முடியாட்சிக்கு முடிவெழுதிய பெண்கள் போராட்டம்சர்வதேச மகளிர் தினம் பெண்களுக்கான வாழ்த்துச் செய்தி மட்டுமல்ல. அது பெண்களின் போராட்டம் நிறைந்த ஒரு வரலாறு.

பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் நிறைந்த தாய்வழிச் சமூகம் நம்முடையது. நில உடமை சமூக அமைப்பு உருவானபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பணிப் பிரிவினை உருவானது. பெண்கள் சமூகம், வாரிசுகளுக்காகவும், குடும்ப அமைப்புக்காகவும் என்ற தோற்றம் மெல்ல மெல்ல உருவாகி பெண்கள் ஒடுக்கப்பட்ட நிலையில், 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆயிரக் கணக்கான பெண்கள் ரஷ்யா, இத்தாலி, போலந்து போன்ற நாடுகளில் இருந்து, பணிக்கென நியூயார்க்கில் குடிபெயர்ந்து வாழும் சூழல் உருவானது. இடம் பெயர்ந்த பெண்கள் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கால் பதிக்கத் தொடங்கினர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணியில் கால் பதித்தாலும் அவர்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்பட்டு, அநீதியும் இழைக்கப்பட்டது.

மணிக்கணக்கில் வேலை, குறைந்த ஊதியம், தையலுக்காகப் பயன்படுத்தும் ஊசி, நூல், உட்காரும் நாற்காலியில் தொடங்கி அனைத்துக்கும் வரி கட்ட வேண்டும் என ஆரம்பித்து, கழிவறையை அதிக நேரம் பயன்படுத்துவதற்கெல்லாம் அபராதம் விதிக்கத் தொடங்கிய அவலநிலையும் தொடர்ந்தது. தொழிலாளர் போராட்டம் என்பது ஆண்களை மையப்படுத்தியே இருந்த காலகட்டத்தில், பெண்கள் தங்கள் உரிமைக்காக தாங்களே களம்காண முடிவு செய்தனர்.

முதன் முதலில் நியூ இங்கிலாந்து பகுதியில், தையல் நிறுவனப் பெண்கள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அதன் பிறகு பெண்கள் போராட்டம் பல இடங்களிலும் விரிவடையத் தொடங்கியது. இதன் பின்னணியில் உழைக்கும் பெண்கள் சங்கம் உருவானது. குறைந்த வேலை நேரம், உழைப்புக்கேற்ற கூலி, வாக்குரிமை போன்ற அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து 15 ஆயிரம் பெண்கள் அணி திரண்டு நியூயார்க் நகரத்தை ஸ்தம்பிக்க செய்தனர். இதில் உந்தப்பட்ட நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கப் பெண்களும் தங்களை போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, 1910-ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் பெண்கள் உரிமை மாநாடு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சியாளர் கிளாரா ஜெட்கின்.

உலகை திரும்பிப்பார்க்க வைத்த புரட்சி என்றால், 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சி, இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜார்ஜின் ஆட்சியே கவிழ்ந்தது எனலாம்.
ரஷ்யாவில் போர் வேண்டாம் அமைதியும் ரொட்டியும்தான் வேண்டும் என்ற முழக்கத்துடன் மார்ச் 8ம் தேதி பெண்கள் முன்நின்று போராட்டம் நடத்தினர். 4 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டம் ரஷ்ய மன்னர் ஜார்ஜின் முடியாட்சிக்கு முடிவெழுதியதோடு, பெண்களுக்கான வாக்குரிமையையும் பெற்றுத் தந்தது.

போராட்டத்தின் வீரியம் சற்றும் குறையாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துசென்ற பெருமை பெண் போராளி கிளாரா ஜெட்கினை சேரும். அடிப்படையில் கம்யூனிஸ்ட்வாதியான இவர்தான், உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினத்தை முன்மொழிந்தார். 17 நாடுகளில் இருந்துவந்த 100 பெண்களும் கிளாராவை வழிமொழிந்தனர். இதனையடுத்து 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார்.

ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில் புரட்சி நடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்தனர், அவர்கள் கோரிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ம் தேதியாக இருந்தது. அதனை அடுத்து உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அதற்குப்பிறகு, 1975ம் ஆண்டு மார்ச் 8ம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்தது ஐ.நா. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்துக்கு ஐ.நா. மகளிர் அமைப்பு ஒரு கருப்பொருளை முன்மொழிகிறது. அதன்படி இந்த ஆண்டு ‘‘பாலின சமத்துவத்திற்கான தொழில்நுட்பம் மற்றும் புதுமை” என்ற கருப்பொருள் முன்மொழியப்படுகிறது.

மகேஸ்வரி நாகராஜன்