ஐஸ்ஷீட் அல்வா



என்னென்ன தேவை?

நைஸ் ரவை - 1/4 கப்,
நெய் - 1/4 கப்,
சர்க்கரை - 1 கப்,
பால் - 2 கப்,
டிரை நட்ஸ் (பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ், முந்திரி) சீவியது - 1 கப்,
வெள்ளித் தாள் - சிறிது,
ஏலக்காய்   தூள், கருப்பு   ஏலக்காய் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
சமையல் பிளாஸ்டிக் ஷீட் - சிறிது,
பட்டர் பேப்பர் ஷீட் - சிறிது,
ரோஸ் எசென்ஸ் - சிறிது.

எப்படிச் செய்வது?

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, காய்ந்ததும் ரவையை (ரவை மிகப் பொடியாக, நொய்யாக இருக்க   வேண்டும், பொடித்தும் கொள்ளலாம்) மிதமான தீயில் நன்கு வறுக்கவும். இது நன்கு பிரவுன் நிறத்துக்கு வந்ததும், சர்க்கரை, பால் சேர்த்து கைவிடாமல், கட்டி இல்லாமல் கிளறவும். நெய், சர்க்கரை, ரவை யாவும் சுருண்டு பந்து மாதிரி வரும் போது எசென்ஸ் சேர்த்து இறக்கவும். சிறிது ஆறியதும் ஒரு சமையல் பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் வைத்து, அதன் மேல் வேறொரு ஷீட் வைத்து ரவை கலவையை மெல்லிய சப்பாத்தி போல உருட்டவும்.

எவ்வளவு மெல்லியதாக உருட்ட முடியுமோ, அவ்வளவு மெலிதாகச் சதுரமாக உருட்டவும். இப்போது பெரிய சதுர ரொட்டி ரெடி. அதன் மேல் ஏலக்காய் தூள்கள், பொடித்த நட்ஸ் தூவி சமப்படுத்தவும். அதன் மேல் வெள்ளித் தாளைப் போட்டு, மெதுவாக உருட்டுக் கட்டையால் உருட்டி இந்த சதுரத்தை அப்படியே 24 மணி நேரம் மூடி வைக்கவும். அதற்கு பின் ஒரு ட்ரேயில் சதுர துண்டுகளாக வெட்டி ஒவ்வொன்றாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக நடு நடுவே பட்டர் பேப்பர் போட்டு அடுக்கவும். இது பார்ப்பதற்கு ஐஸ் மேலே இருப்பது போல தோன்றும்.