அம்மா வேடத்தில் நடிக்க மாட்டேன்! சுனு லட்சுமி ஆவேசம்



மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் எல்லா நடிகைகளுமே அழகும், நடிப்புத்திறமையும் இணைந்து ஜொலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். 2009ல் ‘சிரித்தால் ரசிப்பேன்’ படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் சுனு லட்சுமி. தமிழில் சரளமாகப் பேசி அற்புதமாக நடிக்கும் அவருக்கு ஏனோ தமிழ்ப் படவுலகம் மிகப் பெரிய இடத்தைக் கொடுக்கவில்லை.

படத்தில் தான் ஏற்றுக்கொண்ட கேரக்டராகவே மாறிவிடும் அவரது திறமையை ஏன் இன்னும் தமிழ்ப் படவுலகம் கண்டுகொள்ளவில்லை என்று தெரியவில்லை. சமீபத்தில் ‘சங்கத்தலைவன்’ படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்திருந்த அவரைச் சந்தித்தோம். லேசான ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார்.

“ஃபீல்டுக்கு வந்து பத்து வருஷம் தாண்டியாச்சி. இன்னமும் முன்னணிக்கு வரலையே என்கிற ஆதங்கம் இருக்கா?”

“இல்லாமலா இருக்கும்? சினிமாவில் ஜெயிக்க உழைப்பும், திறமையும் மிகவும் முக்கியம். அதைவிட அதிர்ஷ்டம் முக்கியம் என்று சிலர் சொல்வார்கள். அதைக்கேட்டு நான் அமைதியாக இருந்தாலும், சில நேரங்களில் அவர்கள் சொல்வது சரிதானோ என்று என்னை நானே கேள்வி கேட்பேன்.
தமிழில் ‘சிரித்தால் ரசிப்பேன்’, ‘செங்காத்து பூமியிலே’, ‘டூரிங் டாக்கீஸ்’, ‘எப்போதும் வென்றான்’, ‘தாராவி’, ‘சாவி’, ‘அறம்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். நான் கோலிவுட்டுக்கு வந்து பதினோரு வருடங்களாகி விட்டது. ஆனால், மிகக் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். இதுபற்றி பலர் என்னிடம் கேட்டதுண்டு. ஆனால், என்னால் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியவில்லை.”

“உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது?”

“நிஜமாவே தெரியலை சார். நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தில் என் கேரக்டர் எவ்வளவு வலிமையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதற்குப் பிறகு கூட குறைந்த அளவிலான வாய்ப்புகள் மட்டுமே என்னைத்தேடி வந்தது. அதிலும் சில படங்களில் அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கேட்டனர்.

பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு கேரக்டரில் நடித்துப் பிரபலமாகி விட்டால், தொடர்ந்து அதுபோன்ற கேரக்டரிலேயே நடிக்க வேண்டும் என்று கேட்பார்கள். நாம் மாற நினைத்தாலும், மற்றவர்கள் நம்மை மாற விட மாட்டார்கள். எனவே, இனி எந்தப் படத்திலும் அம்மா வேடத்தில் நடிக்கக்கூடாது என்று உறுதியாக முடிவு செய்துள்ளேன்.”

“இப்போ நடிச்சிருக்கிற ‘சங்கத்தலைவன்’ பற்றி...”“நான் நடித்த ‘சாவி’, ‘அறம்’ ஆகிய படங்களைப் பார்த்துவிட்டுதான் ‘சங்கத்தலைவன்’ படத்தில் நடிக்கக் கேட்டார்கள். இதில் நான் கருணாஸ் சாருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். அவருக்கு ஜோடியாக நடிப்பதா? இவருக்கு ஜோடியாக நடிப்பதா என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன். முதலில் கதை கேட்பேன். அதில் என் கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்று பார்ப்பேன். அது எனக்குத் திருப்தியாக இருந்தால், ஹீரோ யார் என்று பார்க்க மாட்டேன்.

‘சங்கத்தலைவன்’ படத்தில் என் நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருக்கு. தொடர்ந்து பதினோரு வருடங்களாக தமிழ்ப் படங்களில் நடித்தாலும், நியாயமான சம்பளம் மட்டுமே கேட்கிறேன். இவ்வளவு கொடுத்தால்தான் நடிப்பேன் என்று எப்போதுமே அடம்பிடித்தது இல்லை. என்னைப் பொறுத்தவரை, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதை மட்டுமே பாலிசியாக வைத்திருக்கிறேன்.”

“இளம்பெண்ணான நீங்க அம்மா வேடத்தில் தொடர்ந்து நடிக்கறீங்களே?”

“நான் எந்த நடிகையின் வளர்ச்சியைப் பார்த்தும் நான் பொறாமைப்பட்டது கிடையாது. என்னைத்தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக்கொண்டு நடிக்கிறேன். அதுபோல், எந்த நடிகையையும் எனக்குப் போட்டியாக நினைத்தது கிடையாது. இதற்குமுன் நான் ஏற்று நடித்த கேரக்டர்தான் எனக்குப் போட்டி. ஒவ்வொரு கேரக்டரும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன். ‘அறம்’ படத்தில் என்னை நம்பி அம்மா கேரக்டர் கொடுத்தார்கள். அதை நான் திறம்படச் செய்தேன். எல்லோரும் பாராட்டினார்கள்.

 ‘இந்த இளம் வயதில் இவ்வளவு மெச்சூரிட்டியான நடிப்பை எப்படி வெளிப்படுத்தினீர்கள்?’ என்று ஒவ்வொருவரும் என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அந்தப் படத்தில் அம்மா வேடத்தில் தோன்றி, நான் யார்? என் நடிப்புத்திறமை என்ன என்பதை நிரூபித்துவிட்டேன். எந்த நிலையிலும் கிளாமராக நடிக்க விருப்பம் இல்லை. இனி அம்மா வேடம் ஏற்கவும் ஆசையில்லை. என் வயதுக்கேற்ற கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன். விஜய் ஆண்டனி படம் உட்பட சில படங்களில், பிளாஷ்பேக்கில் வரும் அம்மா  வேடத்தில் நடிக்கக் கேட்டார்கள். ஆனால், அந்த வாய்ப்புகளை எல்லாம் அன்பாக  மறுத்துவிட்டேன்.”“உங்களுக்கு டைரக்‌ஷன் கனவு இருப்பதா இண்டஸ்ட்ரியில் பேச்சு...”

“மலையாளத்தில் ஓரிரு குறும்படம் இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு. மேலும், அங்குள்ள இயக்குநர் ஒருவரிடம் உதவியாளரகப் பணியாற்றிய அனுபவமும் இருக்கிறது. விரைவில் நான் படம் இயக்குவேன் என்று நான் சொன்னதாக சில தகவல்கள் உலா வருகிறது. அப்படி நான் சொல்லவில்லை. ‘உதவி இயக்குநராகப் பணியாற்றியதால், சில வித்தியாசமான கதைகள் எழுதி வைத்திருக்கிறேன்.

நல்ல சந்தர்ப்பம் அமைந்தால், சினிமா படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது’ என்றுதான் சொன்னேன். அதைத்தான் நமது சினிமா ஆட்கள் வேறுமாதிரி புரிந்துகொண்டு பேசுகிறார்கள். ஸ்கிரிப்ட் ரெடியாக இருக்கிறது. ஆனால், என்மீது அதிக நம்பிக்கை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் அமைய வேண்டும். நடிகர், நடிகைகள் என்னை நம்பி கதை கேட்க வேண்டும்.

இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது. படம் இயக்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒருவேளை நான் படம் இயக்க ஆரம்பித்தால், என் முதல் படம் சமூக விழிப்புணர்வு கொண்ட படமாகத்தான் இருக்கும். என்னிடம் அதுபோன்ற கதை இருக்கிறது. எனக்கு நன்றாகப் பாடவும் தெரியும். ஆனால், எந்த இசை அமைப்பாளரிடமும் வாய்ப்பு கேட்டது இல்லை. அதற்கான சந்தர்ப்பம் அமையும்போது அதுபற்றி யோசிப்பேன்.”
“கல்யாணம் காட்சி?”

“இப்போது கேரளாவில் வசித்தாலும், விரைவில் சென்னையில் செட்டிலாகும் எண்ணம் இருக்கிறது. காரணம், தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான். உடனே, தமிழ்நாட்டு மருமகளாகும் ஆசை இருக்கிறதா என்று கேட்காதீர்கள். இப்போது என் திருமணத்துக்கு அவசரம் இல்லை. அதற்கான நேரம் வரும்போது அதுபற்றி பேசலாம்.”“உங்க குரல் இனிமையா இருக்கே?”“இருந்து என்ன பிரயோசனம்? தமிழ்ப் படங்களில் எனக்கு வேற யாராவதுதான் குரல் கொடுக்குறாங்க. நானே எனக்கு பேசணும்னு ஆசைப்படுறேன்.”

- தேவராஜ்