பீனிக்ஸ் பறவை!கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்கு மேலாகிவிட்டது கணவரை பார்த்து. குழந்தை துருவுக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது கணவன் வந்து பார்த்து சென்றதோடு சரி. காதலனை பார்க்கத் துடிக்கும் காதலிக்கு ஏகப்பட்ட தடைகள் இருக்கும். ஆனால், முறைப்படி கைப்பிடித்த கணவனை பார்க்க, இளம் மனைவிக்கு ஏது கட்டுப்பாடு? அதுவும் கல்லூரி படிப்பை அப்போதுதான் முடித்த 23 வயது இளம்பெண்ணுக்கு சொல்லவா வேண்டும்?

கணவன் ஊருக்கு வரப்போகிறார் என்ற ஆர்வத்தில், அவருக்கு பிடித்த சிவப்பு நிற சுடிதாரில் தன்னை அலங்கரித்துக் கொண்டாள் ஷாலினி. குழந்தைக்கும் பவுடர் போட்டு, திருஷ்டி பொட்டு வைத்து அலங்கரித்து, மறக்காமல் குல்லாய் போட்டுக் கொண்டு, காரில் பெற்றோருடன் விமானம் நிலையத்துக்கு கிளம்பினாள். வழியில் எப்போதும் கும்பிடும் விநாயகர் கோயிலில், காரை நிறுத்தி ஒரு நிமிடம் குழந்தையுடன் சென்று கும்பிட்டும் வந்தாள்.

விமானம் வரும் வரையில், அவளுக்கு பொறுமை இல்லை. தன்னுடன் வந்திருந்த பெற்றோரிடம் கிட்டத்தட்ட 12 முறையாவது எப்போது விமானம் வரும் என்று கேட்டுவிட்டாள். அவளது நடவடிக்கைகளை கண்டு பெற்றோர் கண்ணில் கண்ணீர்தான் கொட்டியது.

விமான நிலையத்தில் ஷாலினியின் கணவர் மேஜர் அவினாஷ் சிங்கை வரவேற்க ஏகப்பட்ட ராணுவ அதிகாரிகள் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் வந்து ஷாலினியிடம் பேசிவிட்டு சென்றார்கள். ‘‘தைரியமான பெண்ணான நீங்கள், இனியும் தைரியமாக இருக்க வேண்டும்’’ என்று கூறிவிட்டு சென்றார்கள். என்ன இவர்கள் இப்படி பேசுகிறார்கள்....?  என் கணவன் இருக்கும்போது நான் எதற்கு பயப்படப்போகிறேன்? விவஸ்தை கெட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டாள் ஷாலினி.

விமானம் வருவது பற்றிய அறிவிப்பு வந்தபோதுதான், அதுவரை அடக்க முடியாமல் இருந்த அவரது தாய் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார். அவரது தந்தையின் கண்ணில் தாரை, தாரையாக கண்ணீர் வடிந்தது. மகளை கட்டியணைத்து, அந்த செய்தியை கூறினார். ஷாலினி அப்படியே உடைந்து, தரையிலேயே அமர்ந்துவிட்டாள்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் ஷாலினியின் கணவன், சில நாட்களுக்கு முன்பு வீரமரணம் அடைந்ததும், அதுவரை அந்த விஷயம் ஷாலினியிடம் தெரிவிக்கப்படாமல் மவுனம் காக்கப்பட்டு, அவரது உடல் வரும் நேரத்தில் அது தெரிவிக்கப்பட்டது தான் ஷாலினி உடைந்து அமர காரணம். இதோ ஆசை, ஆசையாய் கணவனை காண அவருக்கு பிடித்த சிவப்பு நிற சுடிதாரில் வந்து, அழுக்கு என்றும் பாராமல் தரையில் அமர்ந்துவிட்ட ஷாலினியின் நினைவு களில் உலகமே இருண்டு விட்டது போன்று ஒரு உணர்வு. எல்லாமே ஒரு  கனத்தில் முடிந்துவிட்டதை போன்று ஒரு பிரம்மை. எதிரிக்கு கூட இந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்றெல்லாம் எண்ணங்கள் வந்து சென்றன.

அந்த கனத்தில் தான் இருந்த மனநிலை குறித்து ஷாலினி கூறுகையில், ‘‘அவினாஷ் ஏதோ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் இருப்பதாகத்தான் எனக்கு கூறப்பட்டது. ஆனால், விமான நிலையத்துக்கு சென்றபோதுதான் அவர் இறந்த விஷயமே எனக்கு தெரிந்தது. ஒருகனம் உலகம் என்னை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிட்டதை போன்று உணர்ந்தேன். கம்பீரமாக நெடு, நெடுவென்று 6 அடி உயரத்தில் இருக்கும் என் கணவரை ஒரு பெட்டியில் கிடத்தி கொண்டு வந்தபோது, ஓவென்று கத்த வேண்டும் போல் இருந்தது. நான் வணங்கும் ஒரு கடவுள் கூட உன்னை காப்பாற்றவில்லையா என்று கதறினேன்’’ என்றார்.

எல்லாம் முடிந்து திரும்பி பார்த்தபோது வெறுமைதான் ஷாலினிக்கு மிஞ்சியிருந்தது.கணவர் வீட்டார் ஷாலினியையும், குழந்தையையும் அவரது பெற்றோர் வீட்டிலேயே விட்டுச் சென்றுவிட்டனர். அவருக்கு இருந்த ஒரே ஆதரவு குழந்தை துருவ் மட்டும்தான். அவனுக்காகவே தான் வீறுக்கொண்டு எழ வேண்டும் என்ற வைராக்கியம் எழுந்தது. ஒவ்வொரு முறை அவினாஷ் அவளை கொஞ்சம்போது, அதைத்தான் சொல்வான். ஒரு காதல் இரவில், அவினாஷ் கேட்டான், ‘‘நான் செத்துட்டா, நீ என்ன செய்வே?’’

‘‘இப்படியெல்லாம் கேட்டா... நான் உங்க கூட பேச மாட்டேன்’’  கோபத்துடன் கூறினார் ஷாலினி.‘‘அதுக்காக சொல்லல... நீ எப்பவும் தைரியமான பொண்ணா... என் பேரை காப்பாத்துற ராணியா, நம்ம குழந்தைக்கு நல்ல அம்மாவா இருக்கணும். இன்னொரு கல்யாணமும் பண்ணிக்கிறனும்’’ அவினாஷ், தனக்கு நடக்கப்போவதை முன்கூட்டியே அப்போது சொன்னாரோ என்னவோ....

கணவர் கூறியபடி, தான் வீறுக்கொண்டு எழ முடிவு செய்தார். தன் கணவர் பணி செய்த ராணுவத்திலேயே பணியில் சேர முடிவு செய்தார். அவினாஷின் நண்பர்களை சந்தித்து பேசினார். எல்லோரும் அவரை ஊக்குவித்தனர். விறுவிறுவென்று காரியத்தில் இறங்கினார். குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேரும் எஸ்.எஸ்.பி தேர்வை எழுதினார்.

சரியாக 3வது மாதம் அவருக்கு நேர்காணலுக்கு அழைப்பு வருகிறது. பெற்றோருடன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு குஜராத்தில் இருந்து அலகாபாத்துக்கு ஓடினார்.‘‘நேர்காணலுக்காக சென்றபோது ராணுவ முகாம் அலுவலக வாசலிலேயே என்னையும் குழந்தையையும் தடுத்துவிட்டார்கள். எனக்கு மட்டும்தான் அனுமதி என்று கூறினார்கள். வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. பக்கத்தில் ஏதாவது இடம் இருக்கிறதா என்று கேட்டேன். ஒரு பூங்காவைத்தான் கைக்காட்டினார்கள்.

அங்கு சென்று என் அம்மாவிடம் துருவையும், பால் பாட்டிலையும் கொடுத்துவிட்டு, மீண்டும் ஓடிச்சென்று நேர்காணலில் கலந்து கொண்டேன். அவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக பதில் சொன்னேன். பல்வேறு கட்டமாக நேர்காணல் நடந்தது. எல்லாம் முடிந்து மாலையில் நான் தேர்வாகிவிட்டதாக அவர்கள் கூறியபோது, கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க என் அவினாஷ் இல்லையே என்று ஏங்கினேன். ஓடிச்சென்று பூங்காவில் அம்மா வின் மடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த துருவை தூக்கி உச்சி முகர்ந்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டேன்’’ என்கிறார் ஷாலினி.

உடனடியாக ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியில் சேர அவருக்கு உத்தரவு வருகிறது. சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் 6 மாத காலம் கடுமையான பயிற்சி. அதுவரையில் வீட்டு பாத்திரங்களை கூட துலக்காத ஷாலினி, 10 கிலோ எடைக் கொண்ட மண் மூட்டையுடன் தினமும் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். எல்லாம் முடிந்து கணவரின் முதல் ஆண்டு திதி வருவதற்கு 3 மாதத்தில் அவர் ராணுவ அதிகாரியானார்.

அதாவது கணவர் இறந்து ஒரு ஆண்டுக்குள் அவரது மனைவி, ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்து பணிக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் கம்பீரமாக ராணுவ உடையில் மிடுக்குடன் நடந்து வந்த ஷாலினியை பார்த்து, அவரை பார்த்து கிண்டல் செய்த வாய்கள் எல்லாம், விரலை வைத்து மூடிக் கொண்டன.

ஐந்து ஆண்டுக்காலம் ராணுவத்தில் அதிகாரியாக ஷாலினி கம்பீரமாக வலம் வந்தார். உடலில் மட்டுமல்ல; உள்ளத்திலும் அவர் பலம் பெற்றிருந்தார். இதே மிடுக்குடன், இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய 2வது விருதான ‘கீர்த்தி சக்ரா’ அவினாஷூக்கு வழங்கப்பட்டதை கம்பீரமாக பெற்றுக் கொண்டார்.

ஒருகட்டத்தில் குழந்தையை தானே உடன் இருந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக ராணுவ வேலையில் இருந்து விலகினார் ஷாலினி. டெல்லிக்கு குடிப்பெயர்ந்து குழந்தை, குடும்பம் என்று எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஓய்வு நேரத்தில் எம்.பி.ஏ.வையும் முடித்தார். ஆனால், காலம் எதை செய்யும், எப்போது செய்யும், எந்த மாதிரி செய்யும் என்பதெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை. அதுபோன்றுதான் தெளிந்த நீரோடையாக சென்ற ஷாலினியின் வாழ்க்கை பாதை 2008ல் இரண்டாவது திருமணத்தின் மூலம் மாறியது.

துருவையும், ஷாலினியையும் தன் கண்போல் பாதுகாப்பதாக கூறித்தான் இரண்டாவது கணவர் அவரை கைப்பற்றினார். அவரும் மனைவியை இழந்தவர். துருவுக்கு தகப்பன் ஸ்தானத்தில் ஒருவர் இருந்தால் அவனது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான் இந்த திருமணத்துக்கே ஷாலினி ஒப்புதல் தெரிவித்தார். ஆனால், திருமணம் ஆன சில நாட்களிலேயே குழந்தை துருவை தாய் வீட்டிலேயே விட்டு வருமாறு, மாமியார் குடும்பத்தினர் நிர்பந்தம் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் வேறு வழியில்லாமல் துருவை தன் தாயிடம் ஒப்படைத்தார் ஷாலினி.

ஆனால், அதன் பிறகும் கூட மாமியார் குடும்பத்தினர் ஷாலினியை துன்புறுத்துவதை நிறுத்தவில்லை. அத்துடன் 2009ல் ஒரு கார் விபத்தில் சிக்கி, உடல் முழுவதும் பல இடங்களில் எலும்பு முறிவு. பிழைத்ததே கடவுள் புண்ணியம் என்ற ரீதிதான். ஆனால், மன வலிமையினால் மீண்டும் உயிர்த்தெழுந்தார் ஷாலினி. அத்துடன் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு மீண்டும் தனது பயிற்சியினால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

அந்த நேரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 10 கி.மீ தூரத்துக்கு ஓட்டப்பயிற்சி மேற்கொண்டதாக நினைவுகூர்கிறார் ஷாலினி. இந்த தைரியம், குடும்ப வாழ்க்கையில் அவருக்கு இல்லாமல் போனது. கணவரின் கொடுமை, தினமும் அடித்து, உதைப்பது என்று வாழ்க்கை சீர்குலைந்து போனது. 2010ல் ஷாலினியின் தந்தை மறைந்துவிட தன் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கூட இரண்டாவது கணவன் தர மறுத்ததுதான் கொடுமை. ஷாலினிக்கு வந்த ராணுவ பென்ஷன் பணத்தை கூட செலவழிக்க விடவில்லை. அந்த நேரத்தில்தான் மீண்டும் ஒரு திடமான முடிவை எடுத்தார் ஷாலினி.

‘‘ஒரு நல்ல நாளில், நன்கு சிந்தித்து எடுத்த முடிவின்படி, அவன் வாங்கிக் கொடுத்த ஒரு உடையை கூட தூர தூக்கிப்போட்டுவிட்டு, நானே என் சம்பாத்தியத்தில் வாங்கிய ஒரு ஆடையை அணிந்து கொண்டு, கணவன் வீட்டில் இருந்து தாய்வீட்டுக்கு புறப்பட்டுவிட்டேன். இனி இதுதான் என் வாழ்க்கை என்று என் மனதில் தீர்மானமாக முடிவும் எடுத்தேன்’’ என்று நினைவு கூறியபோது ஷாலினியின் கண்கள் பனித்திருந்தன.

அதன் பின்னர் நடந்ததை அவர் கூறுகையில், ‘‘அவினாஷை இழந்து நான் ராணுவத்தில் சேர பெரும் கஷ்டப்பட்டேன். அதுபோன்ற நிலைமை எந்த கைம்பெண்ணுக்கும் வரக்கூடாது என்ற முடிவில், ராணுவத்தில் கணவரை இழந்த இளம் கைம்பெண்களுக்கு, ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சியை அளிக்க ஆரம்பித்தேன். அதில்தான் என் கவலையும் மறைந்தது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அது பெரிதும் உதவியது’’ என்றார்.

ராணுவத்தில் அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த சம்பாத்தியம் மற்றும் தன்னுடைய சேமிப்பு என்று கிட்டத்தட்ட பல லட்சங்களை இரண்டாவது கணவர் பிடுங்கிக் கொண்டார். இதை பொறுக்க முடியாமல் அவரிடம் இப்போது சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த போராட்டத்துக்கு இடையிலும், அவர் 2017ம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த ஒற்றை பெற்றோர் அழகிப்போட்டியில் கலந்து கொண்டு, ‘மிஸ் இந்தியா, எர்த் வாரியர்’ என்ற பட்டத்தையும் பெற்று, அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அவரது பாசவளர்ப்பில் இப்போது துருவ், மும்பை ஐ.ஐ.டியில் இரண்டாம் ஆண்டு மாணவன்.

ஷாலினி இப்போது டெல்லியில் திறன் மேம்பாட்டு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், அவை திமிர, திமிர அழுத்தினாலும், நெருப்புகள் சூழ்ந்து பொசுக்கினாலும், உயிர்த்தெழுந்து வரும் பீனிக்ஸ் பறவையான ஷாலினி, பேட்டியின் முடிவில் கடைசியாக வைத்த ஒரே கோரிக்கை, ‘‘பெண்களை மதியுங்கள். அவர்கள் பாவப்பட்டவர்கள்’’ என்பதுதான்.

ஜே.எஸ்.கே.பாலகுமார்