ஸ்டீம்டு சாக்லெட் ஃபட்ஜ் வித் சாக்லெட் சாஸ்



என்னென்ன தேவை?

மைதா - 1 1/2 கப்,
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்,
டிரிங்கிங் சாக்லெட் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
பொடித்த சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்,
பொடித்த முந்திரி, வால்நட், பாதாம் எல்லாம் சேர்த்து - 1/4 கப்,
ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன்,
சுடு தண்ணீர் - தேவைக்கு.

பளபளப்பாக காட்சியளிக்க...

டார்க் சாக்லெட் பார் - 1/2 கப்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
உடைத்த நட்ஸ் - சிறிது.

எப்படிச் செய்வது?

மைதா, கோகோ பவுடர், சாக்லெட் பவுடர், வெண்ணெய், உப்பு, சர்க்கரை, நட்ஸ், ஆலிவ் ஆயில், மிதமான வெந்நீர் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கலக்கவும். கெட்டி இட்லி மாவு பதத்துக்குக் கலக்கவும். இதை நெய் அல்லது வெண்ணெய் தடவிய ஒரு கேக் பாத்திரத்தில் ஊற்றி, Double Boiler பாத்திரத்தின் உள்ளே வைத்து, இரண்டுக்கும் தனித்தனி மூடி போட்டு ஆவியில் வேக விடவும். மிதமான தீ போதும். 20 நிமிடத்துக்குப் பின் இறக்கி, ஆறவிட்டு திறந்தால், கேக் போல இருக்கும். இப்போது இதற்கு மேல் பளபளப்பாகத் தெரிவதற்கும் ருசி அதிகரிக்கவும் டார்க் சாக்லெட், வெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.

இது சாஸ் போலவே வரும். இந்த சாக்லெட் சாஸை, ஃபட்ஜ் (Fudge) கேக்கின் மேல் பரவலாக ஊற்றி, வறுத்த நட்ஸால் அலங்கரித்துப் பரிமாறவும். ஒரு பாத்திரத்தில் (பெரிய பாத்திரத்தில்) தண்ணீர் வைத்து, அதன் உள்ளே பாதி அளவுள்ள வேறு ஒரு பாத்திரத்தை வைப்பதுதான் Double Boiler.