சக மனிதருக்கு உதவும் கல்வியை நான் கொடுக்கிறேன்!ஆசிரியர்கள் சமூக அக்கறையுடன் மாணவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் எனச் சொல்வார்கள். சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு மாற்றமும் ஏதாவது ஒரு தனி மனிதர்களினால் உருவானவையே. பெரிய அளவிலான மாற்றம் வருகிறதோ இல்லையோ தொடர்ந்து மக்களுக்கும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்து கைதூக்கி விட நினைப்பவர்கள் ஏராளம். அப்படியான ஒருவர்தான் கல்லூரி ஆசிரியர் கனகரத்தினம். தனி மனுஷியாக கிராமப்புற பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி அவர்களுக்காக வேலை செய்து வரும் இவரிடம் பேசிய போது...

‘‘சொந்த ஊரு பொள்ளாச்சி அடுத்து கோவில்பாளையம். விவசாய குடும்பம். எங்க வீட்டில் நான் மூத்த பெண். சின்ன வயசுல இருந்தே நல்லா படிக்கணும்னு ஆசை இருந்தது. நான் படிச்சது எல்லாமே அரசுப் பள்ளியில்தான். நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் என்னுடைய ஆறாம் வகுப்பு டீச்சர் ஷீலா மேடம். பள்ளி முடிந்ததும் ஆறு மணி வரை இலவச டியூஷன் வகுப்புகள் எடுப்பார். நிறைய பேர் பணம் வாங்கிக்கொண்டு டியூஷன் எடுக்கும் நேரத்தில் அவர் மட்டும்  இலவசமாக வகுப்புகள் எடுப்பார்.

எதற்காக இப்படி செய்கிறீர்கள் என பலர் அவரிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில், ‘எனக்கு தேவையான சம்பளத்தை அரசு கொடுக்கிறது. மாணவர்களை படிக்க வைப்பது என்னுடைய கடமை. அவர்களில் எல்லோரும் நன்றாக படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. சில குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பு தேவை. அதே சமயம் டியூஷனுக்கும் அவர்களால் பணம் தர முடியாத நிலையில் இருப்பார்கள்.

அவர்களுக்கு நான் சொல்லித் தருகிறேன்’ என்று பதில் சொல்வார். இதை பார்த்த எனக்கும் சமூக வேலைகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு நன்றாக படிக்க வேண்டும். பட்டப் படிப்பு படித்து முடிச்சதும் எனக்கு வீட்டில் கல்யாணம் பேசி முடித்தார்கள். என் கணவரும் நான் மேலும் படிக்க தடை விதிக்கவில்லை. எம்.ஃபில் முடித்ததும் எனக்கு கல்லூரியில் ஆசிரியராக வேலை கிடைத்தது. சில வருடங்கள் பேராசிரியராக வேலை பார்த்தேன்’’ என்றவர் சமூக சேவையிலும் ஈடுபட ஆரம்பித்தார்.

‘‘எங்களின் கல்லூரியில் ‘சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்’ என்கிற பெயரில் ஒரு மாணவர் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இதே போல வெளி மக்களுக்கும் செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்காக பக்கத்து ஊர்களில் உள்ள மக்களிடம் சென்று அவர்களுடைய படிப்பிற்கு ஏற்றவாறு சுய உதவி குழுக்கள் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொடங்கினேன்.

முதலில் பக்கத்தில் உள்ள திருமலையாம்பாளையத்தில் வசிக்கும் பெண்களிடம் சென்று பேசினேன். அதில் பல பெண்கள் ‘என்ன வேலை செய்வது என தெரியவில்லை. ஆனால், வேலை கொடுத்தால் நாங்கள் செய்ய தயாராக இருப்பதாக’ சொன்னார்கள்.

ஆரம்பத்தில் நான் கிராமத்து பெண்களிடம் பேசும் போது அவர்களால் சொந்தமாக தொழில் செய்து ஒரு தொழில் முனைவோராக  ஆக முடியுமா என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை. அந்த நம்பிக்கையினை அவர்கள் மனதில் பதிய வைக்க தொடர்ந்து அவர்களை சந்தித்து பேசினேன். அவர்களுக்கான நம்பிக்கையை கொடுத்தேன். சில பெண்கள் கம்பெனிகளில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் அவர்களுக்கு தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று எண்ணமும் இருக்கும்.

அப்படி இருப்பவர்களுக்கு அவர்களுடைய நிறுவனத்திற்கு சென்று பேசி வகுப்புகள் நடக்கும் நேரத்தில் மட்டும் அனுமதி கொடுக்குமாறு அனுமதி பெற்றேன். சுய உதவி குழுக்கள் சில வகுப்புகளை பெண்களுக்கு இலவசமாக எடுத்து வந்தனர். நான் அவர்களிடம் பேசி 21 நாட்கள் கைவினைப் பொருட்கள் செய்வது பற்றி வகுப்புகள் எடுத்தோம். ஆர்வமாக கற்றுக் கொண்டு தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு வங்கி மூலம் கடன் வாங்கி கொடுத்தோம்.

அவர்களும் தொழில்முனைவோர்களாக  உருவானார்கள். ஆனால் அவர்கள் தயாரித்த பொருட்களை எங்கு எப்படி விற்பனை செய்வது என்பது கேள்வியாக இருந்தது. இதற்காக அந்த பெண்கள் செய்யும் பொருட்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை எங்கள் கல்லூரியில் ஸ்டால்கள் அமைத்து அந்த பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய அனுமதி பெற்றேன். மாணவர்களும் ஆர்வமாக பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைத்தது. நான்  கிராமத்தில் வளர்ந்தவள் என்பதால் கிராமத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் அவர்களுடைய சூழ்நிலை பற்றி நன்றாக தெரியும். இதனால் அவர்களுடன் என்னால் இயல்பாக பழக முடிந்தது.

அவர்களும் என்னை அவர்களில் ஒருத்தியாக நினைத்து தங்களுடைய சொந்த வாழ்க்கை பற்றி பேசுவார்கள். அப்போது தான் பல பெண்களின் கணவர்கள் குடிக்கு அடிமையாகி வீட்டிற்கு சம்பாத்தியம் தருவதில்லை என்பது புரிந்தது. அதனால் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நினைச்சேன். என் கல்லூரியின் அனுமதியோடு குடிப்பழக்கம் பற்றிய விழிப்புணர்வு  மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து ஒரு நிகழ்ச்சியினை அவர்கள் பகுதியில் நடத்தினோம்.

இது மட்டுமில்லாமல் பாலியல் கல்வி குறித்த குட் டச், பேட் டச் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் குற்றங்கள் சம்பந்தமாக வகுப்புகள் எடுத்தேன். பின்னர் அந்த கல்லூரி மாணவர்கள் சென்று சுற்றுவட்டாரத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்க ஏற்பாடு செய்தேன். இதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சமூகம் குறித்த அக்கறை வந்தது. பல மாணவர்கள் தானாகவே முன்னின்று பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர்’’ என்றவர் திருநங்கை சமூகத்தினரிடையேயும் தொழில் முனைவோர்களை உருவாக்கிஉள்ளார்.

‘‘நான் தினமும் வீட்டுக்கு செல்லும் வழியில் சாலையில் திருநங்கைகள் கைதட்டி காசு கேட்பார்கள். அவர்களிடம் ‘வேலை செய்யலாமே, ஏன் இப்படி காசு கேட்கணும்’னு கேட்ட போது. ‘எங்களுக்கு யாரும் வேலை வாய்ப்புகளை தருவதில்லை. நாங்க விருப்பப்பட்டு இப்படி காசு கேட்பதில்லை. நாங்களும் வாழவேண்டுமே இந்த சமூகத்தில். வேலை கிடைச்சா கண்டிப்பாக நன்றாக உழைப்போம்’ என்றனர்.

அவர்களின் வலியினை என்னால் உணர முடிந்தது. அவர்களுக்கும் ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர விரும்பினேன். தையல் வகுப்புகளில் அவர்களை சேர்த்து, கோவை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் தையல் மெஷின்களை வாங்கிக் கொடுத்தோம். நான் சமூகம் சார்ந்து வேலை செய்வதை பார்த்த பலர் ‘நல்ல சம்பளம் கிடைக்கிறது.

அதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாமே. இப்படி கஷ்டப்படவேண்டும் என்ற அவசியம் இல்லையே’ என்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்வது ஒன்றுதான். நான் பெற்ற கல்வி என்னுடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்காக. அந்த அறிவுத்திறன் என்னுடைய மன திருப்திக்காக வேலை செய்ய சொல்கிறது. அது இந்த மாதிரி சமூக வேலைகளில்தான் உள்ளது. சக மனிதருக்கு உதவ சொல்லித் தருவதே கல்வி.

அதை ஆசிரியர்களாகிய நாம்தான் முன்னின்று மாணவர்களுக்கு செய்து காட்ட வேண்டும். நான் ஒருவர் மேலே உயர ஒரு ஏணியாகத்தான் இருக்கிறேன். அதை பிடித்துக் கொண்டு மேலே வருவது அவர்களின் திறமை. என்னுடைய இந்த சமூக சிந்தனைக்கு என் கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. நான் நடத்தும் சமூக சேவை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் என்னுடன் சேர்ந்து செயல்படவும் நிர்வாகம் அனுமதி அளித்து வருகிறது. என்னால் முடியும் அளவிற்கு சமூக பங்களிப்பை இயன்ற வரை செய்வேன். இது என்னுடைய கடமை’’ என்கிறார் கனகரத்தினம்.

மா.வினோத்குமார்