கொரோனா விழிப்புணர்வுப் பணியில் சத்யா!



‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இசையமைப் பாளர் சி.சத்யா. தொடர்ந்து ‘நெடுஞ்சாலை’, ‘காஞ்சனா-2’, ‘இவன் வேற மாதிரி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘ஒத்த செருப்பு’ போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா. தற்போது எழில் இயக்கியுள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’, சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை -3’, ‘ராங்கி’ உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவர் படங்களில் பிஸியாக இருந்தாலும் கொரோனா தடுப்புக்காக ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.‘விழித்திரு... தனித்திரு... வரும் நலனுக்காக... நீ தனித்திரு...’ என்ற இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்
தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் பாடல் வெளியான சில நாட்களிலேயே சமூக வலைத் தளங்களில் பல்லாயிரக்காண வியூவர்ஸ் கிடைத்துள்ளார்களாம்.

இந்தப் பாடலின் சிறப்பம்சமே இதில் பங்குபெற்றவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக தங்கள் பங்களிப்பை வழங்கினார்களாம்.

இந்தப் பாடலை இன்ஜாமம் எழுதியுள்ளார். பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், சத்யன் மகாலிங்கம், கனடாவிலிருந்து அபி, அமெரிக்காவிலிருந்து சுதர்சனன் அசோக், கணேசன் மனோகரன், இன்ஜாமம் ஆகியோருடன் இசை அமைப்பாளர் சி.சத்யாவும் இணைந்து பாடியுள்ளார்கள்.

பாடல் உருவானவிதம் பற்றி சத்யாவிடம் கேட்டோம்.... ‘‘பொதுவாக நான் என்னுடைய ரிக்கார்டிங் தியேட்டரில்தான் இருப்பேன். இந்த கொரோனா சீசனில் வெளியே தலைக்காட்டவில்லை. இந்த சமயத்தில் கொரோனா விழிப்புணர்வுக்காக ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டேன்.

என்னுடைய ஐடியாவை என்னுடைய இசைக் குழுவினரிடம் சொன்னதும் அவர்களும் ஆர்வமாகி அவர்கள் இருக்குமிடத்திலிருந்து பாடலை பதிவு செய்து அனுப்பினார்கள். ‘தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட் போட்டியில் டைட்டில் மற்றும் ரூ.7 கோடி பரிசு வென்ற லிடியன் நாதஸ்வரத்தின் அக்கா அமிர்தவர்ஷிணி புல்லாங்குழல் வாசித்துக் கொடுத்தார்.

தற்போதுள்ள  தடை உத்தரவு காலத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக   இசையமைப்பாளராக என்னுடைய பங்களிப்பை வழங்கவே இந்தப் பாடலை உருவாக்கினேன். தொடர்ந்து என்னுடைய யு-டியூப் சேனல் மூலமாக தனி ஆல்பங்களை வெளியிடவுள்ளேன்.

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்துக்கு பிறகு ‘அரண்மனை-3’ படத்துகாக மீண்டும் சுந்தர்.சி.யுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். சுந்தர்.சி சார் மிகவும் டேக் இட் ஈஸி பெர்சன்.

இசையமைப்பாளர்களிடம் தனக்கு வேண்டிய டியூன்களை டென்ஷன் இல்லாமல் வாங்க கூடியவர். நானும் ஜி.வி.பிரகாஷூம் பிரபல இசை அமைப்பாளர்களிடம் வேலை செய்துள்ளோம். இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கவும் செய்கிறார். எழில் சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்துக்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம்’’ என்கிறார் சத்யா.

- எஸ்