மாவோயிஸ்டுகளால் அதிகாரியான ஒடிசா பெண்!



ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ளது சலிமி என்ற கிராமம். மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த இந்தக் கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினத்தவர்கள். மிகவும் பின் தங்கிய கிராமத்தை சேர்ந்தவர்தான் மாணவி சந்தியா சம்ரத். இவர் சமீபத்தில் நடைபெற்ற ஒடிசா ஆட்சிப் பணி தேர்வில் முதல் முறையாக 91வது ரேங்க் எடுத்து வெற்றிப் பெற்றுள்ளார்.

சந்தியாவின் தந்தை ராம்தேப் சம்ரத் ஒரு விவசாயி. சலிமி கிராமம் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. துப்பாக்கியுடன் சுற்றித்திரியும் மாவோயிஸ்டுகளின் குண்டு முழக்கத்திற்கு இடையே தான் இந்த கிராமத்து மக்கள் பல காலமாக வாழ்ந்து வருகின்றனர். எப்போது இவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள்....எப்போது பிரச்னை ஏற்படும் என்ற பயத்தில் தான் இந்த கிராமத்து மக்கள் அன்றாடம் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இந்த கிராமத்தில் பிறந்தவர் தான் சந்தியா. இவர் ஒடிசா ஆட்சிப் பணி தேர்வை எழுதி வெற்றிக்கனியை பெற்றுள்ளார்.

மல்கான்கிரியில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார் சந்தியா. அதே பள்ளியில் +2 வையும் தொடர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவர், புவனேஸ்வரில் உள்ள பி.ஜே.பி என்ற கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். அதன் பிறகு ரவீன்ஷா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் படித்தவர், உட்கல் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் முடித்துள்ளார்.  

இந்நிலையில் ஒடிசா ஆட்சிப் பணிக்கான தேர்வு விண்ணப்பம் வெளியானது. பின் தங்கிய கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த கிராமத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்வினை எழுத ஆயத்தமானார். தேர்வினை எழுதவும் செய்தார். இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் முதல் முறையிலேயே வெற்றிவாகை சூடியுள்ளார் சந்தியா. மொத்தம் 106 பேர் தேர்வாகியுள்ள இந்த தேர்வில் சந்தியா 91-வது இடம் பிடித்துள்ளார்.

இது குறித்து சந்தியா சம்ரத் கூறுகையில், ‘‘நான்  எம்.ஃபில் படிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட படியே ஒடிசா ஆட்சிப் பணி தேர்வை எழுதினேன். இதனால் என்னால்  போட்டித் தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியவில்லை. ஆனாலும் தளராமல் இரவு பகலாக கண்விழித்து படித்தேன். அதன் மூலம் ஒடிசா மாநிலத்தின் உயர் அரசு பதவியை என்னால் எட்ட முடிந்தது. தினமும் குண்டு முழக்கத்தோடு தான் எங்களின் காலை பொழுது விடியும். அதே போல் தான் எங்களின் இரவும் கழியும்.

சின்ன வயசில் இருந்தே அந்த சத்தத்துடன் வளர்ந்ததால் எனக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை. சொல்லப் போனால் மாவோயிஸ்டுகள் கையில் எடுத்துள்ள ஆயுதங்கள் தான் என்னை அதிகாரியாக உயர்த்தியுள்ளது. எனவே விரைவில் மாவோயிஸ்டுகளை அமைதி வழிக்கு திரும்ப அறிவுறுத்துவேன். அடுத்து யு.பி.எஸ்.சி தேர்வு எழுத இருக்கிறேன்’’ என்றார். சந்தியாவின் வெற்றியை சலிமி கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அந்த தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோமதி பாஸ்கரன்