துப்பாக்கி காயம், பேய் தோற்றமும் ஒரு வகையான மேக்கப்தான்!சிதைந்த முகம், கீரல் விழுந்த கண்ணங்கள், துண்டிக்கப்பட்ட விரல், துப்பாக்கியால் தாக்கப்பட்ட காயம், மாடியில் இருந்து குதித்தவரின் ரத்தம், வெள்ளை உடல், பேய் தோற்றம்... என சினிமாவில் இப்படி ஸ்பெஷல் மேக்கப் போடுபவர்களை ஸ்பெஷல் எஃபெக்ட் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்று அழைப்பார்கள்.
ஆரம்பத்தில் ஸ்பெஷல் எஃெபக்ட் மேக்கப் கலைஞர்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் இங்கு காட்சிக்கு ஏற்ப மேக்கப் ேபாடுவது வழக்கமாக இருந்தது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் இதனை கோலிவுட்டில் உள்ள மேக்கப் கலைஞர்களே செய்ய துவங்கியுள்ளனர். அதில் ஒருவர்தான் பெர்சி அலெக்ஸ். விபத்துக்கான மேக்கப் என்றாலே அந்த காட்சிக்கு மேக்கப் போடுவதற்கு பெர்சி செட்டிற்கு ஆஜாராகிவிடுகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் கரூர். எனக்கு சின்ன வயதில் மேக்கப் கலையின் மீது அதீத ஆர்வம். கரூர் போன்ற ஊரில் மேக்கப் என்றால் அதற்காக படிக்கணுமான்னு கேட்பாங்க. அதற்கு பல இடங்களுக்கு செல்ல வேண்டும். அதனால் எங்க வீட்டில் என்னை டெய்லரிங்கில் சேர்த்துவிட்டாங்க. வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். ஆனால் எனக்குள் இருந்த அந்த மேக்கப் தாகம், எங்க வீட்டில் அல்லது உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் போதெல்லாம் வெளிப்பட்டது.

அங்கு பெண்கள், குழந்தைகளுக்கு நான்தான் அலங்காரம் செய்து விடுவேன். மெஹந்தியும் போட்டு விடுவேன். நான் டெய்லரிங் படித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய தையல் பயிற்சி மையத்தின் எதிரில் ஒரு பியூட்டி பார்லர் இருந்தது. அங்கு மேனேஜராக ஒரு பெண்மணி வேலை பார்த்து வந்தார். ஒரு முறை நான் கையில் மெஹந்தி போட்டிருந்ததை பார்த்தார்.

என்னிடம் யார் வைத்துவிட்டது என்று கேட்டார். நானே எனக்கு வைத்துக் கொண்டேன்னு சொன்னேன். அந்த பெண்மணி மிகவும் ஆச்சரியத்துடன், ‘புரபஷனல் மேக்கப் ஆர்ட்டிஸ்டை போல்  மெஹந்தி போட்டு இருக்கிறாய்’ என்று கூறியதுடன் என்னுடைய மேக்கப் கலை மேல் உள்ள ஆர்வத்தை பார்த்து அழகுக்கலை தொழிலில் வர என்ன செய்ய வேண்டும்
என்று எனக்கு வழிகாட்டினார்.

அவரின் ஆலோசனை பேரில் நான் தையல் கலை ஒரு பக்கம்... அழகுக் கலை மறுபக்கம்னு படிச்சேன். அதில் உள்ள அனைத்து விதமான நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு சென்னைக்கு வேலைக்காக வந்தேன். காரணம், கரூரில் என்னால் என் கலை சார்ந்து பல விஷயங்களை அப்கிரேட் செய்து கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட அதே ஸ்டாண்டர்ட் தான் அங்கு மெயின்டெயின் செய்ய முடியும். அதனால் வீட்டில் சொல்லிவிட்டு சென்னைக்கு வந்தேன். இங்கு வந்த போது, தெருவுக்கு தெரு பியூட்டி பார்லர் இருப்பதை கவனித்தேன்.

அவர்கள் எல்லாரும் மணமகள் அலங்காரம் மற்றும் சாதாரண மேக்கப் தான் செய்து வந்தார்கள். அவர்களின் ஒருத்தியாக எனக்கு இருக்க பிடிக்கவில்லை. இதே துறையில் நான் தனித்து இருக்க விரும்பினேன். மற்றவர்கள் செய்யாததை நான் செய்ய விரும்பினேன். அதனால் சினிமாவில் ஃபேஷன் டிசைனராக வேலை செய்ய முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். அந்த சமயம் தான் கோவிட் பாதிப்பால் லாக்டவுன் அறிவிச்சாங்க. வீட்டில் சும்மா இருக்காமல், வேறு ஏதாவது செய்யலாம்னு நினைச்சேன்.

அந்த சமயத்தில் தான் பிரபல நாளிதழில் பொன்னியின் செல்வன் கதை வரைப்படமாக வெளியானது. அதைப் பார்த்ததும் அதுபோல் சரித்திர கதாபாத்திரங்களுக்கு ஆடை வடிவமைக்கலாம் என்று எண்ணம் வந்தது. ஃபோர்ம் ஷீட் வாங்கி வித்தியாசமாக சரித்திர கதையில் வரும்  கதாபாத்திரங்களை உருவாக்க முயன்றேன். ஒரு சில வடிவங்களை ஃபோர்ம் சீட் மூலம் உருவாக்கினேன். எனக்கு தேவையான மின்சார கருவிகள் அப்போது கிடைக்காததால் நான் நினைத்தபடி வடிவமைக்க முடியவில்லை. ஆனால் முயற்சியை கைவிடவும் மனமில்லை. தொடர்ந்து முயற்சித்து, ஃபோர்ம் ஷீட்டில் ஒரு போர்வீர இளவரசியை உருவாக்கினேன்.

 இளவரசிக்கான ஆடை, கிரீடம், காலணிகள் எல்லாம் ஃபோர்ம் ஷீட்டில் வடிவமைச்சேன். போர் வீராங்கனை என்பதால், ஆக்ரோஷமான தோற்றத்தை தர  இரும்பு கம்பியை வைத்து கோடாரியை போல் உருவாக்கினேன். பழமையாகவும் அதே நேரத்தில் மார்டனாகவும் அந்த தோற்றம் இருந்தது. அந்த உடையினை வடிவமைத்து மாடல்கள் அணிந்து ஃபோட்டோ ஷூட் எடுக்க விரும்பினேன்.

ஆனால், நான் வடிவமைத்து இருந்த உடை கச்சைக் கட்டியது போல் இருந்ததால் பலர் மாடலாக வர மறுத்தனர். சுஜா என்பவர் அதற்கு சம்மதிக்க, அவருக்கு ஆடை வடிவமைத்து ஃபோட்டோ ஷூட் செய்தேன். அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டேன்’’ என்றவர் அதன் பிறகுதான் ஸ்பெஷல் எஃபெக்ட் மேக்கப் கலையினை பயின்றுள்ளார்.

‘‘எந்திரன், ஐ போன்ற படங்களில் சிலிக்கான் மேக்கப் பார்த்திருப்பீர்கள். அது  மிகவும் கடினமானது. நிறைய ரசாயனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளின் விலை அதிகம். கவனமாக கையாள வேண்டும். இதன் மூலம் கை, கால்கள் அல்லது உடல் முழுவதும் மோல்ட் எடுத்து சிலிக்கான் மூலமாக உருவாக்கலம். அதற்கு குறைந்தபட்சம் 3 லேயர்கள் போட்டு எடுக்க வேண்டும்.

அதன் பிறகு தகுந்த சரும நிறத்திற்கு மாற்ற வேண்டும். இதனை தொடர்ந்து பேய் படங்களில் பேய் கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட கற்றுக் கொண்டேன். பொதுவாக பேய் தோற்றம் உருவாக்க முடி, கண், பற்களுக்குதான் அதிக கவனம் செலுத்துவார்கள். இதில் கொஞ்சம் செலவு செய்தால், தொழில்நுட்ப உதவியுடன் ஸ்பெஷல் எஃபெக்ட்டு மேக்கப்பை உருவாக்கலாம்.

ஒருமுறை ஒரு இயக்குனர் கையில் பிளேட் கிழித்திருப்பதை போல் மேக்கப் போட வேண்டுமென்று கூறினார். அதற்காக பல மேக்கப்பை போட்டேன். ஆனால் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. கிடைத்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்று என் மனம் பதறியது. என்ன செய்வதுன்னு தெரியல. மேலும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் ஒரு பிளேடை எடுத்து என் கைகளை கீறிக் கொண்டேன்.

நிஜத்தில் எப்படி பிளேடு கீரல் இருக்கும்ன்னு எனக்கு தெரியாததால், என் கையில் ஏற்படுத்திய கீரலை மாடலாக பயன்படுத்தி அதேபோல் மேக்கப் போட்டு காட்டினேன். பார்க்க தத்ரூபமாக இருப்பதாக பாராட்டினார். அதன் பிறகு எனக்கு ஸ்பெஷல் எஃபெக்ட் மேக்கப்புக்கான வாய்ப்பு வர ஆரம்பித்தது. இப்போது சினிமாவில் ஸ்பெஷல் எஃபெக்ட் மேக்கப் செய்து வருகிறேன்.

இந்த மேக்கப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு போடுவது கொஞ்சம் கடினம். அவர்களை மோல்டிங் எடுக்க முடியாது. குழந்தைகளை படம் எடுத்து அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்க வேண்டும். கை ரேகைகள், முடிகள், முக பாவனைகளை மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுவர வேண்டும். என்னுடைய ஆர்வத்தை பார்த்து என் கணவர் அலெக்ஸ் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

நான் புதிதாக ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட் மேக்கப் போட வேண்டும் என்றால் என் கணவர் தான் மாடலாக இருப்பார். உதாரணமாக முகத்தில் குத்தினால் மூக்கு மற்றும் வாய் பகுதி சிதைந்து அவர்கள் எப்படி காட்சியளிப்பார்கள் என்பதை என் கணவருக்கு மேக்கப் போட்டுப் பார்ப்பேன். அதில் ஏதாவது குறை இருந்தால் மாற்றி அமைப்பேன். என் கணவரும் சில ஐடியாக்களை குறிப்பிடுவார். இவ்வாறு நான் பயிற்சி எடுப்பதால், ஷூட்டிங் போது மேக்கப் போட எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

காரணம், ஒருவர் அழகாக எப்படி இருப்பார்னு கற்பனை செய்யலாம். ஆனால் அவரே சிதைந்து போனால் நம் கற்பனையில் தோன்றுவதை வரைந்து பார்த்தால்தான் ஒரு தெளிவு கிடைக்கும். அதனால்தான் என் கணவரை நான் மாடலாக பயன்படுத்தி வருகிறேன்’’ என்றவருக்கு ஹாலிவுட்டில் பயன்படுத்தும் அதிநவீன டெக்னிக்கல் மேக்கப் குறித்து கற்றுக்கொள்ள வேண்டுமாம்.

ஜோதி