நிர்பயாவின் தாயாருடைய கதறல் சினிமாப் படமாகிறது!



திரைப்படங்களின் தலைப்பு கூட உன்னிப்பாக கவனிக்கப்படும் சூழ்நிலையில் தன் முதல் படத்திற்கே ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்று வைத்து துணிச்சலாக களம் இறங்கி இருக்கிறார் தீரன். இதுபோன்ற தலைப்புகளுக்கென்றே எப்போதும் தயாராக இருக்கிற சத்யராஜ்தான் ஹீரோ. படத்தின் தலைப்பு குறித்து கேட்டால் தீரன் நிமிர்ந்து உட்கார்ந்து பேசுகிறார்.

“என்ன சார் தலைப்புலேயே கெத்து காட்டியிருக்கீங்க?”

“இது போன்ற தலைப்புகள் புதிதில்லையே? ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்ற ஒரு தலைப்பில் சத்யராஜ் ஏற்கெனவே ஒரு படம் நடித்திருக்கிறார். ‘நீதிக்கு தண்டனை’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்றெல்லாம் எண்பதுகளில் இப்படி நிறைய படங்கள் வந்திருக்கிறது.
அப்போதெல்லாம் படத்தின் தலைப்பே, படம் பேசவேண்டிய விஷயத்தை சுட்டிக் காட்டும். ஆனால், இந்தப் படம் பேசுகிற விஷயம் இன்னும் சற்றே தீவிரமானது.”“டைட்டிலை பார்த்தால் நீதியை பற்றித்தானே இந்தப் படமும் பேசப்போகிறது என்று தோன்றுகிறதே?”

“அப்படித்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு செல்லும் முன் உள்ள விஷயங்களை பேசுகிறது படம். இதை ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படம் என்று கூட சொல்லலாம். டெல்லியில் காட்டுமிராண்டிகளால் கசக்கியெறியப்பட்ட மலரான நிர்பயாவின் வழக்குதான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன்.”

“நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்குதான் தண்டனை கிடைத்து விட்டதே?”

“ரொம்பவே தாமதமாக கிடைத்தது என்பது என் எண்ணம். மக்களும் கூட அப்படிதான் நினைக்கிறார்கள். ஓடும் பஸ்சுக்குள் நடந்த கொடூரம் உலகத்துக்கே தெரியும். அப்படி இருந்தும் அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க ஏழு ஆண்டுகள் ஆகிறது. தாமதிக்கப்பட்ட நீதியும் அநீதிதானே? நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு நிறைவேற்றப்பட்ட அன்றே சென்னையில் ஒரு காமக் கொடூரன் பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மாடியில் இருந்து வீசி கொன்றிருக்கிறான். தண்டனை பற்றிய பயம் எங்கே இருக்கிறது. கொடுக்கிற தண்டனை சரியாக இருக்வேண்டும், உடனடியாக கொடுக்க வேண்டும் என்கிறது படம்.”

“அரேபிய தண்டனை மாதரி இருக்க வேண்டும் என்கிறீர்களா?”

“அரேபியாவில் தண்டனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டாலும் அங்கும் குற்றங்கள் இருக்கிறது. ஆனால் சதவிகிதம் குறைவு. எந்தக் குற்றத்தையும் சட்டத்தாலும், தண்டனையாலும் அறவே நீக்க முடியாது. அதன் சதவிகிதத்தைத்தான் குறைக்க முடியும்.”

“மெசேஜெல்லாம் ஓக்கே. படத்தின் கதை என்ன?”

“சத்யராஜ் நேர்மையான ஒரு அரசு டாக்டர். அவர் மகள் ஸ்ருதி வெங்கட், மருத்துவக் கல்லூரி மாணவி. அவருக்குதான் மிகப்பெரிய பாலியல் கொடூரம் நடக்கிறது. படித்த ஒரு டாக்டர் ஃபேமிலிக்கு நடக்கிற அநீதிக்கு கூட அவர்கள் உரிய நீதியை பெற எத்தகைய போராட்டம் நடத்த வேண்டியது இருக்கிறது என்பது தான் படத்தின் கதை. நாலு மணி நேரத்தில் நடக்கிற ஒரு பழிவாங்கல்தான் கதை.”

“பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றம் செல் வதில் அப்படி என்னதான் பிரச்னை இருக்கிறது?”

“பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், தான் பலாத் காரம் செய்யப்பட்டதை 24 மணி நேரத்திற்குள் ஒரு அரசு மருத்துவர் மூலம் உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டபோது அணிந்திருந்த உடைகளையே அணிந்திருக்க வேண்டும். குளித்திருக்க கூடாது. இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. அப்படி இருந்தும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தேக கண்ணோடுதான் பார்க்க சொல்கிறது சட்டம்.

பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணை என்கிற பெயரில் சட்டமும், மருத்துவமும் படுத்துகிற கொடுமை இன்னும் அதிகம். ஒவ்வொரு நாள் விசாரணையிலும் அந்த பெண்தான் மீண்டும் பலாத்காரம் செய்யப்படுவதாக உணர்கிறாள். இந்த பிரச்னை யைத்தான் படம் பேசுகிறது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயாருடைய கதறல்தான் நம்ம படம்.”

“நீதித்துறை, காவல்துறை, மருத்துவ துறையை குற்றம் சாட்டுகிறீர்களா?”

“எந்தத் துறையையும் குற்றம் சாட்டவில்லை. தனிப்பட்ட யாரையும் விமர்சிக்கவில்லை. அது நம்முடைய வேலையும் அல்ல. இந்தத் துறைகளில்
உள்ள குறைபாடுகளைதான் சுட்டிக் காட்டுகிறோம்.

அந்தக் குறைகளின் வழியாக குற்றவாளிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதையும் எடுத்துச் சொல்கிறோம். நடைமுறை சிக்கல்களை சொல்கிறோம். குறைந்தபட்சம் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமாவது உரிய தண்டனை, உடனடி தண்டனை தரவேண்டும் என்கிறோம். ஒரு படைப்பாளியாக இதெல்லாம் நம்முடைய கடமை அல்லவா?”

- மீரான்