இந்தியாவிற்காக விளையாடி ஜெயிக்கணும்!



ஒரு காலத்தில், குறிப்பிட்ட சில வேலைகளை ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றோ அப்படி இல்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்த பக்கங்கள் போதாது. அனைத்து துறைகளிலும், பெண்கள் பங்காற்றி வருவது மட்டுமல்லாது, ஆண்களைவிட சதவிகிதத்தில் பெண்கள் உயர்ந்து கொண்டே வருகிறார்கள்.
அதிலும், விளையாட்டுத்துறையில் அவர்களின் அதீத திறமைகளினால் கோலோச்சி வருகிறார்கள். இது அவர்களுக்கு சாமானியமாக கிடைப்பதில்லை.

சிறு வயது முதலேயே பிடித்த துறையில் ஆர்வம் கொள்ளுதல், அதற்காக, முயற்சியையும் பயிற்சியையும் மேற்கொள்ளுதல். பலவற்றை தியாகம் செய்தல், அதைவிட, நம்பிக்கையுடன் போராடுதல் என அதிலேயே தன்னை முழுவதும் அர்ப்பணித்தால் மட்டுமே சாதனைகளை செய்ய முடியும்.சதாசர்வ காலமும், பெண்களின் கையில் துடைப்பங்களையும், சமையல் செய்யும் பொருட்களுமாக பார்த்த இந்திய சமூகம், இன்று நாட்டை காக்க அவர்கள் கையில் பெரிய பெரிய துப்பாக்கிகள்,  பீரங்கிகள்  இருப்பதை  பார்க்கும்போது, மகிழ்ச்சியடைந்து பெருமைக் கொள்கிறோம்.

அந்த வகையில், சுகந்தாஸ்ரீயின் கையில், துப்பாக்கி இல்லை. மாறாக, கிரிக்கெட் பேட்டும், பாலும் இருக்கிறது. இவர் ஒரு கிரிக்கெட் வீராங்கனை. பவுலர் கம்

பேட்ஸ் வுமன்.காலை பொழுது விடிந்தவுடன், தினமும் வியர்வை சொட்டச் சொட்ட விருகம்பாக்கம், குமரன் காலனியில் கையில் பேட் - பந்துடன் கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு, நம்மிடம் பேசத்தொடங்கினார் சுகந்தாஸ்ரீ.
‘‘சின்ன வயசுல என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் பெண்களுக்கென்றே சொல்லப்படுகின்ற ``கல்லா மன்னா’’, ``ஓடிபிடிச்சு’’, ``கோகோ’’ போன்ற விளையாட்டை விளையாடுவாங்க. ஆனால், பசங்க மட்டும் எப்போதும் கிரிக்கெட் விளையாடுவாங்க. அதை நான் வேடிக்கை பார்த்துக்கிட்டே இருப்பேன். அது நாளடைவில் கிரிக்கெட் மீது அதீத ஆர்வத்தை தூண்டியது. இதை கவனிச்ச என் அப்பா, ``கிரிக்கெட் கத்துக்கறியா”? என்று ஒரு நாள் என்னிடம்  கேட்டார். மறு நொடியே யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டேன்.

2016-ல ``ஏ.வி.எம்’’ அகடமியில் சேர்ந்தேன். இங்குதான் நான் கிரிக்கெட் விளையாட்டிற்கான பயிற்சி எடுத்துக்கிட்டேன். நிறைய போட்டிகள் விளையாடினேன். அதன் பிறகு, ``சி.எஸ்.எஸ்’’ (Centre for Sports Science) விளையாட்டு பயிற்சி மையத்தில் டேவ் வாட்மோர் சார் எனக்கு பயிற்சி அளித்தார். 2019ல் எங்க வீட்டு பக்கத்துலேயே இருக்குற ``ஸ்பார்க் கிரிக்கெட் ஃபவுண்டேஷன்’’ (Spark Cricket Foundation) பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். கொரோனா ரூபத்துல எல்லோருக்கும் வந்த சோதனை எனக்கும் வந்தது. எங்கும் நகரமுடியாத சூழ்நிலை. பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி எடுக்க முடியவில்லை. அதற்காக நான் பயிற்சி எடுப்பதை நிறுத்தவும் இல்லை.

வீட்டிலேயே பிராக்டிஸ் செய்தேன். அப்பதான், முன்னாள் தமிழக பயிற்சியாளர் திருமதி ஆர்த்தி சங்கரனை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனது பந்துவீச்சை கவனித்து பாராட்டியவர், எனக்கு வேகப்பந்து வீச்சு (Fast Bowling) பயிற்சியையும் வழங்கினார். இந்த நிகழ்வினை என்னால மறக்கவே முடியாது. என்னுடைய வாழ்க்கைல மிக முக்கியமான திருப்புமுனையாக அவர் எனக்கு அளித்த பயிற்சி அமைந்தது. இப்போது, ``சூப்பர் கிங்ஸ்’’ அகடமியில் பயிற்சி பெற்று வருகிறேன்’’ என்றவர் படிப்பிலும் கெட்டி.

‘‘எனக்கு கிரிக்கெட் மட்டுமில்லை படிப்பும் பிடிக்கும். நல்லா படிப்பேன். ஆசிரியர் நடத்தும் பாடங்களை உன்னிப்பாக கவனிப்பேன். கிரிக்கெட் போட்டி இருக்கும் நேரத்தில் என்னால் படிக்க முடியாது. அந்த சமயத்தில் வகுப்பில் கவனித்ததுதான் எனக்கு உதவும். அதை வச்சு பரீட்சையை எழுதிடுவேன்.

பெரும்பாலும் பரீட்சை இருக்கும் நேரத்தில் நான் பயிற்சி எடுக்க மாட்டேன். அதன் பிறகு மறுபடியும் பிராக்டிஸ் செய்வேன். இங்க பிராக்டிஸ் செய்ய சரியான கிரவுண்ட் கிடையாது. டாய்லெட் வசதி கூட இருக்காது. இந்த மாதிரி வசதியே இல்லாம கடுமையா நான் எடுக்கும் பயிற்சி எனக்கு போட்டிகளில் விளையாடும் போது சுலபமாக இருந்தது. ஆனால், அடிப்படை வசதிகள் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் அவசியம் தானே.

நான் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்து மற்றவர்கள், கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா? மற்ற விளையாட்டெல்லாம் இல்லையான்னு கேள்வி கேட்பார்கள். கிரிக்கெட் விளையாட்டில் இருக்கிற `கிக்’ வேற எந்த விளையாட்டிலும் இருக்குமா என்பது சந்தேகமதான். இந்த ஒரு விளையாட்டில் தான் சிக்ஸ், ஃபோர், அவுட், நாட் அவுட், வைட், நோபால் போன்ற விஷயங்கள் அனைத்தும் இருக்கு. சிக்ஸ் மற்றும் ஃபோர் அடிக்கும் போது, நம் விளையாட்டை பார்க்கும் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படும் அந்த கொண்டாட்டத்தை பார்க்கும் போது மனசுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல இருக்கும். அது ஒரு வகையான போதைன்னு தான் குறிப்பிடணும். நான் நிறைய டோர்னமெண்ட் விளையாடியிருக்கிறேன்.

ஆனால், 2021 - ல ``ஃபர்ஸ்ட் கிரிக்கெட்’’ அகாடமி (First Cricket Academy)  நடத்திய வின்டர் டோர்னமென்டை(Winter Tournament) மறக்கவே முடியாது. காரணம், பெஸ்ட் பவுலர் ஆப் தி சீரீஸ் (Best Bowler Of The Series) என்ற விருது எனக்கு அந்த போட்டியில் கிடைச்சது. 2018 முதல் 2022 வரை நாலு வருஷம் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடி இருக்கேன். என்னுடைய முழு திறமை மற்றும் உழைப்பைப் போட்டும் 2021ல் நடைபெற்ற தமிழ்நாடு டீம் தேர்வில் இடம் பெற முடியவில்லை. அதனால் ரொம்பவே அப்செட்டா இருந்தேன்.

அதே வருடம் டாப் 25ல் ஒருவரா என்னுடைய பெயர் இடம் பெற்றது. இருந்தாலும் தமிழ்நாட்டு டீமில் என் பெயர் இடம் பெறவில்லை என்பது என்னை ரொம்பவே பாதிச்சது. கிரிக்கெட்டே வேண்டாம்னு கூட தோணிச்சு. விளையாட்டில் தோல்வி என்பது இயல்பு என்பதை புரிந்து கொண்டேன். மீண்டும் கடுமையாக பயிற்சி எடுத்தேன். கடந்த ஆண்டு தமிழ்நாடு டீமில் தேர்வானேன்’’ என்றவர் அதில் தேர்வான அனுபவங்களைப் பகிர்ந்தார்.

‘‘நாம எவ்வளவு போட்டி விளையாடி இருந்தாலும், தமிழ்நாட்டிற்காக தேர்வாவது அவ்வளவு எளிதல்ல. கடந்த வருடம் டீம் தேர்வுக்காக 200 பேர் வந்திருந்தாங்க.  ஒரு அணிக்கு 50 நபர்கள் வீதம், மொத்தம் நாலு அணிகள். அதிலிருந்து, 27 நபர்களை முதலில் தேர்வு செய்வார்கள். அந்த 27 நபர்களில், 20 நபர்களை ஃபில்டர் செய்தும். அதன் பிறகு ஃபைனலாக, 15 நபர்களை தேர்வு செய்வார்கள். அதில் நானும் ஒருத்தி என்று நினைக்கும் போது, நான் செய்த கடும் பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

என்னுடைய இன்ஸ்பிரேஷன் புவனேஷ்வர் குமார் அவர்கள்தான். ஆரம்பத்துல அவரமாதிரியே விளையாடுவேன். அவர் எப்படி பௌலிங் போடுகிறாரோ அப்படியே நானும் போடுவேன். டேல் ஸ்டெய்ன்கூட என்னுடைய இன்ஸ்பிரேஷன்தான். பெண் கிரிக்கெட் வீரர்களில் மித்தாலி ராஜ் ரொம்ப பிடிக்கும்.

அம்மா, அப்பா எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்றாங்க. அதே போல, பாட்டியும்  என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க. ஒரு நாள் கூட என்னை படி என்று சொன்னது கிடையாது. கிரிக்கெட் விளையாடு என்றுதான் சொல்லியிருக்காங்க. என்னை எல்லா டோர்னமெண்ட்டுகளுக்கும் அழைத்து சென்று உற்சாகம் செய்வார்கள். அடுத்ததாக, எனக்கு கோட்சிங் கொடுத்த அத்தனை பயிற்சியாளர்களுக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன்.

என் கையில், பேனா இருந்த நேரத்தைவிட பேட்டு இருந்த நேரம்தான் அதிகம். அவங்க கொடுத்த ஃப்ரீடம்னாலதான் என்னால தொடர்ந்து விளையாட முடியுது, ஜெயிக்க முடியுது. என்னுடைய அல்டிமேட் கோல், இந்தியாவுக்காக ஆடணும். நல்லா விளையாடி ஜெயித்து  இந்தியாவிற்கு பெருமைகளை சேர்க்க வேண்டும்’’ என்று விறுவிறுவென கலகலப்பாக  பேசிமுடித்தார் சுகந்தாஸ்ரீ.

ரா.ரெங்கராஜன்