மேத்தி தேப்லா



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - 1/4 கப்,
வெந்தயக்கீரை (மேத்தி) - 1/2 கட்டு,
ஓமம் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
எள் - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
வெல்லம் - சிறிது அல்லது மாவு பிசைய தேவையான அளவு,
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெல்லத்தை 1/4 கப் தண்ணீரில் கரைத்து வடித்துக் கொள்ளவும். வெந்தயக் கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, வெந்தயக்கீரை, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தயிர், எள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும்.

இதில் வெல்லத் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து 20 நிமிடம் ஊறவிடவும். மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாக ேதய்த்து தவாவில் சிறிது எண்ணெய் விட்டு தேப்லாவினை போட்டு சிறிது சூடானதும் திருப்பவும். இருபுறமும் எண்ணெய் தடவி நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து மேத்தி தேப்லாவை சூடாக பரிமாறவும்.

குறிப்பு: மேத்தி தேப்லாவை 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான போது சூடு செய்து பயன்படுத்தலாம்.