வாழ்வென்பது பெருங்கனவு!கண்ட கனவுகளும்... நிஜமாகியவையும்...

கல்லூரி விரிவுரையாளர் கிறிஸ்டினா ரஞ்சன்

கனவுகள் காணாமல் இங்கு யாரும் காலத்தை கடந்துவிட முடியாது. கனவு என்பது வாழ்க்கையில் முன்னேற ஏற்பாடாகும் ஓர் உந்துசக்தி. பயணிக்கும் ஒவ்வொரு சூழலிலும் டாக்டராகிவிட மாட்டோமா, எஞ்சினியராகிவிட மாட்டோமா, ஒரு தொழிலதிபராகிவிட மாட்டோமா, பெரும் பணக்காரராகிவிட மாட்டோமா என கற்பனை வானில் பறந்துகொண்டே செல்வது உண்டு.

அதே வேளையில் அந்தக் கனவு நிஜமாகும்போது வாழ்க்கையில் சாதித்த திருப்தி உண்டாகும். அந்த உணர்வு பல கனவுகள் வலியையும், சுகத்தையும் தந்து கொண்டேயிருக்கும். காலங்கள் பல கடந்தாலும் அதன் காட்சிகளும், கடந்து வந்த அதன் நீட்சிகளும் நினைவுகளில் நிழலாடிக் கொண்டேயிருக்கும். ஏனெனில், இந்த வாழ்வென்பது... பெருங்கனவுகளை உள்ளடக்கியது...

அரசுக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி என ஐந்து கல்லூரிகளில் பகுதி நேர விரிவுரையாளர், ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர், இளம் தொழில்முனைவோர் என பரிணமித்து வளர்ந்து நிற்கும் கிறிஸ்டினா ரஞ்சன் தன் கனவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

‘‘கற்பிக்கும் கலை என்பது புதிய கண்டுபிடிப்புக்கு உதவும் கலையாகும் என்பார் மார்க் வான் டோவன்.  சென்னையில் தேசிய அலங்கார தொழில்நுட்பக் கலை நிறுவனத்திலும், மேலும் 3 வடிவமைப்புக் கல்லூரிகளிலும் பகுதி நேர விரிவுரையாளராக உள்ளேன். ஆரம்பக் கல்வி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் பெயின்ஸ் பள்ளியில் படித்தேன்.

மாணவப் பருவத்திலேயே ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதில் தன்னெழுச்சியாக ஓர் ஆர்வம் ஏற்பட்டது. சாக்ஸோ போன் இசைக்கருவி இயக்கக் கற்றுக்கொண்டு பள்ளி இசைக்குழுவில் பங்குபெற்றேன். என்னைத் தூங்கவிடாமல் செய்த இந்தக் கலை ஆர்வத்தால் எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் என் தோழிகளுக்கு அப்போதே சொல்லிக் கொடுப்பேன். ஒருகட்டத்தில் ஓர் ஆசிரியராக நாம் வந்து கற்றுக்கொடுத்தால் எப்படியிருக்கும் என கனவுகள் வளர்ந்துகொண்டே சென்றது. அதேவேளையில் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் உளவியல் பாடத்தில் மாநிலத்தில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றேன்.

சொந்த ஊரான நாகர்கோவிலை விட்டு படிப்பு மற்றும் வேலைக்காக சிறுவயதிலேயே சென்னைக்கு வந்த எனது அப்பா ரஞ்சன் தேவசகாயம் ஒரு தனியார் கம்பெனியில் உயர் பொறுப்பில் இருந்தார். அவருக்கு அம்மா ஷீலா உறுதுணையாக இருந்து வருகிறார். இவர்களுக்கு நான் ஒரே பெண் குழந்தை என்பதால் அதிகச் செல்லம் கொடுத்தே வளர்த்து வந்தனர்.

பள்ளிப் படிப்பைத் தவிர்த்து கலையின் மீது ஆர்வம் அதிகம் இருந்ததால் வெளியில் சென்று படிக்க நினைத்தேன். ஆனால், பயிற்சியாளரை வீட்டிற்கே வரவழைத்து எனக்கு கலையைப் பயிற்றுவித்தனர். இதற்கிடையில், இன்டேரியர் டிசைன் லெக்சரர் (Interior Design Lecturer) கோர்ஸ் படித்து முடித்தேன். இந்த நேரத்தில் கல்லூரிகளில் கலையைக் கற்றுக்கொடுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. நான் என்ன கனவு கண்டேனோ அதே வேலை என்பதால் எனது கனவுகளுக்கு தீனி போடும் வகையில் பெற்றோரும் சம்மதித்து பணிக்கு அனுப்பினர். அதன் விளைவாக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது கலை ஆர்வம் உள்ள மற்றவர்களுக்கும் ஓவியம், கைவினைப் பொருட்கள், கைத்தொழில் போன்ற கலைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தால் 2014 ஆம் ஆண்டு கிறிஸ்டினா கலைக்கூடத்தை (Christina's Art Studio)உருவாக்கினேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இக்கலைக்கூடத்தை அனைத்து தரத்திலும் முதன்மையாகக் கொண்டு கற்பித்து வருகிறேன்.  

இக்கலைத் தாகம் எஞ்சிய என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கும் என நம்புகிறேன். யார் வேண்டுமானாலும் கலையையும் கைவேலைப்பாட்டையும் கற்றுக்கொள்ளலாம். அவர்கள் கலைஞர்களாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆர்வம் இருந்தால் போதும், அவர்களை ஒரு தொழில்முனைவோராக என்னால் உருவாக்கிவிட முடியும். இக்கலைப் பயிற்சிக்கான பாடத்திட்டங்கள் இங்கே முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் எளிதில் இதைக் கற்றுக் கொண்டு தனக்கான ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ளலாம்.

பெண்களை தொழில்முனைவோராக மாற்ற சிறந்த பயிற்சிகளை வழங்கி அவர்களை வலிமை படைத்தவர்களாக மாற்றுவதே இக்கலைக் கூடத்தின் நோக்கம். ஏனெனில், ஓவியம், படைப்பாற்றல் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகும்.

இன்றைக்கு கைவேலைப்பாட்டினால் உருவாகும் கலைப் பொருட்களை உற்றார், உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பரிசுப்பொருட்களாக அளிப்பதில் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன. உணர்வுப்பூர்வமான அன்புச் சின்னங்களாக இப்பரிசுப் பொருட்கள் விளங்குகின்றன. ஒவ்வொரு கலைப்பொருள் உருவாக்கத்திலும் ஆர்வம், பொறுமை மற்றும் உடற்கூறு இயக்கங்கள் இணைவதால் ஒருவரின் முழு ஈடுபாட்டை இது வளர்க்கிறது.

ஆசிரியராக வேண்டும் என்ற என் கனவு மெய்ப்பட்டிருக்கும் நிலையில், இன்றைக்கு எனது கிறிஸ்டினா கலைக்கூடத்தில் பயிற்சி பெற வருபவர்கள் பல்வேறு தொழில்களைச் சார்ந்தவர்களாய் இருக்கிறார்கள். பத்திரிகையாளர், பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கணக்காளர்கள், இல்லத்தரசிகள், அரசு அதிகாரிகளின் துணைவியர், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என இங்கு பயிற்சிக்கு வருபவர்களின் பட்டியல் பெருசு.

பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது எல்லாம் உங்கள் இதயத்தின் விருப்பத்தைக் கேளுங்கள், உங்கள் மனம் கூறும் அறிவுரையைக் கவனியுங்கள். உங்கள் ஆக்கத்திறன் சரியான திசையில் செல்லும். முன்னேற்றப் படிகளில் ஏறி விரைவில் வெற்றியடைவீர்கள்’’ என்கிறார் கிறிஸ்டினா.

தோ.திருத்துவராஜ்