வாழ்க்கை+வங்கி=வளம்!குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முக்கியத்துவம்வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், புதிய தொழில்முனைவோர் சுயதொழில் புரிந்து முன்னேற்றம் அடைதல், உள்நாட்டு உற்பத்தியை பெருக்குதல், ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவற்றால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் இயக்கம் ஒரு நாட்டிற்கு மிகவும் அவசியமானது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 45% மற்றும் ஏற்றுமதியில் 40% இவற்றின் பங்களிப்பு இருப்பதால் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இத்துறை மிக முக்கியம்.

இத்துறைக்கு வங்கிகளால் வழங்கப்படும் கடன் விகிதமும் குறைவு. மேலும் அரசும் சிறப்புச் சலுகைகள் வழங்குகின்றன. ஆனால் தொழில்நுட்ப பயன்பாட்டின்மை, உரிய பயிற்சியின்மை, தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தினை சந்தைக்கேற்ப மேம்பாடு செய்ய தவறுதல், சந்தைப்படுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் முடங்கிக் கிடத்தல் ஆகிய காரணங்களால்தான் சில நிறுவனங்கள் நட்டத்தில் மூடப்படுகின்றன.  

அரசு வெளியிட்ட புதிய வரையறையின்படி ஆலை, இயந்திரங்கள் அல்லது உபகரணங்களில் முதலீடு ரூ.1 கோடிக்கு மிகாமல் மற்றும் விற்று முதல் ரூ.5 கோடிக்கு மிகாமல் இயங்குவது குறு நிறுவனமாகும். ஆலை, இயந்திரங்கள் அல்லது உபகரணங்களில் முதலீடு ரூ.10 கோடிக்கு மிகாமல் மற்றும் விற்று முதல் ரூ.50 கோடிக்கு மிகாமல் செயல்புரிவது சிறு நிறுவனம். ஆலை, இயந்திரங்கள் அல்லது உபகரணங்களில் முதலீடு ரூ.50 கோடிக்கு மிகாமல் மற்றும் விற்று முதல் ரூ.250 கோடிக்கு மிகாமல் நடத்தப்படுவது நடுத்தர நிறுவனம். 2021ம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய அரசின் அறிவிப்பின்படி சில்லறை மற்றும் மொத்த வர்த்தக நிறுவனங்களும் உற்பத்தி நிறுவனங்களோடு இத்துறையில் இணைக்கப்பட்டுள்ளன.

வங்கிகள் வழங்கும் நிகர கடனில் 40% முன்னுரிமைத் துறைக்கு வழங்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்து அதில் 7.5% குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு என்றும் அறிவித்துள்ளது. மேலும் மொத்த கடன் தொகை ரூ.10 லட்சம் வரை எந்த பிணையமும் இல்லாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்நிறுவனங்களுக்கு ஆண்டு மொத்த விற்பனை முதலில் 20% நடப்பு மூலதனக் கடனாக வழங்க வேண்டும் என்றும் வங்கித்துறைக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் உள்ளது. இந்த அளவீடு ரூ.500 லட்சம் வரையான நடப்பு மூலதனக் கடனுக்குப் பொருந்தும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக பல பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது. மேலும் வணிகம் மற்றும் உற்பத்தித்துறையில் பயிற்சி தர வங்கிகள் சிறப்பு முகாம்களை நடத்துகின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக இணையத்தின் வழியாகவே வங்கிகடன் பெறலாம். காகிதமில்லா விண்ணப்பச் செயல்முறை விண்ணப்பதாரர் மற்றும் வங்கியின் செலவையும் குறைக்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் அரசும் வங்கிகளும் வழங்கும்போது வங்கிக்கடன், அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களின் வணிகம் மூலம் வாழ்க்கையை மேலும் வளமாக்க முடியும்.  எனவே வணிகர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்துப் பார்ப்போம்.

கடன் அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம்

வணிகர்கள் வங்கிகளில் கடன் பெற்றவுடன் வங்கியின் கடன் சார்ந்த விதிமுறைகள் படி செயல்பட வேண்டும். விண்ணப்பதாரர் ஏற்கனவே கடன் பெற்றிருந்தால், அது குறித்து அனைத்த விவரங்களை பெற்ற பிறகே வங்கி கடன் அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதத்தை வழங்கும். அந்தக் கடிதத்தில்....

(1)கடன் தொகையைப் பெற விண்ணப்பதாரர் தகுதியானவர் என்பதை அறிவிப்பதே வங்கி வழங்கும் கடன் அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதமாகும்.
கடன் பரிவர்த்தனை குறித்த  அனைத்து விவரங்களும் இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

(2)கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான விதிமுறைகள், விளிம்புத்தொகை, வட்டி விகிதம் மற்றும் பிணையம், பொறுப்புறுதி ஆகியவை கடிதத்தில் குறிப்பிடப்
பட்டிருக்கும்.

(3)இந்தக் கடிதம் வங்கிக்கும் கடனாளிக்கும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும்.

(4)அனுமதிக்கப்பட்ட கடன் தொகை மற்றும் வட்டிவிகிதம் (நிலையான வட்டி (Fixed Interest Rate) / மாறுதலுக்குட்பட்ட வட்டி (Floating Interest Rate)), திரும்பிச் செலுத்த வேண்டிய காலம் மற்றும் தவணைத் தொகை குறிப்பிடப்பட்டிருக்கும்.

(5)கடனுக்காக வழங்கப்படும் அடமானமாக நிலையான சொத்து அல்லது அசையும் சொத்து குறித்த பதிவு செய்யவேண்டுமென்றால், சொத்தின் இருப்பிடம், சட்ட ஆவணங்களின் குறியீட்டெண்கள், பதிவாளர் பத்திரங்களின் பதிவெண்கள், பரப்பளவு, சொத்தின் அஞ்சல் முகவரி, உரிமையாளர் பெயர், சொத்தின் சந்தை மதிப்பு மற்றும்
விற்பனை மதிப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

(6)கடனுக்கென்று வங்கி பொறுப்புறுதியைக் கோரியிருந்தால் அதன் விவரம், பொறுப்புறுதியாளரின் பெயர், முகவரி மற்றும் அவரது சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்டவை சேர்த்து கணக்கிடப்பட்ட நிகர மதிப்பு கடிதத்தில் இடம்பெறும்.

(7)கடனுக்கான காப்பீடு விவரங்கள்

அவசியம். கடன் மூலம் வாங்கும் பொருட்களுக்கான காப்பீடு வரம்பு, காப்பீட்டுக்கான காலம், வங்கியில் அடமானமாக  உள்ளவற்றின் பட்டியல் பதிவு செய்ய வேண்டும்.

(8)வங்கியில் கடன்பெற விண்ணப்பதாரர் முத்திரைத் தாளில் எழுதி கையொப்பமிடும் கடன் ஒப்பந்த ஆவணத்திற்கும் வேறுபாடு உள்ளது. கடன் அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதத்தில் விண்ணப்பதாரர் கையொப்பமிட்டு வங்கியிடம் வழங்கிய பிறகு கடன் ஒப்பந்த ஆவணம் அந்தந்த மாநிலத்தின் முத்திரைத்தாள் சட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு
கையெழுத்தாகிறது. கடனாளர், பொறுப்புறுதியாளர் மற்றும் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அலுவலர் ஆகியோர் இதில் கையொப்பமிடுவர்.  

(9) மேற்குறிப்பிட்டவை தவிர அந்தந்த கடன் திட்டத்திற்கு ஏற்ப நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் வங்கியால் பட்டியலிடப்பட்டிருக்கும்.

(10) வேறு எந்த வங்கியிலும் அதே தொழிலகத்திற்காக கடன் பெற மாட்டோம் என்ற உறுதிமொழியை விண்ணப்பதாரர் வழங்க வேண்டும். வங்கியின் ஒப்புதலின்றி கடனாளர் நிறுவன சொத்துக்களை விற்பனை செய்வதில்லை என்றும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக்காலம் தொடங்குவதற்கு முன் கடன் தொகை பெற்ற தேதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் கடன் தொகையைக் கணக்கிட்டு வங்கியில் செலுத்தி விடுவதாகவும் ஒப்புதல் கடிதம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது தவிர கடனாளர் வேறு எங்கும் வணிகத்தில் வந்த பணத்தை முதலீடு செய்யக்கூடாது என்ற நிபந்தனையும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வங்கிக்கும் கடனாளருக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் பயன்படுத்தப்படும் நிதியின் அளவு, நோக்கம், காலம், நிதியின் பாதுகாப்பு மற்றும் அதன் மீதான வருமானம் ஆகியவற்றை தெளிவாக எழுத்து மூலம் தெரிவிப்பதாக இக்கடிதம் அமைகிறது.

உற்பத்தியாளரின் கடமைகள்

கடன் அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் ஒரு துணை ஆவணமாகும். இது கடனுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் அல்ல.  இதில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஆவணங்களை வங்கியிடம் விண்ணப்பதாரர் வழங்க வேண்டும்.

கடிதத்தின் நகலில் விண்ணப்பதாரர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கையொப்பமிட்டு வங்கியிடம் வழங்க வேண்டும். இந்தக் கால வரைவு ஆறு மாதங்கள் என்று வங்கி நிர்ணயிக்கும். ஆனால் கடன்பெறுபவர் கையெழுத்து போடுவதற்குமுன் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

கடனைப் பெறுமுன் விண்ணப்பதாரர் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும்படி வங்கியிடம் கேட்கலாம். இந்நாளில் வங்கிகள் வட்டி விகிதத்தை கடன் விண்ணப்பதாரரிடம் பேசி இருதரப்பும் சேர்ந்து முடிவு செய்கின்றன. கடனுக்கான அடமானமாக வழங்கவேண்டிய சொத்தினை கடன் நிலுவையில் உள்ள காலத்தில் விற்க முடியாது.

ஆனால் அதற்கு ஈடாக அதே பண மதிப்பு அல்லது அதைவிட உயர் பணமதிப்புள்ள சொத்தினை அடமானமாக வங்கியிடம் வழங்க முடியும். ஆனால் அவற்றை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய கூடுதலாகக்  கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் விண்ணப்பதாரர் முன்கூட்டியே திட்டமிட்டு முடிவுசெய்து செயல்பட வேண்டும்.

(அ) உற்பத்தியாளர் தமது நிறுவனத்தில் எப்பொழுதும் கீழ்க்கண்ட அசல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்:

(1) தனிநபர் அடையாள அட்டை. நிறுவனமென்றால் அதன் பதிவுச் சான்றிதழ்.

(2) முகவரி அடையாள அட்டை.

(3) வருமான வரி அலுவலகம் வழங்கியுள்ள அடையாள வருமான வரி செலுத்தும் நிலையான குறியீட்டெண் அட்டை (PAN).

(4) தொழிலாளர் வாரிய சட்டங்களுக்கு உட்பட்டு பெறப்பட்ட பதிவுக்கடிதம் மற்றும் அங்கீகார எண்.

(5) நிறுவனரின் புகைப்படம், பணியாளர் விவரங்கள் புகைப்படங்களுடன். அனைவரின் அடையாள அட்டைகளின் நகல்.

(6) வங்கியில் அடமானம் வைத்துள்ள  ஆவணங்கள். அடமான ஆவணத்தின் சான்றொப்பமிட்ட நகல்.
 
(7) சொத்து மதிப்பீட்டாளர் வழங்கிய சொத்து மதிப்புச் சான்று

(8) சட்ட வல்லுநர் வழங்கிய சொத்து உரிமைச் சான்றிதழ் மற்றும் அதன் இணை ஆவணங்கள்.

(9) அடமானம் வைத்துள்ள சொத்தின் 13 வருடகால வில்லங்கச் சான்றிதழ். புதுச்சேரி போன்ற சில யூனியன் பிரதேசங்களில் 30 ஆண்டுகால வில்லங்கச் சான்றிதழ்கள்.

(10)காப்பீடு நிறுவனம் வழங்கியுள்ள காப்பீட்டு ஆவணங்களின் நகலை வங்கியிடம் வழங்க வேண்டும்.

(ஆ) வணிக ஆவணங்கள்

(1) ஒவ்வொரு உற்பத்திச் சுழற்சிக்கும் வாங்கும் மூலப்பொருட்களின் அளவு மற்றும் விலைப்பட்டியல். உற்பத்திச் செயலாக்க நிலைகள் பற்றிய தகவல்கள், உற்பத்தியான பொருட்களின் அடக்க விலை மதிப்பு மற்றும் சந்தையில் விற்பனை மதிப்பு, இதர செலவுகளின் பட்டியல் மற்றும் லாபம் அல்லது இழப்பு ஆகியவற்றை மென்பதிவாகவோ அல்லது பதிவேடுகள்/ கோப்புகளில் பதிவாகவோ எழுதி வைத்திருக்க வேண்டும்.

இவை கடன் வழங்கிய வங்கியாளர், அரசின் சம்பந்தப்பட்ட துறை ஆகியோரின் பார்வை மற்றும் தணிக்கைக்கு உட்பட்டவையாகும்.   நிறுவனம் வணிகத்தில் பயன்படுத்தப்போகும் வன்பொருள் மற்றும் மூலதனப் பொருட்களை எங்கிருந்து, எப்படி பெறுவது என்பதையும் தொடர்ந்து அவை கிடைக்குமா என்பதையும் திட்டமிட்டு செயல்படவேண்டும்,

(2) கிடங்கில் வைத்திருக்கும் மூலப்பொருள் மற்றும் விற்பனைப்பொருள் ஆகிய சரக்கின் அறிக்கையினை ஒவ்வொரு மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை வங்கியிடம் வழங்க வேண்டும். மேலும் அறிக்கையினை பாதுகாக்க வேண்டும். இருப்பில் உள்ள சரக்கின் மதிப்பில் 80% நடப்பு மூலதனக் கடனாக வங்கி வழங்குவதால் வங்கியாளர் ஆய்விற்கு வரும்போது அவற்றை கணக்கிடுவார்கள். மேலும் இவை உற்பத்தியாளரின் அடுத்தகட்ட உற்பத்தியை திட்டமிடுதலுக்கும் உதவும்.

(3) உடனடியாகப் பணம் செலுத்தாமல் கடனில் வாங்கிய மூலப்பொருட்களின் விவரம், உற்பத்தியான பொருட்களை உடனடியாகப் பணம் பெறாமல் கடனுக்கு விற்பனை செய்த விவரம் ஆகிய கணக்குகள் வங்கியாளரின் தணிக்கைக்கு உட்பட்டவை என்பதால் அவற்றின் விவரம் மற்றும் விற்பனை ரசீதுகள் அடங்கிய கோப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

(4) தொழிலாளர் நலத்துறையின் சட்டங்களுக்கு உட்பட்டு பட்டியலிடப்பட்ட பதிவேடுகள் மற்றும் கோப்புகளை வணிக நிறுவனம் வைத்திருக்க
வேண்டும்.  

(5)  கடனின் தவணைத் தொகையை குறிப்பிட்ட நாளில் செலுத்துவதற்கான நினைவூட்டல் பதிவேடு மற்றும் வங்கியில் செலுத்திய பிறகு அதற்காகப் பெறும் ரசீதுகளின் கோப்படக்கம் அலுவலகத்தில் இருத்தல் அவசியம்.

(6) வங்கியிலிருந்து பெற்ற கடனை அதற்குரிய செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு நோக்கத்திற்காக நிதி திருப்புதல் கூடாது. அதை உறுதிசெய்யும் வகையிலும் அதற்கு ஆதாரமாகவும் ரசீதுகள், ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

(7) வங்கி அவ்வப்போது சில கட்டணங்களை நிர்ணயித்து கடன் கணக்கிலிருந்து வசூலிக்கும். அவற்றை செலுத்துவதற்கான தொகை கணக்கில் இருக்குமாறு நிர்வகிக்க வேண்டும்.

(8) கடனளிப்பவர் அதன் நிதி விவகாரங்கள் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து வழங்குமாறு கடனாளரைக் கோரலாம். கடன் வாங்கியவர் நிலையான நிதி நிலையில் உள்ளாரா என்பதைத் தீர்மானிக்க இது கடன் வழங்குபவருக்கு உதவும்,

(9) கடனாளர் அல்லது இணைக்கடனாளர் இருவருமே சேர்ந்து கடனை திருப்பிச் செலுத்த முடியாத சந்தர்ப்பங்களில் கடனை திருப்பிச் செலுத்தும் கடமை உத்தரவாதம் அளித்த பொறுப்புறுதியாளரைச் சேரும்.  எனவே வாங்கும் கடனுக்கு பொறுப்புறுதி அளிப்பவரும் வணிகம் அல்லது தொழிலகத்தின் இயக்கம் முழுமைக்கும் அந்தந்த காலத்தில் தொடர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். பொறுப்புறுதியாளருக்குத் தெரிவிப்பது கடனாளரின் பணியாகும்.  

 ஒரு உற்பத்தியாளர் தனது தொழிலில் வெற்றி பெற வேண்டுமெனில் பட்டியலிடப்பட்டவற்றை உரிய காலத்தில் செயலாக்கம் செய்துவருவதே அதற்குரிய வழியாகும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ வட்டி மற்றும் தவணைத்தொகையினை வங்கியில் செலுத்துதல், நிதி மற்றும் சரக்குக் கணக்குகளை வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க வழங்குதல், வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வணிகத்தில் திட்டமிடுதல் மற்றும் திட்டமிட்டபடி உழைத்துச் செயல்படுதல், பயனுள்ள தகவல் தொடர்பு மற்றும் வெளிப்படையான வணிக பரிவர்த்தனைகள், நிதியை வேறு திசையில் திருப்பாமல் வங்கியோடு அமைத்த ஒப்பந்தப்படி நிர்வகித்தல், அரசாங்கத்திற்குச் செலுத்தவேண்டிய சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் செலுத்துதல், திறன்மிகு மூலதன மேலாண்மை, வணிக நிர்வாகம் ஆகியவைதான் வணிக உயர்விற்கும் வாழ்க்கையில் வெற்றிக்கும் படிகளாகும்.  

எண்ணிக்கையில் மிக அதிகமானோர் ஈடுபட்டுள்ளது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை என்றாலும், மொத்த கடன் தொகை மற்றும் வணிக அளவீடுகளில் இயங்கும் பெரு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவற்றுக்கான வங்கிக் கடனுதவிகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.