பெண்களுக்கான ஐ.பி.எல் போட்டி!



இந்தியாவில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பிரபலம். விளம்பரங்கள், ஸ்பான்சர்கள் என பல கோடிகளை கொட்டி இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. உலகக் கோப்பை மட்டுமில்லாமல் எந்த ஒரு போட்டியி்ல் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி அணியில் உள்ள ஒரு சிலரை சார்ந்து அமையும். அப்படிப்பட்ட புதிய வீரர்களை கண்டறிந்து அணிக்குள் கொண்டு வரவே ஐ.பி.எல் போட்டி தொடங்கப்பட்டது.

பிரமாண்டமாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள் புகழின் உச்சிக்கே சென்று இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் தற்போது தான் மக்கள் மத்தியில் புகழடைய ஆரம்பித்துள்ளனர். இதுவரை இந்திய மகளிர் அணியினர் ஒரு உலகக் கோப்பையினை கூட வெல்லவில்லை என்றாலும் அவர்களுக்கு என தனிப்பட்ட இடம் கிரிக்கெட்டில் இருந்து வருகிறது.

அதன் காரணமாக ஆண்களுக்கு ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவது போலவே பெண்களுக்கும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது. பெண்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினாலும், சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தால் தொடர்ந்து விளையாட முடிவதில்லை. குடும்ப தேவைகளுக்காக கிடைக்கும் வேலைகளுக்கு செல்கின்றனர். ஆண்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் கொடுக்கிற முக்கியத்துவத்தை போலவே பெண்கள் கிரிக்கெட் அணியினருக்கும் கொடுக்க வேண்டும்.

மேலும் பல மாநிலங்களில் இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு இந்திய அணிக்காக விளையாட தயார் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து கடந்த 2018 - 2020 வரை 3 அணிகள் கொண்ட மகளிர் ஐ.பி.எல் தொடர் நடைபெற்றது. ஆனால் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் அந்த தொடரை மீண்டும் நடத்த வேண்டும் என தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டதால், அதை ஏற்றுக் கொண்டுள்ள பி.சி.சி.ஐ 2023 முதல் மீண்டும் மகளிர் ஐ.பி.எல் தொடரை நடத்த திட்டமிட்டது.

தில்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரப்பிரதேச வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. போட்டி இந்தாண்டு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்காக 1,525 வீராங்கனைகள் பதிவு செய்தனர். அதில் இறுதிப் பட்டியலில் 246 இந்தியர்கள், 163 வெளிநாட்டினர் என 409 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

5 அணிகளும் சேர்த்து 90 வீராங்கனைகளை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு அணியும் வெளிநாட்டைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் வரை தேர்வு செய்து கொள்ள முடியும். ஏலத்தில் பங்கேற்றுள்ள 163 வெளிநாட்டு வீராங்கனைகளில் 28 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். இங்கிலாந்தில் இருந்து 27 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் (23), நியூசிலாந்து (19), தென்னாப்பிரிக்கா (17), இலங்கை (15), ஜிம்பாப்வே (11), வங்கதேசம் (9), அயர்லாந்து (6), அமீரகம் (4), ஹாங்காங், அமெரிக்கா, நெதர்லாந்து, தாய்லாந்து நாடு
களில் இருந்து தலா ஒரு வீராங்கனைகளும் இந்த போட்டிகளில் விளையாட தேர்வாகியுள்ளனர்.

முதல் கட்டமாக தேர்வு செய்யப்படும் வீராங்கனைகளுக்கு அடிப்படை தொகையாக 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூஜா வஸ்த்ரகர், ரிச்சா கோஷ், ஸ்னே ராணா, மேக்னா சிங் மற்றும் டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டன் ஷஃபாலி வர்மா என 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் ஆஷ்லே கார்ட்னர், நாட் ஸ்க்ரைவர் ப்ரன்ட், மேக் லேன்னிங், டேன்னி வியாட், அலிசா ஹீலி, ஜெஸ் ஜான்சென், கேத்ரினா ஸ்கைவர் ப்ரன்ட், சினோலா ஜாப்தா, லோரின் ஃபிரி, டேரிஸ் பிரவுன், எல்லிஸ் பெர்ரி, சோஃபி எக்லெஸ்டோன், சோஃபி டிவைன் & டீன்ட்ரா டோட்டின் என 14 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கு அடுத்தபடி ஏலத்தொகையான 40 லட்ச ரூபாய் பட்டியலில் 30 வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் எனும் அடிப்படை ஏலத்தொகை பிரிவுகளிலும் வீராங்கனைகள் ஏலத்தில் விடப்பட்டனர். அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்த அனைத்து வீராங்கனைகளின் பெயர்களும் இந்த இறுதி ஏலப்பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மோஸ்ட் வான்டட் வீரராக ஏலத்தில் முதல் நபராக இந்திய நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனாவுக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் கடுமையாக போட்டிப் போட்டன. ரூ.50 லட்சம் என்ற அடிப்படை தொகையுடன் தொடங்கிய இந்த ஏலம் ரூ.3 கோடியை தாண்டியது. இறுதியில் ரூ.3.4 கோடியை கொடுத்து பெங்களூரு அணி ஸ்மிருதி மந்தனாவை வாங்கியது. 26 வயதாகும் இடது கை நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர். 2013ல் இந்திய அணியில் அறிமுகமானவர், இதுவரை 112, டி20 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 2651 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது அதிகபட்சம் 86 ரன்கள்.

இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத்தியை பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் போட்டி போட்டு வந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் ரூ.1.8 கோடிக்கு ஹர்மன் பிரீத்தியை வாங்கியது. 33 வயதான ஹர்மன் பிரீத்தி டி-20 வரலாற்றில்  மூவாயிரம் ரன்களை கடந்தவர். 15வது வயதில் T20 போட்டியில் அறிமுகமான, இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சஃபாலி வர்மா  ரூ. 2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணைந்தார்.

இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 1.5 கோடிக்கு பெங்களூரும், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனையான தீப்தி சர்மாவை உத்தரப் பிரதேசம் 2.6 கோடிக்கும் வாங்கியது. ரிச்சா கோஸ் 1.9 கோடிக்கு பெங்களூரில் சேர்க்கப்பட்டார். 2023 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அசத்தியவர்.

சர்வதேச அளவில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் ஜெமிமா ரோட்ரிக்ஸை 2.2 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஆல் ரவுண்டரான பூஜா வஸ்திரகரை 1.9 கோடிக்கு மும்பை அணியும் வாங்கியுள்ளது.யாஸ்டிகா பாட்டியா, தேவிகா வைத்யா ஆகியோர் 1 கோடி அளவிலும் ஸ்னே ராணா,  சிகா பாண்டே, ராஜேஸ்வரி கைக்வாத், ஹர்லீன் தியோல், ராதா யாதவ்,  அஞ்சலி சர்வணி போன்ற இந்திய வீராங்கனைகள் லட்சங்களில் வாங்கப்பட்டனர்.

இந்திய நட்சத்திரங்கள் மட்டுமின்றி அயல்நாட்டு வீராங்கனைகளுக்கும் கடுமையான போட்டி நிலவியது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லெய்க் கார்ட்னரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும், இங்கிலாந்தின் நட்சத்திர வீராங்கனை நடாலி சைஃபர் ரூ.3.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் பெற்றது. ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டரான எலிஸ் பெரியை 1.7 கோடிக்கு பெற்ற பெங்களூரு நியூசிலாந்தின் அதிரடி வீராங்கனை மற்றும் கேப்டன் சோபி டெவினை 50 லட்சத்திற்கு பெற்றுள்ளது.

இதர அணிகளை காட்டிலும் தரமான வீராங்கனைகளை தன் அணியில் தக்கவைத்துள்ளது பெங்களூரு. ஆண்களுக்கான ஐ.பி.எல் போட்டிகளை போலவே இந்த ஐ.பி.எல் போட்டிகளும் நடக்கும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளதால் கிரிக்ெகட் போட்டியில் பெண்களின் திறமை வெளிவரும் இடமாக இந்தாண்டு ஐ.பி.எல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மா.வினோத்குமார்