மருத்துவ வழிகாட்டும் ‘டாக்டர் நெட் இந்தியா’!புதிதாக ஒரு நோய் நமக்கு வருகிறது என்றால் எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்? நமக்கு வந்திருக்கும் நோய்க்கு எந்த மருத்துவரை பார்க்க வேண்டும்? அதற்கு என்னென்ன சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்? என பல கேள்விகள் நம்முடைய மனதில் ஓடும். அத்தனை கேள்விக்கான விடைக்கு நம் ஊரின் அருகே இருக்கும் மருத்துவரை அணுகி அவரிடம் அப்பாயின்மென்ட் வாங்கிக் கொடுத்து சிகிச்சை முறைகள் வரை நமக்கு வழிகாட்டினால் எப்படி இருக்கும்? இப்போது பிசியாக இருப்பவர்களில் டாக்டரும் ஒருவர்.

அப்படி இருக்கும் போது இதெல்லாம் எப்படி சாத்தியம் என்ற அடுத்த கேள்விக்கும் விடையளிக்கிறார்கள் கோவையில் இயங்கி வரும் ‘டாக்டர் நெட் இந்தியா’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர். இதனை அபிராமி, அரவிந்தன் தம்பதியினர் தங்களின் சொந்த முயற்சியால் தொடங்கி மக்களுக்கு தேவையான மருத்துவம் சார்ந்த தகவல்களை அளித்து வருகிறார்கள். இந்த மையத்தில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தன்னார்வலர்களாக இயங்கி வருகிறார்கள். இதெல்லாம் எப்படி நடந்தது என்பது குறித்து அபிராமி விவரித்தார்.

‘‘நானும் என் கணவரும் கோவையில்தான் வசித்து வருகிறோம். எனக்கும் என் கணவருக்கும் சமூகம் சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. நான் பயோ டெக்னாலஜி படித்திருக்கிறேன். அவர் எம்.சி.ஏ முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நான் படிப்பு முடிச்சிட்டு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராக இருந்தேன். அது ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிக்கான நிதியினை திரட்டி அதை மக்களின் மருத்துவ தேவைக்கு அளித்து வந்தது.

அந்த சமயத்தில்தான், நோய்க்கு என்ன மாதிரியான சிகிச்சையை செய்ய வேண்டும் என தெரியாமல் பலர் இருப்பதை பார்த்தேன். நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இந்த மாதிரியான நிகழ்வுகளால் தான் மருத்துவ கட்டமைப்பு மீது மக்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள்.  இதை மாற்ற வேண்டும் என்று என் கணவரிடம் சொன்னபோது.

அவர் எனக்கு ஒரு தகவல் சொன்னார். சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது அவருடைய நண்பர்களுடன் இணைந்து மக்களுக்கு மருத்துவ முகாம்களை பல இடங்களில் செயல்படுத்தியுள்ளார். அப்போது பல மருத்துவர்கள் தன்னார்வலராக வந்து சமூக அக்கறையோடு பல மக்களுக்கு சிகிச்சையளித்ததாக தெரிவித்தார். சமூகத்தில் நல்ல எண்ணம் கொண்ட பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்தால் பல மக்கள் பலனடைவார்கள் என்றார்.

அப்படித்தான் ‘டாக்டர் நெட் இந்தியா’ தொண்டு நிறுவனம் உருவாச்சு. ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் சார்ந்த வழிகாட்டுதல்களையும் சிகிச்சைகளையும் சொல்லி கொடுக்கும் நோக்கமாக இந்த நிறுவனம் செயல்பட வேண்டும் என்பதில் நானும் என் கணவரும் உறுதியாக இருந்தோம்.

இதற்காக எங்களுடைய சொந்தத்தில் இருக்கும் மருத்துவர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டோம். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மட்டுமே கடவுள். மக்களிடம் அன்பு காட்டுவதே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கொடுக்கும் முதல் மருந்து. அந்த மருந்து நோயாளிகளை எப்படிப்பட்ட நோயிலிருந்து மீட்டுக் கொண்டு வரும்.

மருத்துவர்களை சந்திக்க வரும் நோயாளிகளிடம் அன்பாக பேசுவதும் பரிவாக நடந்து கொள்வதுமே முக்கியம் என்று பலர் தெரிவித்தார்கள். அதன் பிறகு நானும் என் கணவரும் மருத்துவர்களை அணுகி எங்களின் நோக்கத்தை வெளிப்படுத்திய போது அனைவரும் வரவேற்பும் ஆதரவும் கொடுத்தனர். அவர்களை எங்களின் தொண்டு நிறுவனத்தில் ஒருங்கிணைத்தோம்.

இதில் ஆரம்பத்தில் எனக்கும் என் கணவருக்கும் நண்பர்களாய் இருந்த மருத்துவர்களைக் கொண்டு ஒரு குழுவை உருவாக்கினோம் அதன்படி அதிகமான மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் எடுக்க வேண்டும், எங்கு செல்ல வேண்டும், எந்த மருத்துவரை அணுக வேண்டும், எந்த நோய்க்கு எந்த  சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது வரை ஒரு வழிகாட்டியாக இந்த நிறுவனம் செயல்பட ஆரம்பித்தது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எங்கள் குழுவில் இருக்கும் மருத்துவர்கள் ஒவ்வொரு துறை மற்றும் ஊரைச் சார்ந்தவர்கள். ஒரு நபர் தனக்கு இந்த நோய் இருக்கிறது என எங்களிடம் சொல்லும் போது அந்த நபர் இருக்கும் ஊரின் அருகில் இருக்கும் எங்கள் குழுவை சேர்ந்த மருத்துவரிடம் பேசி அவரை சந்திப்பதற்கான நேரம் மற்றும் நோயின் தன்மை, சிகிச்சைகள் எல்லாவற்றையும் கேட்டு அந்த நபரிடம் சொல்வோம்.

அவர் மருத்துவரை அணுகும் போது பரிவாகவும் அன்பாகவும் பேசி அவருக்கு ஒரு நம்பிக்கையை அளித்து, தேவையான சிகிச்சைகள் முழுவதும் செய்து புன்னகையோடு அனுப்பி வைப்பார். இதுவரை 1400க்கும் மேற்பட்ட நோயாளிகளையும் மருத்துவர்களையும் இணைக்கும் பாலமாக நாங்கள் இருந்துள்ளோம்’’ என்றவர் எப்படி இந்த நிறுவனம் மக்களிடையே  வேலை செய்கிறது என சொல்லத் தொடங்கினார்.

 ‘‘நாங்கள் எங்க தொண்டு நிறுவனத்தை தொடங்கிய போது முதலில் எங்களின் டார்கெட் கிராமப்புறம் மற்றும் பழங்குடியின மக்கள் என்று முடிவு செய்தோம். அவர்களுக்கு மருத்துவ கட்டமைப்பு குறித்து தெரிவதில்லை. கிராமங்களுக்கு சென்று அங்கு இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எங்களின் சேவை குறித்து விவரித்தோம்.

தீவிரமான பாதிப்பு உள்ள நோயாளிகள் இருந்தால் தெரியப்படுத்த சொல்லி எங்களின் விவரங்களை கொடுத்து விட்டு வருவோம். மேலும் அதே கிராமத்தில் சிறிய அளவில் அமைப்பாக செயல்பட்டு வருபவர்களை சந்தித்து எங்களை அறிமுகம் செய்து கொண்டு, மருத்துவம் சார்ந்த உதவிகள் தேவைப்படும் என்றால் எங்களை அழைக்க  சொல்லி  தெரிவிப்போம்’’ என்கிறார் அபிராமி.

‘‘தரமான கல்வி ஒரு மனிதருக்கு எப்படி அவசியமோ அதேபோல் தரமான மருத்துவமும் கட்டாயம் கொடுக்க வேண்டும்’’ என பேசத் தொடங்குகிறார் அரவிந்தன். ‘‘எங்களின் தன்னார்வ தொண்டு நிறுவனம் பற்றி கேள்விப்பட்டு கிராமப்புற மக்களும் எங்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர். மருத்துவ செலவுகளுக்கு பணம் கட்ட முடியாதவர்களுக்கு அரசின் காப்பீடு திட்டம் பற்றியும், அந்த காப்பீடு திட்டம் எந்த மருத்துவமனையில் செல்லுபடியாகும் என்பதுவரை சொல்லிப் புரிய வைப்போம். தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு நபருமே அரசின் காப்பீடு அட்டையை பெற தகுதியுடையவர்கள். புதிதாக காப்பீடு அட்டைக்கு விண்ணப்பித்தால் இரண்டு நாட்களில் கிடைத்து விடும். அதற்கான வேலைகளையும் நாங்கள் செய்து தந்திருக்கிறோம்.

இதுவரை எங்களுடைய டாக்டர் நெட் குழுவில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். இருவராக ஆரம்பித்த நிறுவனம் இன்று 20 பேராக உயர்ந்திருக்கிறது. இதில் எல்லோரும் மக்களுக்கு சேவையாற்றக் கூடியவர்கள் மட்டுமே.  நாங்கள் அருகில் இருக்கும் கிராம மக்களிடையே மருத்துவம் பற்றி விழிப்புணர்வு நடத்தும் போது, பெண்கள் தங்களின் கணவர்கள் குடிக்கு அடிமையாகி இருப்பதாக தெரிவித்தார்கள். அவர்களை மீட்டெடுக்க குடி போதை ஒழிப்பு நிகழ்ச்சியினை பல பகுதிகளில் நடத்தி வருகிறோம்.

மற்ற மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மருத்துவ கட்டமைப்புகள் போதிய அளவில் இருக்கின்றன. நம்முடைய நாட்டில் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு உடல்நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். கொரோனா போன்ற நோய்கள் வரும் போதுதான் நம்முடைய மருத்துவ கட்டமைப்பு குறித்து அக்கறை கொள்கிறோம். மருத்துவ முறைகள் சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு உரிமை என இரண்டு பிரிவாக செயல்படும்.

சுகாதார கட்டமைப்பு என்பது ஒரு நோய் வந்த பின்னர் அதை குணப்படுத்தும் அளவிற்கு மருத்துவ கட்டமைப்புகளை கொண்டிருக்க வேண்டும் என்பது. இன்னொன்று ஒரு நோய் உருவாவதற்கான காரணிகளை தடுப்பது. உதாரணமாக அசுத்தமான தண்ணீர், சாக்கடைகளை தூர்வாராமல் இருப்பது போன்றவற்றால் நோய்கள் உருவாகும் நிலையும் இருக்கிறது.

இந்த மாதிரி நோய்கள் உருவாகும் காரணிகளையே ஒழிப்பது என்ற வகையில் நாம் பார்க்க வேண்டும். சேவை என்ற கோணத்தில் அணுகாமல், தனி மனித அடிப்படை உரிமை என்கிற கோணத்தில் அரசின் நலத்திட்டங்கள் செயல்பட்டால் மேலும் சிறப்பாக இருக்கும். அதே போல மருத்துவம் என்பதை ஒரு தனி மனிதனின் கட்டாய உரிமை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார் அரவிந்தன்.

மா.வினோத்குமார்