விஜய் சாரின் மோதிரக் கையால் வாங்கிய ‘குட்’!‘‘நாலாவது படிக்கும்போது, சன் டி.வி.யில் ‘கோகிலா எங்கே போகிறாள்’ தொடரில், குழந்தை நட்சத்திரமா நடிக்க, திடீர்னு சான்ஸ் கிடைச்சது. அது தான், முதல் கேமரா அனுபவம். அடுத்தடுத்து, சில சீரியல் சான்ஸ் வர, நடிப்பு பிடிச்சு போய் வரிசையா நடிக்க தொடங்கினேன்.
நடிப்பு வந்ததால, படிப்பு போயிடக்கூடாதேனு திடீர் ஞானோதயம் பொறக்க, நடிப்புக்கு கொஞ்சம் பிரேக் விட்டு, சென்னை எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் சேர்ந்தேன். அப்பப்ப வந்த சில குறும்பட வாய்ப்புகளுக்கும் ‘நோ’ சொல்லாம நடிச்சதால, நடிப்பும் என்னை விடல’’ என, புஷ்மிஹாவின் வாயில் இருந்து, படபடவென ‘தெறி’க்கிறது வார்த்தைகள்.

புஷ்மிஹா என்றால் சட்டென தெரியாது. ‘தெறி’ படத்தில், பாலியல் கொடுமைக்கு ஆளாகும் ஐ.டி. பெண்ணாக வரும் இவரது மரணத்துக்கு பின் தான், படம் சூடு பிடிக்கும். புஷ்மிஹாவை இப்ப தெரியுதா?

புஷ்மிஹா ரொம்ப வித்தியாச மான பெயராயிருக்கே...?
‘‘இது சமஸ்கிருத பெயர். அப்பா வெச்சது புஷ்மினி, அதை இப்போ புஷ்மிஹா என்று மாத்திக்கிட்டேன். புஷ் என்றால் சூரியன் என்று அர்த்தம். மார்டனாவும் இருக்கனும், அதில் நம்ம கலாச்சாரமும் கலந்திருக்கணும் என்று தான், புஷ்மிஹா’’.

‘தெறி’ அனுபவம் பற்றி...?
‘‘ ‘தெறி’ எனக்கு முக்கியமான படம். அதில், சாஃப்ட்வேர் பொண்ணா நடிச்சது நான்தான்னு என் நண்பர்கள், உறவினர்கள் தவிர வேற யாருக்குமே தெரியாது. டைரக்டர் அட்லீ சார், அந்த கேரக்டர் பற்றி சொன்னதும், ஒரு பெண்ணா அதை என்னால முழுமையா உள்வாங்கிக்க முடிஞ்சது.
முதல்ல இதை எப்படி செய்யப் போறோம்னு பதட்டம் இருந்துச்சு. அப்புறம், அந்த சூழ்நிலையில், என்னை பொருத்திப் பார்த்தப்ப, தானா எக்ஸ்பிரஷன்ஸ் வந்து விழுந்துச்சு. நான் நடிச்சதை, திரையில் பார்த்தப்ப, அது நான் தானானு எனக்கே வியப்பா இருந்துச்சு. அதில்  என் முகம் அடையாளம் தெரியாதபடி காயங்களுடன் இருக்கும். மேக்கப் போடும் போதே அழுகை வந்துடுச்சு’’.

ஷூட்டிங் போது, நடிகர் விஜய் என்ன சொன்னார்?
‘‘முதலில், விஜய் சார் படத்துல, சின்ன கேரக்டர் நடிக்கப்போறோம்னு தெரியும். ஆனா இப்படி ஒரே காட்சியில், அவருடன் சேர்ந்து நடிக்கப்போறோம்னு ஷூட்டிங் அன்னிக்கு தான் தெரியும்.

விஜய் சார் பத்தி சொல்லனும்னா, கேமரா ஸ்டார்ட் பண்ற வரை, அவர் ரொம்ப அமைதியா, எதையுமே கண்டுக்காத மாதிரி இருப்பார். ஆக் ஷன் சொன்ன பிறகு, எப்படி அவருக்குள்ள அப்படி ஒரு மாற்றம் நடக்குதுனு ஆச்சரியமா இருக்கு. அந்த மாற்றத்தை ஷூட்டிங்ல நேரா பார்த்தப்ப ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு.

‘தெறி’ படத்தின் ஆஸ்பிட்டல் காட்சி ஷூட் பண்ணும்போது, செட்ல எல்லோரும் தயாரா இருந்தோம். விஜய் சார் வந்ததும், என்னை பார்த்து சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணார். கேமரா ஸ்டார்ட் ஆகி, நாங்க நடிச்சு முடிக்கிற வரை, அந்த இடமே ‘பின்டிராப் சைலன்ட்டா’ இருந்துச்சு. டைரக்டர் ‘கட்’ சொன்னதும், சுற்றி இருந்த எல்லார் கண்களும் கலங்கி இருந்தது.

ரெண்டு நிமிட அமைதிக்கு பிறகு, அட்லீ சார் சூப்பர்னு சொல்லி கைதட்ட எல்லோரும் சேர்ந்து கை தட்டினாங்க. விஜய் சார், எழுந்துபோய், ‘மானிட்டரில்’ ஷாட் பார்த்துட்டு, திரும்பி வந்து என்கிட்ட வெரிகுட்மா, வெரி பிரிலியண்ட்னு பாராட்டினார். மோதிரக் கையால வாங்கின முதல் ‘குட்’. அப்ப தான், சுற்றி இருந்தவங்க எனக்கும் சேர்த்துதான் கை தட்டினாங்கனு புரிஞ்சது. அதுக்கு பிறகு, விஜய் சாருடன் அமர்ந்து சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைச்சது. கடைசியா கிளம்பும்போது, என்கிட்ட ‘பை’ சொல்லிட்டு போனார். இந்த அனுபவம் எல்லாமே மனசுல பச்ச குத்தின மாதிரி, எப்பவுமே நிலைச்சு நிக்கும்’’.

எப்பவாவது, ஆபீஸ் வேலைக்கே போய் இருக்கலாம்னு தோணுமா?
சமீபத்துல அப்படி தோணிச்சு. ‘எண்பதெட்டு’னு ஒரு படத்துல நடிச்சிட்டு இருக்கேன். ‘அவன் இவன்’ படத்தில் ஹைனஸ் கேரக்டரில் நடிச்ச, இயக்குனர் ஜி.எம்.குமார் சார், என்னை அடிக்கிற மாதிரி ஒரு சீன். ரிகர்சலின் போது, சும்மா அடிக்கிற மாதிரி நடிச்சவர், டேக்கில், உண்மையிலேயே அடிச்சிட்டார். வலி தாங்க முடியாமல் அழுதுட்டேன்.

வீட்டுல, ஒரே பொண்ணு என்பதால், அப்பாகூட இதுவரை அடிச்சதில்ல. செம கோவத்தோட குமார் சாரிடம் போய், ‘என்ன சார் நிஜமாகவே அடிச்சிட்டீங்க’னு கேட்டதற்கு, ‘இதுக்கே அழுதிட்டா எப்படி? நா எவ்ளோ அடிவாங்கி இருக்கேன் தெரியுமா? இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கும்மா’ என்று சிரிச்சிகிட்டே கூலா சொன்னார். பின் என்னை கொன்று குழியில் தூக்கிபோடும் காட்சியிலும் நல்லா அடிபட்டுச்சு. அந்த மாதிரி நேரத்துல, ஏதாவது அட்வர்டைசிங், டி.வி., சானல்னு வேலைக்கு போயிருக்கலாமேனு தோணும். ஆனா, அந்த காட்சியை திரையில் பார்க்கும்போது, எல்லாம் மறந்திடும். அதாங்க சினிமா’’.

சினிமாவில் கற்றுக் கொண்டது என்ன?
‘‘சமீபத்தில், ஒரு குறும்படத்தில் நடிச்சேன். அதில் டெல்லி கணேஷ் சாரும் நடிச்சார். அந்த குறும்படத்தில் வேலை பார்த்த அனைவருமே  மாணவர்கள். ஆனா கணேஷ் சார், நேத்திக்கு நடிக்க வந்த ஆர்ட்டிஸ்ட் மாதிரி, அவங்க சொல்றதை அப்படியே செஞ்சு, நாசுக்கா கரெக்   ஷன்ஸ் சொன்னதை பார்த்து, ஆச்சரியமா இருந்துச்சு. அவரோட அனுபவத்துக்கும், திறமைக்கும் அதட்டி சொல்லாமல், இளைஞர்களையும், அவர்கள் திறமையையும் மதிச்சு அவர் சிம்பிளா நடந்துகிட்டது, எங்க எல்லாருக்குமே பெரிய பாடமா இருந்திச்சு’’.

ஸ்வேதா கண்ணன்