மெக்சிகன் பரோட்டா



என்னென்ன தேவை?

மெக்சிகன் மிளகாய் சாஸ் செய்ய...

காஷ்மீரி மிளகாய் - 10,
உலர் ஆர்கனோ (கற்பூரவள்ளி)இலைகள் அல்லது கலந்த உலர் இலைகள் (Mixed Dry Herbs) - 1,
பூண்டு- 4,
கிராம்பு - 2,
மிளகு - 4,
உப்பு - தேவைக்கு,
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்.

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு.

ஸ்டஃப்பிங்க்கு...

பொடியாக நறுக்கிய பச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளகாய் - 1/2 கப்,
வெங்காயம் - 1,
ஆலிவ் - 1/4 கப்,
வேகவைத்து உதிர்த்த இனிப்பு சோளம் - 1/4 கப்,
உப்பு - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மெக்சிகன் மிளகாய் சாஸ்...
வெறும் கடாயில் மிதமான தீயில் காஷ்மீரி மிளகாயை வறுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் 1/2 கப் தண்ணீர், மிளகாய் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். ஆறியதும் தண்ணீரோடு சேர்த்து மிளகாய், மிளகு, பூண்டு, கிராம்பு அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி அரைத்த கலவை, உப்பு, உலர் இலைகளை சேர்த்து பச்சைவாசனை போக  கொதிக்க வைத்து இறக்கவும்.

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், குடைமிளகாய், ஆலிவ், சோள முத்துக்கள், உப்பு சேர்த்து லேசாக வதக்கி இறக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி, நடுவில் மெக்சிகன் மிளகாய் சாஸை ஓரங்களில் 1/2 அங்குல இடைவெளி விட்டு தடவி, அதன் மேல் காய்கறி கலவையை வைத்து நன்றாக மூடி, கையால் தட்டி மெதுவாக சற்று கனமான பரோட்டாவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.