வைரலாகிறார் நெல்லை கலெக்டரின் மகள்!இது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஆதிக்கம் போலும். சமீபத்தில் கேரள மாநிலம் வயநாடு மாவட்ட கலெக்டரான சுகாஷ் சிவனா, அரசுப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சோதிப்பதற்காக  பள்ளி சத்துணவு கூடத்தில் சமைத்த உணவை மாணவர்களுடன் சேர்ந்து அருந்தி சோதனை செய்தார்.
அவர்  மாணவர்களுடன் சேர்ந்து உணவருந்தும் காட்சி வைரலாக பரவியது. பின்னர் உத்தரகாண்டின் நிதின் பதுவாரியா மற்றும் சுவாதி வத்சவா ஐ.ஏ.எஸ் அதிகாரி தம்பதியின் மகன் அபுய்தயை அங்கன்வாடியில் சேர்த்து முன்மாதிரியாக திகழ்ந்த காட்சியும் வைரலாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. இப்போதும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாராட்டு மழைகள் குவிகிறது. ஏன்?  

நெல்லை மாவட்ட ஆட்சியரும் இது போன்ற அதிரடி முடிவை எடுத்துள்ளதே இதற்கு காரணம். நெல்லையின் முதல் பெண் கலெக்டர் என்ற பெருமை பெற்ற ஷில்பா பிரபாகர் சதீஷ் தான் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சொந்தக்காரர். அரசுத்துறை அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை எந்த தனியார் பள்ளியில் படிக்க வைக்கலாம் என கூகுள் முதல் அக்கம்பக்கத்து வீட்டினரை விசாரித்து முடிவு எடுப்பது தான் வழக்கம்.

ஆனால் ஷில்பா கடந்த ஆண்டு மே மாதம் 25ம் தேதி நெல்லையில் கலெக்டராக பொறுப்பேற்றார். இந்நிலையில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் தனது இரண்டரை வயது மகள் கீதாஞ்சலியை சேர்த்துள்ளார். இங்கு கீதாஞ்சலியுடன் 20 குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடியில் கீதாஞ்சலி சேர்ந்து இரண்டு மாதங்களே ஆகின்றன.

அரசுத்துறை அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக திகழும் கலெக்டர் ஷில்பாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இது குறித்து ஷில்பா, ‘‘சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு குழந்தைகளுடன் பழகவும், படிக்கவும், தமிழைக் கற்கவும் எனது மகளுக்கு கிடைத்த வாய்ப்பு இது. சேர்ந்த இரண்டு மாதங்களில் அவள் நன்றாக தமிழ் பேச கற்றுக் கொண்டு இருக்கிறாள்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான அங்கன்வாடி மையங்களில் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திறமையான  ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களில்  பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டிருக்கிறது.

அங்கன்வாடி குழந்தைகளின் எடை, உயரம் உள்ளிட்ட விவரங்களை அவற்றில் பதிவு செய்து அவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் இந்த மையம் எனது மகளின் ஆரம்ப கால கல்வி வளர்ச்சிக்கு மிகவும் ஊன்றுகோலாக இருக்கும். மேலும் ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கும் இது போன்ற அங்கன்வாடிகளை உருவாக்கும் திட்டங்கள் உள்ளன’’ என்றார் ஷில்பா.

பா.கோமதி