சுகமான வாழ்வளிக்கும் சுந்தர மாகாளிசக்தி தரிசனம்-கொரநாட்டுக் கருப்பூர்

கும்பம் கவிழ்ந்து அமுதம் பெருகி ஓடிய குடமூக்கு எனும் குடந்தையினின்று எழுந்த அமுத வாசம் வானவர்களை பூமிக்கு வா என அழைத்தது. மேருவை சுருக்கிட்டு கடைந்த அமுதம் புவியில் இத்தனை எளிமையாக நிலை கொண்டதே என தேவக்கூட்டம் வியந்தது. அந்த அமுதக் கலசத்தை சுற்றி நின்று யாகம் செய்வோம் என மகிழ்ந்து முடிவு செய்தது. வானவர்கள் விண்ணில் மிதந்து வந்து பூவுலகம் தங்கினர்.

கும்ப நகரம் கண்டு கைகூப்பினர். பௌண்டரீக யாகம் வளர்த்தனர். ஈசனும் யாகத் தணலின் மத்தியில் ஜோதியாக ஒளிர்ந்தான். யாகத்தினின்று வெளிப்பட்ட அருவுருவான அமுதம் எனும் ஆத்ம சக்தியான ஈசனின் அருட்சக்தி, தேவர்களை முதலில் தழுவியது. அந்த அமுத அலைக்குள் சிக்கி மோனத் திருக்குளமாம் ஈசனின் அருளுக்குள் நீந்தினர். அந்த அமுத சக்தியின் திரட்சி, திருக்குடந்தைக்கு அருகிலுள்ள ஐந்து தலங்களில் சக்திக் கோளமாக சுழன்று, அங்கெல்லாம் தனித்தனியாக ஒளிர்ந்தது.  

ஐந்தில் ஒரு அமுதத் துளி, அடர்ந்திருந்த பாடலவனம் எனும் பாதிரி மரங்கள் நிறைந்த கானகத்தினுள் புகுந்தது. அங்கேயே தங்கியது. லிங்க ரூபமாக பொங்கியது. ஈசன் வெளிப்பட்டிருக்கிறான் என்பதை அறிந்த தேவர்கள் ஐந்து தலங்களுக்கும் சென்று பூஜித்தனர். பாதிரி வனத்தில் அம்மையும் ஐயனோடு எழுந்தருளினாள். அன்று திருப்பாதிரியில் பாதிரி விருட்சத்தின் அடியில் தவம் செய்தவள் இன்று பாடலவன மத்தியில் ஐயனுக்கு இணையாக நின்றாள். கயிலை தம்பதிகள் நின்ற அழகு பார்த்து சகலரும் சொக்கினர். எத்தனை அழகு என வியந்து மாய்ந்தனர்.

ஒரு சேர ‘சுந்தரேசா... சுந்தரேசா...’ என வாய் நிறைய அவனை அழைத்தனர். அவனும் அருளோடும், அழகோடும் ஒன்றிசைந்த கோலம் காட்டினான். அழகம்மையான அபிராமியும் உடன் அமர்ந்து ஆற்றுப்படுத்தினாள். கும்ப கோணத்தை சுற்றியுள்ள பஞ்சகுரோசத் தலங்களில் திருநாகேஸ்வரம், திருவிடை மருதூர், தாராசுரம், சுவாமிமலை இவற்றோடு திருப்பாடலவனம் எனும் கருப்பூரும் ஒன்று. பிரம்மன் ஈசன் முன் அமர்ந்து ஞான உபதேசம் பெற்றான். இந்திரன், குபேரன், அகத்தியர் என்று பலரும் வணங்கினர். கும்பகோண மகாமக குளத்தில் நீராடுமுன் இந்த பஞ்சகோசத் தலங்களை தரிசித்துச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

நால்வரில் ஒருவரும் சமயக் குரவருமான சுந்தரர் சுந்தரேஸ்வரரை தரிசித்தார். ‘‘கச்சியின் இன்கருப்பூர் விருப்பன் கருதிக்கசிவார்....’’ என்று தொடங்கி ‘‘நச்சிய நன்னிலத்து பெருங்கோயில் நயந்தவனே’’ என்று துதிக்கிறார். இக்கோயில், சோழர் காலத்தில் 1186&1216ம் காலகட்டத்திற்குள் எடுப்பிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

புராண காலமும், வரலாறும் மாறிமாறி திருப்பாடலவனம் எனும் கருப்பூரை அருந்தலமாக மாற்றியிருந்தது. பாரதத்தின் தென்பகுதியை கடந்து வட பகுதியிலிருந்து காளி இத்தலத்தை தீர்க்கமாக பார்த்தாள். அத்தலத்தின் திருப்பெயரே அவளுடையதுதான்& உஜ்ஜயினி மாகாளிப் பட்டினம். மாமன்னன் விக்ரமாதித்தன் ஆராதித்த ஆதிதேவி இவள்.

காளியின் திருவிளையாடல் தொடங்கியது. விக்ரமாதித்தன் காளியின் திருவடியில் கலக்கும் காலமும் நெருங்கியது. எதையோ மனதில் வைத்துக்கொண்டு காளி இரண்டாகப் பிரிந்தாள். விக்ரமாதித்தனும் அவளின் விளையாடல் காலக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டது என அறிந்து, அவளை ஒரு பெட்டிக்குள் வைத்துப் பூட்டினான்.

உஜ்ஜயினியில் ஓடும் ஆறுகளில் ஒன்றில் மிதக்க விட்டான். காளி காவிரியோடு கைகோர்த்தாள். களிப்போடும், குதூகலத்தோடும், செழிப்போடும், அமுத நுரையோடும் காவிரி காளியை தாங்கினாள். எங்கும் தங்காது விரைந்து வந்த அவள், திருக்குடந்தை அருகே வரும்போது தயங்கினாள். வெள்ளிக்கிழமை. பௌர்ணமி நாள். காளி பெட்டியோடு காவிரியின் ஒரு துறையில் ஒதுங்கினாள்.

சுந்தரேஸ்வரரும், ஆலங்காட்டில் ஆடிய காளியை எதிர்பார்த்து காத்திருந்தார். அருகே வந்து விட்டதை உணர்ந்த அபிராமியின் முகமும் பூத்திருந்தது. வானில் பௌர்ணமி நிலவு பூரித்திருந்தது. கருப்பூர் கிராமத்து மக்கள் ஈசனை வணங்கி காவிரியையும் வணங்கி வழிபட குவிந்தனர். சட்டென்று ஆச்சரியமாக அந்தப் பெட்டியைப் பார்த்தனர். அதேசமயம் அச்சமும் அவர்களுக்குள் பரவியது. அது என்னவாக இருக்கும் என்று சிந்திப்பதற்குள் கூட்டத்தினிடையே எட்டு வயது சிறுமி ஒருத்தி பெட்டியை நெருங்கினாள். அவள் முகம் அனைவரையும் பரவசப்பட வைத்தது. கண்களை மூடினாள்.

தமிழ் மறையையும், ரிக், யஜுர் முதலான நான்கு வேதத்தையும் மணிப் பிரவாளமாக வெளிப்படுத்தினாள். வேதத்தின் மூலப்பொருளானவளும், ஊழிக் காலத்தில் அனைத்தும் தமக்குள் ஏற்பவளுமான காளி பெட்டிக்குள் இருப்பதை விவரித்தாள். கூட்டம் பக்தியும், பயமுமாக பணிந்தது. சிறுமி அருகேயிருந்த பெட்டியைத் திறந்தாள். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வேலைப்பாடுகளோடு கூடிய காளியின் மரச்சிலையொன்று பாதியளவு காட்சியளித்தது.

காவிரியில் நீராடி, பக்தியோடு பெட்டியை தூக்கி ஊரின் தெற்குப் பகுதியில் குடில் அமைத்து அதனுள் வைத்து வழிபட்டனர். திடீரென்று குடிசை தீப்பற்றி எரிந்தது. ஆனால், பெட்டிக்குச் சேதம் ஒன்றுமில்லை. ஏதேனும் ஆபத்தின் அறிகுறியோ என ஊர் மக்கள் பதறினர். காஞ்சி காமகோடி மகாப் பெரியவரை அணுகினர்.

ஆச்சார்யர் ஊர் மக்கள் வருவதைப் பார்த்தே வந்த விஷயத்தை உணர்ந்தார். ‘‘காளியை உங்க ஊர்ல இருக்கற சுந்தரேஸ்வரர் கோயில்லயே வச்சுடுங்கோ. மாகாளிக்கு தனி இடம் அந்த கோயில்லயே இருக்கு. போய்ப்பாருங்கோ. அவளும் அங்க இருக்கணும்னு நினைக்கறா. சுந்தரேஸ்வரர் பேரோட காளிய சேர்த்து சுந்தரமாகாளின்னு பிரதிஷ்டை பண்ணுங்கோ. பழைய பூஜை முறைகளை மாத்த வேணாம்’’ என்று ஆசியளித்தார். ஆச்சாரியாரின் அறிவுரைப்படியே அவளை ஈசனின் ஆலயத்திற்குள் தனித்த இடத்தில் ஸ்தாபித்தனர்.
ஆலயத்திற்குள் சென்று பெட்டிக்காளியை தரிசிப்போமா?

பெட்டிக்குள் காளி பேரருள் பெருக்குகிறாள். எப்போதும் பெட்டிக்குள்ளே இடுப்புக்கு மேல் பகுதி மட்டும் காணப்படும் என்கிறார்கள். தீக்கனல் பறக்கும் கண்களினூடே கருணையும் ஊற்றாகப் பெருகுகிறது. பெட்டியை நெருங்கும்போது சக்திச் சுழலில் மனம் லயிக்கிறது. பெட்டிக்குள் உறைந்திருப்பவள் என்பது உடலுக்குள் ஆத்ம சொரூபமாக காளி இருப்பதை உணர்த்துகிறதோ என்று உயிர் சிலிர்க்கிறது.

சுந்தர மாகாளி செந்நிறத்தோடும் எண் திருக்கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தியும் காணப்படுகிறாள். தினமும் அம்பாள் மீதான அஷ்டோத்திரங்களைச் சொல்லி, அர்ச்சனை செய்கிறார்கள். சர்க்கரைப் பொங்கல், அன்ன நிவேதனம் செய்கிறார்கள். அதை படையல் என்பார்கள். அதன் பிறகுதான் பெட்டியை திறப்பார்கள். காளியின் உக்கிரக் கோபம் தணிய நெற்றியில் புனுகு, ஜவ்வாது, விபூதி, சந்தனம் சாத்தப்படுகிறது. அம்மனுக்கு சாத்தப்படும் பூ, பழம், குங்குமம், எலுமிச்சம் பழம் எதுவும் பிறருக்கு வழங்கப்படுவதில்லை. பிரசாதமாக விபூதியும், படையல் வைத்த அன்னத்தையும்தான் கொடுப்பார்கள். பெட்டிக்காளி அம்மன் என்று அன்போடு அவளை அழைக்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இந்த மாகாளி வீதியுலா வருகிறாள். பெட்டியில் இருந்தபடியே பல்லக்கிலேற்றி புறப்பாடு நடக்கும். வீதி உலாவன்று உக்கிர மாகாளியின் ஆவேசம் வெளிப்படுவதால் பல்லக்கு ஆடிக்கொண்டே எங்கும் நிற்காமல் செல்லும். இறுதியில் கோயிலை அடையும். அவளின் உக்கிரத்தை சந்தேகித்தவர்கள் அவளின் அடிமைகளாக, அன்புத் தொண்டர்களாக மாறிய சம்பவங்கள் இங்கு அநேகம். வாழ்வில் திருப்பம் வேண்டும் என்பவர்கள், மாற்றத்திற்காக காத்திருப்போர்கள், வாழ்வில் நிகழும் சகல பிரச்னைகளும் இவளின் அருளால் நீங்குகின்றன.

அன்னையை அலட்சியமாக தரிசித்துவிட முடியாது. கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தரிசனம் பெற அனுமதியில்லை; அதேபோல முகமுடி மழித்த அவர்களுடைய கணவன்மார்களுக்கும் அனுமதியில்லை. ஆச்சரியமும், அச்சமும் சூழ பக்தியுடன் மாகாளியை பணிந்து சுந்தரேஸ்வரர் சந்நதியை தரிசிக்கிறோம்.

மிகப்பழமையான ஆலயத்தின் அறிகுறிகள் கல்வெட்டெழுத்துகளில் தெரிகின்றன. பல மாமன்னர்களை பார்த்த தொன்மை ஒவ்வொரு தூணின் வேலைப்பாடுகளிலும் புரிகிறது. சுந்தரேஸ்வரரின் சந்நதியில் விபூதி மணக்கிறது. குறைவற்ற செல்வத்தையும், வளமான வாழ்வையும் அமைத்துக் கொடுப்பதில் நிகரற்றவர் இவர். ‘காளியை பார்த்தீர்களா?’ என்று அவர் கேட்பது போன்ற ஓர் உணர்வு மனதில் எழுகிறது. வெள்ளமாக அருளை நிறைக்கும் சந்நதியைக் கடந்து கோயிலை வலம் வருகிறோம். சப்த மாதர்களின் சிலைகள் பாங்காக வீற்றிருக்கின்றன.

பிராகாரச் சுற்றில் விநாயகருக்கென்று தனிச் சந்நதி உள்ளது. முருகப்பெருமான், துர்க்கை, பைரவர், நவகிரகங்களும் அமைந்துள்ளன. கோபுரத்தின் சுதை உருவங்களை தரிசித்து ஒவ்வொரு சிறு சந்நதியிலும் ஆற, அமர நிதானமாக தரிசனம் முடித்து அம்பிகையான அபிராமியின் சந்நதியை நெருங்குகிறோம்.
அமைதியும், எளிமையும் ஒரு சேர விளங்குகிறாள் அன்னை அபிராமி.

அபய, வரத முத்திரையோடு பொங்கும் ஆனந்தத்தோடு நின்ற கோலத்தில் அருளாட்சி புரிகிறாள். வலது மேற்கரத்தில் அட்ச மாலையும், இடது மேற்கரத்தில் தாமரை மலரை ஏந்தியும் கொலுவிருக்கிறாள். தல விருட்சம் பாதிரி மரம். கோயிலுக்கு கிழக்கே பிரம்ம தீர்த்தமும் உள்ளன. கொரநாட்டுக் கருப்பூர் என அழைக்கப்படும் இத்தலம் கும்ப கோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

தோழி அந்தரங்கம்

ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள். வெளியில் தெரிவது கொஞ்சம். உள்ளுக்குள் வைத்து மருகுவது அதிகம். எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதிலும்  ‘அந்தரங்கம்’ என்றால்... கேட்கவே வேண்டாம். சொன்னால் ‘நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்’ என்ற தயக்கம் ஒருபுறம். மற்றவர்களிடம் சொல்லிவிடுவார்களோ என்ற பயம் மறுபக்கம்.

இந்நிலை இனி வேண்டாம். ‘அந்தரங்க’ பிரச்னையை நினைத்து மருகி மருகி உங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்.
நம்பிக்கைக்குரிய தோழியாக, உங்கள் நலம் விரும்பும் உயிராக, பிரச்னையிலிருந்து உங்களை விடுவிக்கும் நட்பாக இதோ ‘குங்குமம் தோழி’ உங்கள் இரு கரங்களையும் அன்புடன் பற்றிக் கொள்கிறாள்.

அச்சம்  வேண்டாம். நிச்சயம் இவள் ரகசியம் காப்பாள். ஆறுதலாக இருப்பாள். நம்பிக்கை அளிப்பாள். காப்பாற்றி கரை சேர்ப்பாள்.
பாலியல் பிரச்னைகள் தொடங்கி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் வரை அனைத்துக் குழப்பங்களில் இருந்தும் உங்களை விடுவிக்க காத்திருக்கிறாள்.தயக்கமில்லாமல் உங்கள் கேள்விகளை -

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர்,
சென்னை - 600 004

என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. தேவை பிரச்னைக்கு தீர்வு தானே தவிர அடையாளங்கள் இல்லையே...கரம் கோர்த்து தலை வருட உங்களுக்காக தோழி காத்திருக்கிறாள்!