திருப்பதின்னாலே திருப்பம்தான்!



‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் லோலிவுட் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். தொடர்ந்து ‘18 வயசு’, விஜய்சேதுபதி நடித்த ‘கருப்பன்’ போன்ற படங்களை இயக்கினார். தற்போது, லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
‘‘ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இந்தப் படத்தின் மையக் கரு. இதை காதல், ஆக்‌ஷன் என்று கமர்ஷியலாக சொல்லியுள்ளேன்.

கும்பகோணம், திருச்சி பகுதி களில் படப்பிடிப்பை நடத்தினோம். நாயகனாக அறிமுகமாகும் வினோத் தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவு என்று சொல்லுமளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக ‘உதயம் NH4’ அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களோடு  பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி ஆகியோரும் இருக்கிறார்கள். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படம் என்றால் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. இந்தப் படமும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்’’ என்கிறார் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம்.