வடமாநில பொங்கல் திருவிழா!
வாசகர் பகுதி
 பொங்கல் தமிழர்களின் பண்டிகை. அன்றைய தினம் வாசலில் பூக்கோலம் பூண்டு, பொங்கல் பாத்திரத்தில் மஞ்சள் கிழங்கை கட்டி பொங்கல் வைப்பது நம்முடைய மரபு. இந்த மரபு நம்முடைய பாரம்பரிய பண்டிகை மட்டும் இல்லை. இந்தியா முழுக்க இதனை மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இதனை விசேஷமாகவும், விமர்சியாகவும் மக்கள் காலம் காலமாக கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் வழிபாட்டு முறைகளில் மட்டுமே சில மாற்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் எவ்வாறு பொங்கலை விமர்சியாக கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்...
மகாராஷ்டிராவில் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். அன்று எள்ளு உருண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இவர்களின் பாரம்பரியம். மூன்று நாள் விழாவில் முதல் நாள் போகிப் பண்டிகை. அன்று மராட்டியர்கள் எள் சேர்த்து கேழ்வரகு மாவில் ரொட்டி செய்து அத்துடன் காய்கறிகளில் கூட்டு செய்து சூரிய பகவானுக்கு படைக்கிறார்கள். இரண்டாம் நாள் சங்கராந்தி அன்று வெல்லத்தினால் ஆன எள்ளுருண்டை தயார் செய்து கரும்புடன் படைக்கிறார்கள். மூன்றாம் நாள் நல்லெண்ணெயில் பொரித்த வடை தயார் செய்து சூரிய பகவானுக்குப் படைக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்தில் பொங்கலின் மறுபெயர் கங்காசாகர் மேளா. பொங்கல் அன்று கங்கைக் கரையில் ஆடிப்பாடி கும்மியடித்து ஒரே நேரத்தில் நதியில் நீராடி சூரிய பகவானை வழிபடுவார்கள். காஷ்மீரில் பொங்கல் திருநாளை கிச்சடி அமாவாசை எனப்படும் அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. காஷ்மீர் யட்சர்களின் தலைவனை அழைத்து, பருப்பு, நெய், அரிசி கலந்த கிச்சடி எனப்படும் உணவைப் பரிமாறுவது இவர்களின் வழக்கம்.
பொங்கல் திருநாளை பஞ்சாப்பிலும், ஹரியானாவிலும் லோஹிரி என்று அழைக்கின்றனர். அன்றைய தினம் இனிப்பு சுவை மிகுந்த அரிசி, பாப்கார்ன் எனப்படும் சோளப்பொரி ஆகியவற்றை தீயிலிட்டு கிராமியப் பாடல்களை பாடி மகிழ்வர். காவி மற்றும் அரிசி மாவு கலந்த குழம்பை சகோதரர்களின் நெற்றியிலிட்டு தீமையிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்திப்பர்.
கர்நாடகாவில் பாலுடன் அரிசி சேர்த்துப் பொங்கலிடுவது வழக்கம். காளை மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டி பந்தயமும், கோழிச்சண்டையும் இங்கு பிரபலமானவை. ராஜஸ்தானில் மகர சங்கராந்தி அன்று பட்டம் விடும் போட்டி, சைக்கிள் ரேஸ் போன்ற விளையாட்டுப் போட்டி நடைபெறும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
|