ரகடா பாட்டீஸ்



என்னென்ன தேவை?
 
உருளைக்கிழங்கு - 6,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
சோளமாவு - 2 டேபிள்ஸ்பூன்,
வெள்ளை பட்டாணி - 1 கப்,
கடுகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது,
பெரிய வெங்காயம் - 1 கப்,
மஞ்சள் தூள் - சிறிது,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை சட்னி, இனிப்பு சட்னி - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
 
காய்ந்த வெள்ளை பட்டாணியை 10 மணி நேரம் நீரில் ஊறவைத்து குக்கரில் மெத்தென்று வேகவைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கையும் வேகவைத்து தோலுரித்து, 4 உருளைக்கிழங்கை துருவிக் கொள்ளவும். இரண்டு உருளைக்கிழங்கை அலங்கரிக்க சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்.
 
பாட்டீஸ் செய்ய...
 
உருளைக்கிழங்கு துருவல், சோள மாவு, உப்பு, கொத்தமல்லித்தழையை பிசைந்து சிறு உருண்டைகளாக்கி வட்டமாக (கனமாக) தட்டி, கடாயில் எண்ணெயை காயவைத்து பொன்னிறமாக பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
 
ரகடா செய்ய...
மற்றொரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் வெந்த பட்டாணியைப் போட்டு கிளறி இறக்கி வைக்கவும்.
 
பரிமாறும் முறை...

தட்டில் 2, 3 பாட்டீஸ்களை அடுக்கி ரகடாவை பரப்பி பச்சை சட்னி, இனிப்பு சட்னி போட்டு, நறுக்கிய உருளை, கொத்தமல்லித்தழையை தூவவும்.
 
இனிப்பு சட்னி...

துருவிய வெல்லம் - 4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் - 1½ கப், காய்ந்த
மாங்காய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - சிறிது.
அனைத்தையும் கொதிக்க வைத்து (நீர்க்க இருக்க) இறக்கவும்.
 
பச்சை சட்னி...

கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
புதினா - 10 இலைகள்,
பச்சைமிளகாய் - 2,
உப்பு - சிறிது.
அனைத்தையும் அலசி அரைத்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து (நீர்க்க) இறக்கவும். பின்பு வடிகட்டி பயன்படுத்தவும்.