மைக் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் !டப்பிங் கலைஞர் நிம்மி ஹர்ஷன்

‘‘வாங்க நண்பர்களே, எல்லாரும் ஒன்னாப் போலாம், முயற்சி திருவினையாக்கும், முயன்றால் சாதிக்க முடியும்” என்று தினமும் நம் வீட்டுச் சுட்டிகள் பார்த்துப் பாடி மகிழும் டோரா கார்ட்டூன் உட்பட பல கார்ட்டூன்களுக்கு குரல் கொடுத்து உயிர் தந்தவர் நிம்மி ஹர்ஷன். இவர் தன்னை ஒரு டப்பிங் கலைஞர் என்று அழைப்பதை விட  வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளவே விரும்புகிறார்.  

இரண்டு வயது முதல் திரைத் துறையில் இருக்கும் இவர், சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியுள்ளார். ஐந்து வயது முதல் பின்னணி குரல் கலைஞராக பணியாற்றி வருகிறார். இதுவரை ஆயிரக் கணக்கில் டப்பிங் பேசி இருக்கும் நிம்மி, டோரா, சோட்டா பீம் - சுட்கி, ஜெய்  கிருஷ்ணா - கிருஷ்ணன், வீர ஹனுமான் - ஹனுமான் போன்ற தொடர்களுக்கும், Conjuring, Anabella, Bleeding Steel, Shally Bollywood, Dennis and Mennis போன்ற பிரபலமான திரைப்படங்களிலும் டப்பிங் கொடுத்துள்ளார்.

கார்ட்டூன்கள் மூலம் குழந்தைகளை கவர்ந்த நிம்மி, வீர ஹனுமான் போன்ற பிரபலமான தொடர்கள் மூலம் பெரியவர்களை குறிப்பாக வயதானவர்களை கவர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பிற தென்னிந்திய மொழிகளிலும் இவர் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

டப்பிங் மட்டும் இல்லாமல், விளம்பரங்களில் பாட்டு எழுதி, டப்பிங் டைரக்ட் செய்து, ஒளிப்பதிவாளராகவும்  டப்பிங் சம்பந்தமான அனைத்து துறையிலும் கலக்கி வருகிறார். தன் சொந்த முயற்சியில் தன் அம்மா, அப்பா பெயர்களை (ஷோபனா - ஹர்ஷன்) இணைத்து “ஷனா க்ரியேஷன்ஸ்” (Shana Creations) என்ற டப்பிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த தென்னிந்திய திரையுலக டப்பிங் சங்க தேர்தலில் வென்று கமிட்டி உறுப்பினராகவும் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்கள் கொண்ட டப்பிங் துறையில், குழந்தைகளுக்கும் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரத்திற்கும் டப்பிங் கொடுக்கும் இந்த குரல் தான் என்னைத் தனித்துக் காட்டுகிறது. என்னால், இரண்டு வயது குழந்தைகள் தொடங்கி, 12 வயது சிறுவர்களுக்கும்,

35 வயது வரை உள்ள பெண்கள் என அனைத்து வயதினருக்கும் டப்பிங் செய்ய முடியும்.

ஆண்களின் குரலை ஒரு வயதிற்கு மேல் டப்பிங் செய்வது கடினம். அதனால் 12-13 வயது வரை டப்பிங் கொடுக்கலாம். ஆடிஷன் போகும் போது கூட என்னால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இரண்டு பேருக்குமே குரல் கொடுக்க முடியும்” என்றவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீர ஹனுமான் தொடரை விரும்பி பார்ப்பதாக கூறினார்.

‘‘அவரின் மறைவிற்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது. அவர் வீர ஹனுமான் தொடரை தினம் விரும்பிப் பார்ப்பார் என்று. முன்பே தெரிந்திருந்தால், நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருப்பேன்.

இருந்தாலும் நான் பேசி டப்பிங் செய்யும் அந்த தொடரை விரும்பி பார்ப்பார் என்று நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு. அப்படித்தான் என் குரலின் ரசிகர்களாகத்தான் சுதாகர் - உஷா தம்பதியினர் எனக்கு அறிமுகமானாங்க. இப்போது அவர்கள் எங்க குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினர்கள்.

எனக்கு விருதுகள் கிடைக்கலைன்னு நான் கவலைப்பட்டது கிடையாது. காரணம் என்னுடைய ரசிகர்கள் மூலம் எனக்கு கிடைக்கும் பாராட்டுகளையும் பெருமைகளையும் நினைக்கும் போது எனக்கு விருது கிடைத்தது போல ஒரு சந்தோஷம். பொதுவாக வெள்ளித்திரையில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்பவர்களுக்கு தான் விருதையும் வழங்கி வருகிறார்கள்.

சின்னத்திரை குறிப்பாக கார்ட்டூன் படங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஒரு திரைப்படத்தில் எப்படி கதையின் நாயகன், நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே போல தான் டப்பிங் துறையும். இப்போது காலம் மாறி வருகிறது” என்றவர் டப்பிங் துறையிலும் சவால்கள் நிறைந்துள்ளது என்றார்.

‘‘டப்பிங் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. நேரடி விளையாட்டு நிகழ்ச்சிகளில் குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசவேண்டும். நிகழ்ச்சி தொகுப்பாளர் கேமரா முன் இருப்பார். அவர் பக்கத்தில் காலி இடத்தில் அனிமேஷன் கலைஞர்கள் கார்ட்டூன் கதாபாத்திரத்தை அங்கே பொருத்துவார்கள்.

நான் அந்த கார்ட்டூனுக்கு குரல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் போன் செய்து கார்ட்டூனுடன் பேச வேண்டும் என்பார்கள். இது அனைத்துமே நேரலையாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும். ஒரு முறை, ஒரே நாளில் 200 தொலைபேசி அழைப்புகளை பேசி இருக்கேன்.

 இதை ரொம்ப சவாலாக எடுத்து செய்து இருக்கேன். ஒரே நேரத்தில் 200 பேருடன் கார்ட்டூன் குரலில் பேசுவது அவ்வளவு எளிது கிடையாது. அது மட்டும் இல்லை. நிகழ்ச்சியில் பேச வாய்ப்பு கிடைக்காத குழந்தைகள், சாப்பிடாமல் தூங்காமல் அடம் பிடிக்கும். குழந்தைகளை சமாளிக்க முடியாத பெற்றோர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தை அழைத்து உதவி கேட்பார்கள்.

பெற்றோரை சமாளிக்க முடியாமல், தொலைக்காட்சி நிறுவனமும் சிலமுறை என் மொபைல் நம்பரை அவர்களிடம் கொடுத்து பேச வைப்பார்கள். குழந்தையிடம் கார்ட்டூன் குரலில் பேசி அவர்களை சாப்பிட வைத்திருக்கிறேன். பெற்றோரை தொந்தரவு செய்ய கூடாது என அறிவுரை கூறி அவர்களை சமாதானமும் செய்திருக்கிறேன். பதிலுக்கு அவர்கள் என்னை  ‘வீட்டுக்கு வா டோரா... விளையாடலாம்’ என்று அழைப்பார்கள். இந்த மாதிரியான சுட்டி ரசிகர்கள் எனக்கு கிடைத்து இருப்பது வரம் தான்.

நான் சிறு வயசுலயிருந்தே workaholic.. நண்பர்கள் அதிகம் கிடையாது. வெளியேவும் அடிக்கடி போகமாட்டேன். பள்ளி - ஸ்டுடியோ என்றே என் நேரம் சென்றுவிடும். நான் டப்பிங் செய்யும் போது, கெட்ட வார்த்தைகளோ அல்லது திட்டியோ பேசமாட்டேன். கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளுக்கு, சமூகத்தில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் எப்போதுமே உறுதியாய் இருந்து வருகிறேன்” என்றவர் சமூகத்தை எதிர்கொள்ள பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.

“திரைத்துறையில் மட்டுமல்ல, பொது வாக பெண்கள் தைரியமாக சமூகத் தில் வாழ வேண்டும். பெண்கள் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் பற்றி வெளியே பேசுவது வரவேற்கத்தக்கது. அது உண்மையா பொய்யா என்பது யாருக்குமே தெரி யாது. ஆனால், ஏன் காலம் தாழ்த்தி புகார் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்பது சரியல்ல. இவ்வளவு காலம் கழிந்தபின் குரல் கொடுப்பதற்கு, அவர் இயலாமை காரணமாக இருக்கலாம்.

இப்படி ஒரு பெண் நியாயம் கேட்டு வரும் போது, இரக்கமின்றி சாடுவது கண்டிக்கத்தக்கது. இது அடுத்து நியாயம் கேட்டு வரும் பெண்களைக் கூட பயமுறுத்தும். பெண்க ளும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சமுதாயத்தை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அதற்கு முன்னோடியாக, டப்பிங் சங்கத்தில் புதிதாக பெண்களின் குறைகளை கேட்டு தீர்க்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களின் குறைகளுக்கு தகுந்த தீர்வுகள் விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்” என்றவர் தன் எதிர்கால திட்டத்தை பற்றி விவரித்தார்.

‘‘அடுத்தகட்டமாக வாய்ஸ் ட்ரெய்னிங் வொர்க் ஷாப் செய்ய விரும்புகிறேன். பல கார்ப்பரேட் கம்பெனிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டப்பிங்கிற்கு என பயிற்சி மையங்கள் இங்கு அதிகம் இல்லை. டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக என்ன செய்ய வேண்டும் என எங்களில் யாரிடம் கேட்டாலும் பொதுவாக அனைவரும் சொல்லும் பதில், சங்கத்தில் சேர வேண்டும் என்பதே.

ஆனால், சங்கத்தின் மூலம் இங்கு வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கித் தரப்படும். வாய்ப்பு வந்து ஆடிஷன் சென்றால் அங்கு பெரும்பாலானோர் திணறுகின்றனர். ஆடிஷனில் ப்ளாக் மார்க் விழுந்து அடுத்து வரும் வாய்ப்புகளும் குறைந்து விடுகிறது. சில டப்பிங் பயிற்சி மையங்கள் அதிக பணத்திற்கு மாதக்கணக்கில் பயிற்சி அளிக்கின்றனர். டப்பிங்கை பொறுத்தவரை அடிப்படையான குரலை கட்டுப்படுத்த சில பாடங்கள் கற்றுக்கொண்டு, அதை பயிற்சி செய்து வந்தாலே போதும்” என்ற நிம்மி டப்பிங் குரலை பாதுகாப்பது அவரவருக்கு ஏற்ப மாறுபடும் என்றார்.  

‘‘ஒவ்வொருவரின் உடலை பொறுத்து அவர்கள் தங்களின் குரலை பாதுகாக்க வேண்டும். நான் ஐஸ் வாட்டர், ஐஸ்க்ரீம் எல்லாமே சாப்பிடுவேன். சளி பிடிக்காது. ஆனால் குளிர் காலத்தில் மட்டும் இதனை தவிர்த்து விடுவேன். தியானம், யோகா, மூச்சு பயிற்சிகள் செய்யலாம். சில சமயம் டப்பிங் கலைஞர்கள் கடினமான டப்பிங்கிற்கு குரல் கொடுத்த பின், தண்ணீர் குடிப்பதுண்டு. அது, அந்த சில நிமிடங்களுக்கு மட்டுமே நிவாரணம் தரும்.

ஆனால் நிரந்தர தீர்வாக இருக்காது. சில சமயம் தொண்டை அடைக்கும் போது, சிலர் கனைப்பது போல் தொண்டையை சரி செய்ய முயற்சி செய்வர். அதனை தவிர்க்க வேண்டும். சில சமயம் 30 பேர் முதல் 100 பேர் வரை கொண்ட சண்டை காட்சிகளில் அதிகமாக கத்த வேண்டியது இருக்கும். அந்த சமயம் சிலருக்கு வாயிலிருந்து ரத்தம் கூட வந்திடும். குரல் முழுமையாக மாறி சரி செய்ய முடியாமல், டப்பிங் துறையில் இருந்து வெளியேறிய உண்மைச் சம்பவங்கள் கூட இங்கு உண்டு.

இதையெல்லாம் தவிர்க்க குரலை அதிகம் சிரமம் கொடுத்து வருத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  டப்பிங்  துறையில் எனக்கான காலடியை முழுமையாக பதித்தப் பின், ஒரு படம் இயக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. இந்த ஆசை நிறைவேற எவ்வளவு ஆண்டுகள் ஆகும்ன்னு தெரியாது. ஆனால் நிச்சயம் ஒரு நாள் படம் இயக்குவேன்” என்றார் நிம்மி ஹர்ஷன்.

ஸ்வேதா கண்ணன்

ஏ.டி.தமிழ்வாணன்