல்லவேயில்லை?”

“எனக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டி. சிறுவயதில் நடனத்தில் எனக்கு அதிக ஆர்வம். பள்ளியில் நடக்கும் போட்டிகளில் நான் முதலிடம் வருவேன். அப்போது எங்கள் மாவட்டத்துக்கு அமுதா ஐ.ஏ.எஸ். கலெக்டராக இருந்தார். அரசு விழாக்களில் நடைப்பெறும் கலை நிகழ்ச்சியில் நான் பங்கு பெறுவதற்கு ஊக்கமளித்திருக்கிறார். நான் சினிமாவுக்கு வர அதுவும் ஒரு காரணம். சினிமா ஆர்வம் இருந்ததால் சினிமா நிறைய பார்ப்பேன். அப்படி எல்லா ஜானர் படமும் பார்ப்பேன். ஒருசமயம் ‘ராவணன்’ படப்பிடிப்பு எங்கள் ஊரில் நடந்தது. அப்போது படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்று தினமும் போய்விடுவேன்.

படப்பிடிப்பு சமயத்தில் மணிரத்னம் சார் வேலை செய்யும் பாணி எனக்கு பிடித்திருந்தது. படப்பிடிப்பு நடந்த நாட்களில் அவரை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். தினமும் காலை அவர் தங்கியிருக்கும் ஓட்டலிலிருந்து புறப்பட்டு படப்பிடிப்புக்கு முதல் ஆளாக வந்து அன்றைக்கான வேலைகளை கவனிக்க ஆரம்பிப்பார். அவருடைய அந்த ஒர்க்கிங் ஸ்டைலால் தான் டைரக்‌ஷன் மீது ஆர்வம் பிறந்தது.
எங்கள் ஊரில் நிறைய படங்களின் படப்பிடிப்பு நடக்கும்.

அப்போது  வீட்டில் சும்மா இல்லாமல் ரவுண்ட் அடித்துக் கொண்டிருப்பேன். அப்போது ‘வனயுத்தம்’ படப்பிடிப்பு நடந்தது. நடிக்க வாய்ப்பு தேடி அந்தப் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போனேன். அப்போது நான் படப்பிடிப்பில் தன்னார்வத்துடன் நிறைய வேலைகளை செய்வேன். என்னுடைய துள்ளலான வேலைகளை பார்த்துவிட்டு அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் என்னை அழைத்து பேசினார்.

அதன் பிறகு படப்பிடிப்பு நாட்களில் என்னைத் தேட ஆரம்பித்தார். நானும் மில்டன் சாரின் வேலையை கவனிக்க ஆரம்பித்தேன். மில்டன் சார் சின்ன விஷயங்களையும் நுட்பமாக பார்த்து வேலை செய்வார். அவருடைய அந்த தொழில் நேர்த்தி எனக்கு பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் உதவியாளராக சேர முடிவு எடுத்தேன். என்னுடைய விருப்பத்தை மில்டன் சாரிடம் தெரிவித்தேன். சென்னைக்கு சென்றதும் அழைப்பதாக சொன்னார்.

சில வருடங்களில் சார் ‘கோலிசோடா’ ஆரம்பித்திருந்தார். அப்போது என்னுடைய குடும்ப சூழ்நிலைகளால் சாரை மீட் பண்ணமுடியவில்லை. பிறகு ‘10 எண்றதுக்குள்ள’ படம் ஆரம்பித்தார். அப்போதும் ஜாயின் பண்ண முடியவில்லை. ஒருவழியாக ‘கடுகு’ படத்தில் ஜாயின் பண்ணினேன். பிறகு ‘கோலிசோடா-2’ படத்தில் வேலை செய்தேன். இயக்கம் சார்ந்தும் ஒளிப்பதிவும் சார்ந்தும் கற்றுக் கொள்ள எல்லோருக்கும் அமையாது. அது எனக்கு கிடைத்தது. மில்டன் சாரிடம் சேருவதற்கு காரணம் அவரிடம் இருந்தால் நல்ல சினிமா கற்கலாம் என்று அவரிடம் சேர்ந்தேன்.

சாரிடம் திட்டமிடல் சரியாக இருக்கும். அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம் உதவியாளர்களை மோடிவேட் பண்ணுவார். சில காட்சிகளை  உதவியாளர்களை எடுக்கச் சொல்வார். ‘ஆண் தேவதை’ படத்தில் மில்டன் சாரிடம் உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்ததும் நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது மில்டன் சார் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்தார். ஃபோனில் வாழ்த்து சொன்னார். அப்போது ‘வெற்றி, தோல்வி பற்றி யோசிக்க வேண்டாம். உண்மையாக வேலை செய்’ என்றார்.

நான் சினிமாவில் உற்சாகத்துடன் வேலை செய்ய காரணம் என் குடும்பம். அவர்கள்தான் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். என்னுடைய அப்பா கோவிந்தராஜ். அப்பாவுக்கு நான் டைரக்டராக வேண்டும் என்பது விருப்பம். ஆனால் அப்பா இப்போது இல்லை. அப்பாவுக்கு கொடுக்கும் மரியாதையாக என்னுடைய பெயரில் அப்பா பெயரான கோவிந்தராஜையும் சேர்த்துள்ளேன்.”

- ராஜா