நட்ஸ் குஜியா



என்னென்ன தேவை?

மேல் மாவுக்கு...

மைதா - 250 கிராம்,
ரவை - 1/2 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - தேவையான அளவு,
சமையல் சோடா - 1 சிட்டிகை.

பூரணத்துக்கு...

பேரீச்சம் பழத் துண்டுகள், பாதாம், முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பு எல்லாம் சேர்த்து - 1 பெரிய கப்,
துருவிய கொப்பரை - 1 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை இல்லாத கோவா - 1/2 கப்,
ஏலக்காய் தூள் - சிறிது,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
சர்க்கரை - 1/2 கப்.

பாகுக்கு...

2 கப் சர்க்கரையை 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வழக்கம் போல 1 டீஸ்பூன் பால் சேர்த்து நுரைத்து வரும் அழுக்கை எடுக்கவும். பாகுப் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

பொரிப்பதற்கு...

நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மேல் மாவுக்குக் கொடுத்ததை தேவையான தண்ணீர், சூடான நெய் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். 10 நிமிடம் மூடி வைக்கவும். பூரணத்துக்குக் கொடுத்த நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் ஆகியவற்றைப் பொடித்து, கோவாவை துருவிக் கொள்ளவும். அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து கடாயில் லேசாக வதக்கி சூடு செய்யவும். இந்தக் கலவை பூரணத்துக்கு. இப்போது மேல் மாவிலிருந்து ஒரு பூரிக்கான அளவு மாவை எடுத்து  வட்டமாக தேய்க்கவும்.

அதனுள் ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து, அரை வட்டமாக மூடி (குஜியாவை) சோமாஸ் மாதிரி வடிவத்துக்குக் கொண்டு வந்து, தண்ணீர் தொட்டு சீல் செய்யவும். முறுக்கு மாதிரி சீல் செய்யலாம். அல்லது சோமாஸ் கட்டரில் கட் செய்யலாம். இதே போல குஜியாக்களை செய்து, மிதமான தீயில் எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகை சிறிது சூடுபடுத்தி, பொரித்த குஜியாக்களை அதில் மூழ்க வைத்து, சிறிது நேரத்துக்குப் பின் எடுக்கவும். தனித்தனியாக அடுக்கி அலங்கரித்துப் பரிமாறவும்.