கர்ப்பப்பை இல்லை என்றாலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்!‘‘திருமணமான ஆறு மாதங்களிலேயே பெண்களில் பலர் கருத்தரிப்பு மையங்களுக்கு செல்வது வழக்கமாகிவிட்டது. ஒரு சில பிரச்னைகளுக்கு கூட சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு மருத்துவ துறை முன்னேறியுள்ளது. பெண்கள் கருத்தரிக்க கருமுட்டை அவசியம் என்றாலும், அந்தக் கருவினை சுமக்க கர்ப்பப்பை மிகவும் முக்கியம். 5000 பெண்களில் ஒருவர் கர்ப்பப்பை இல்லாமல் பிறக்கிறார்கள்.
அல்லது அவர்களின் கர்ப்பப்பை மிகவும் சிறியதாகவும் குழந்தையை சுமக்கக் கூடிய வலிமையை இழந்திருக்கும். இவர்களுக்கு மருத்துவ துறையில் வரப்பிரசாதமாக அமைந்திருப்பதுதான் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை’’ என்கிறார் மகப்பேறியல் மற்றும் கருத்தரிப்பு நிபுணர் டாக்டர் பத்மபிரியா விவேக்.

‘‘உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றத்தால் கருத்தரிப்பில் பிரச்னை இருந்து வருகிறது. அதற்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால், கர்ப்பப்பையே இல்லாத பெண்களுக்கு வாடகைத்தாய் முறை மட்டுமே ஆப்ஷனாக இருந்தபட்சத்தில் இப்போது அவர்களும் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மருத்துவ துறை நிரூபித்துள்ளது. 2013ம் ஆண்டு ஸ்வீடனில் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது தான் முக்கிய ஆதாரம்.

இதனைத் தொடர்ந்து உலகளவில் இந்த மாற்று சிகிச்சை 100 பேருக்கு செய்யப்பட்டு அதில் 49 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக பூனேயில் சிகிச்சை முறை செய்யப்பட்டு ஒரு பெண் குழந்தை ெபற்றுள்ளார். தற்போது தென்னிந்தியாவில் முதல் முறையாக குறிப்பாக சென்னையில் இரண்டு பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று அவர்கள் குழந்தை பேறுக்காக காத்திருக்கிறார்கள்’’ என்றவர், இதற்கான சிகிச்சை முறைகளை பற்றி விவரித்தார்.

‘‘பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல் பிறக்கும் பெண்களை MRKH (Mayer Rokitansky Kuster Hauser) சிண்ட்ரோம் என்று குறிப்பிடுவோம். சில பெண்களுக்கு ஹைப்போ
பிளாஸ்டிக் கர்ப்பப்பை இருக்கும். அதாவது, கர்ப்பப்பை இருந்தாலும், வளர்ச்சி அடையாமல் அல்லது ஃபைப்ராய்ட் மற்றும் புற்றுநோய் காரணமாக அவர்கள் அதனை
இழந்திருப்பார்கள்.

கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையினை மேற்கொள்பவர்கள் 18 முதல் 40 வயதிற்குள் திருமணமானவர்களாக இருக்க வேண்டும். எச்.ஐ.வி, நீரிழிவு, இதய பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், காசநோய் போன்ற எந்த வித பிரச்னையும் இருக்கக்கூடாது. மேலும் இவர்களுக்கு தானம் கொடுப்பவர்கள் பெண்ணுடைய ரத்த பந்தமாக இருப்பது அவசியம். அம்மா வழியோ அல்லது தந்தை வழியில் ெநருங்கிய உறவாக இருக்கலாம். சொல்லப் போனால், பெண்ணுடைய அம்மா, அக்கா, தங்கை, அத்தை என அந்த பெண்ணின் ரத்த பந்தமாக இருக்கணும்.

அம்மாக்கள் மெனோபாஸ் அடைந்திருந்தாலும், அவர்களின் கர்ப்பப்பையை பொருத்த முடியும். கர்ப்பப்பை தானம் கொடுப்பவர்கள் 40 முதல் 60 வயதிற்குள் இருக்கலாம். மேலும் கர்ப்பப்பை தானம் கொடுப்பவர்களுக்கும் உடல் ரீதியாக எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது. சொல்லப்போனால், கர்ப்பப்பை தானம் கொடுப்பவர் மற்றும் அதனை பெறுபவர் இருவருமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ரத்த சம்பந்தமாக இருப்பவர்கள் தானம் கொடுத்தாலும், இருவருக்கும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அது பொருந்தினால் மட்டுமே சிகிச்சையினை மேற்கொள்ள முடியும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை மட்டும்தான் இருக்காது. ஆனால், அவர்களுக்கு கருமுட்டை இருக்கும். அறுவை சிகிச்சை செய்யும் முன்பு பெண்ணுடைய கருமுட்டையை சேகரித்து அதனை கணவரின் விந்தணுவோடு இணைத்து செயற்கை முறையில் கருத்தரிக்க செய்வோம். அதன் பிறகு அவர்களுக்கு அறுவை சிகிச்சையினை மேற்கொள்வோம். உடலில் ெபாருத்தப்பட்டுள்ள கர்ப்பப்பை வேறு நபருடையது என்பதால், அதனை இவர்கள் உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மூன்று மாதம் இயங்க ஆரம்பித்த பிறகு செயற்கை முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் கருமுட்டையினை ஐ.வி.எஃப் முறையில் உள் செலுத்த வேண்டும். ஒரு மாசம் ஒரு கரு முட்டை என மூன்று மாசத்தில் மூன்று கரு முட்டையினை செலுத்தலாம். அது கருவாக மாற ஆறு மாசமாகும்.

அவர்களின் கர்ப்பப்பையில் கரு உருவானதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொடர் செக்கப் செய்து கருவின் வளர்ச்சியினை கண்காணிக்க வேண்டும். ஆரோக்கிய உணவினை உட்கொள்ள வேண்டும். மேலும் கரு ஆரோக்கியமாகவும் அதே சமயம் கர்ப்பப்பை செயல்பட இம்யுனோ சப்ரசிவ் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்களால் இயற்கை முறையில் குழந்தை தரிக்க முடியாது.

அதே போல் அறுவை சிகிச்சை மூலம்தான் குழந்தையினை டெலிவரி செய்ய வேண்டும். சென்னையில் உள்ள க்லெனகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் முதல் முறையாக இரண்டு பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை 12 நிபுணர்களின் கண்காணிப்பில் நடைபெற்றது.

மேலும் இந்த சிகிச்சையினை மேற்கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து அந்த அறுவை சிகிச்சை ஸ்பெலிஸ்ட் வந்திருந்தார். அவரின் முன்னிலையில்தான் இரண்டு பெண்களுக்கு கர்ப்பப்பையினை வெற்றிகரமாக பொருத்தி இருக்கிறோம். ஆறு மாதம் கழித்து அவர்களுக்கு ஐ.வி.எஃப் முறையில் கருமுட்டையை உள் செலுத்துவோம்.

சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு இருக்கும் கர்ப்பப்பை ஐந்து வருடம்தான் பெண்ணுடைய உடலில் இருக்க முடியும். அந்த குறிப்பிட்ட வருடத்தில் அவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். காரணம், கர்ப்பப்பை செயல்பட அவர்கள் இம்யுனோ சப்ரசிவ் மருந்துகள் சாப்பிட வேண்டும்.

கருத்தரிப்புக்கு பிறகு அதனை நீக்காவிட்டால், அவர்கள் காலம் முழுக்க இந்த மருந்துகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு அவசியம் இல்லை என்பதால், குழந்ைத பிறந்த பிறகு கர்ப்பப்பையினை மீண்டும் அறுவை சிகிச்சை செய்து நீக்கிடலாம்.

இந்த அறுவை சிகிச்சை கர்ப்பப்பை இல்லாத பெண்களுக்கு பெரிய வரப்பிரசாதம். இவர்களால் தாய்மையை அனுபவிக்க முடியாது என்ற ஏக்கம் இருக்கும். மேலும் பலர் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அவர்களுக்கு இந்த சிகிச்சை பெரிய ஆறுதல் அளிக்கும்’’ என்றார் டாக்டர் பத்மபிரியா.  

நிஷா