வரதட்சணை கொடுப்பது கவுரவமா?நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா வரதட்சணை கொடுமைகள் குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். 2017 முதல் 2022ம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக 11,874 மரணங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பீகாரில் 5,354 மரணங்களும், மத்தியப் பிரதேசத்தில் 2,859 மரணங்களும் வரதட்சணை கொடுமை காரணமாக நிகழ்ந்துள்ளன. மேற்கு வங்கத்தில் 2,389, ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

தென் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 198, கேரளா 52, கர்நாடகா 934 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டில் வரதட்சணை கொடுமைகளால் உயிரிழப்புகள் குறைந்து வருவது மகிழ்ச்சியளித்தாலும் வேறு வகைகளிலும் இன்னும் வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது. வரதட்சணை கொடுமைகள் குறித்து அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமாக பணியாற்றும் சுதா இது குறித்து விவரித்தார்.

‘‘வரதட்சணை கொடுமைகளால் உயிரிழப்புகள் குறைந்திருக்கிறது என்று மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்தினுடைய புள்ளி விவரங்கள் சொல்லியிருந்தாலும் எங்களுடைய கள நிலவரம் வரதட்சணை கொடுமை சம்பந்தமான புகார்கள் கொடுக்க காவல் நிலையங்களுக்கு செல்லும் போது அந்த வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்த வழக்குகளின் தொகுப்புதான் புள்ளி விவரங்கள். இப்படி அரசின் புள்ளி விவரங்களும் நாங்கள் சந்தித்து பேசுகிற பெண்களுடைய எண்ணிக்கைகளும் முரணாக உள்ளன. எங்களை பொறுத்த வரை இந்த புள்ளி விவரங்களை கண் துடைப்பாகத் தான் பார்க்கிறோம். வட மாநிலங்களை விட தமிழகத்தில் வரதட்சணை கொடுமைகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றாலும் அதை வேறு மாதிரியாகத்தான் பார்க்க வேண்டும்.

வரதட்சணை என்பது காலத்திற்கு ஏற்றாற்போல மாறிவிட்டது. முன்பு திருமணம் நடந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் இவ்வளவு நிலம், நகைகள் அல்லது பணம் கொடுத்து விட வேண்டும் என்று ஒப்பந்தத்தின் பெயரில் திருமணங்கள் நடக்கும். இந்த முறையை வரதட்சணை என்று எளிதில் சொல்லிவிடலாம். தற்போது இரு வீட்டாரினுடைய பொருளாதார அந்தஸ்து ெபாருத்துதான் ஒரு திருமணமே நிச்சயிக்கப்படுகிறது. வெளிப்படையாக வரதட்சணை கொடுங்கள் என்று சொல்லாமல் தங்களுக்கு ஏற்ப பொருளாதார அந்தஸ்து உள்ள குடும்பத்தினருடன் சம்பந்தம் செய்து கொள்ளும் போது கேட்காமலேயே அவர்கள் எதிர்பார்க்கிற எல்லாமே கிடைக்கிறது.

என்னுடைய பையனை நல்லா கவனிப்பீங்களா என்று பெண் வீட்டாரிடையே கேட்கிற சொற்களும் மறைமுகமான வரதட்சணை கேட்கும் சொல்லாகத்தான் பார்க்கிறோம். இன்று படித்து வெளியே வருகிற ஆண்கள் வரதட்சணை கொடுக்க மாட்டோம் அல்லது வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சொன்னாலும் பெண் வீட்டார் நிர்பந்தித்து கொடுக்கும் போது நாங்களாக கேட்கலை அவர்களாகத்தான் செய்தார்கள் என்ற சொல்லையும் உபயோகிக்கிறார்கள்.

வரதட்சணை கொடுப்பது என்பதுவே ஒரு கவுரவமாக  பார்க்கும் நிலையில் இருக்கும் போது அந்த சொல் வேடிக்கையாக உள்ளது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது ஒரு முக்கியமான வழக்கம். அப்படி சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை ஒரு பெண் திருமணமாகி செல்லும்போது எவ்வளவு சொத்துகளை கொண்டு செல்கிறார்கள் என்பதையும் இந்த சமூகம் உற்றுக் கவனிக்கிறது. நிர்பந்தித்து கொடுக்கிற அல்லது பெறுகிற யாவுமே அது வரதட்சணைதான். இதையேதான் ஆண் வீட்டாரும் வழிமொழிகிறார்கள். அதே போல பொருளாதார ரீதியான பிரச்சனைகள்தான் குடும்ப வன்முறைக்கு காரணமாக இருக்கின்றன.

பெண்கள் இரண்டு விஷயங்களில் நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒன்று  தன் வீட்டில் இருந்து ஏதாவது கொண்டுவர வேண்டும் அல்லது தான் சம்பாதித்து கொடுக்க வேண்டும். இவை இரண்டும் நிகழாத போது அது குடும்ப வன்முறையாக மாறுகிறது. 2021ம் வருடத்தில் 805 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடல் ரீதியான காயங்கள் ஏற்பட்டால்தான் வழக்காக பதிவும் செய்கிறார்கள். குடும்ப வன்முறைகளால் மனரீதியாக பாதிக்கப்படும் போது அதை வழக்காக பதிவு செய்வதில்லை. மன ரீதியான பிரச்சனைகளால் 1775 பேர் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் கவுன்சலிங் செல்லும் பெண்களும் அதிகம்.

இதன் காரணமாக விவாகரத்து வழக்குகளும் ஒரு புறம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனை வரதட்சணை என்கிற ஒரு கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல் குடும்ப வன்முறை என்று இணைத்து பார்த்தால் மறைந்து இருக்கும் உண்மைகள் புரிய வரும். இதற்கான சட்டங்கள் இருந்தாலும் அது வழக்குகளாக பதிவு செய்யப்படும் போதுதான் அதற்கான தண்டனைகள் கிடைக்கும்.

 மக்களுக்கு ஒருவித பயமும் புரிதலும் ஏற்படும். இது ஒரு புறம் இருந்தாலும் வரதட்சணை கொடுமைகள் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அரசு கூடுதல் கவனம் செலுத்தி பெண்கள் தங்கும் விடுதிகளை அதிகமாக ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக அப்படி வாழும் பெண்களுக்கு அரசோ அல்லது சுய உதவிக் குழுக்கள் மூலமாக வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் திட்டமாகவே செயல்படுத்த வேண்டும்’’ என்கிறார் வழக்கறிஞர் சுதா.

மா.வினோத்குமார்