கிச்சன் டிப்ஸ்* தொண்டை கரகரப்புடன் கூடிய வறட்டு இருமலுக்கு ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள் தூள், மிளகுப்பொடி
ஆகியவற்றை கலந்து அருந்தினால் உடனே குணமாகும்.
* சிறிது சீரகம், மிளகு, இரண்டு கண்டந்திப்பிலி,  ஒரு ஸ்பூன் தனியா போன்றவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்து சிறிது புளி ஜலத்தில் கொதிக்க வைத்து இருமுறை குடித்தால் உடம்பு வலி வந்த சுவடு தெரியாமல் பறந்தே போகும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

* எந்த மாவாக இருந்தாலும் சரி, அதில் பூச்சி பிடிக்காமலிருக்க மூன்று அல்லது நான்கு காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் மாவில் பூச்சிப் பிடிக்காது.
*புலாவ்  செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை புலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல் பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.
- கே.பிரபாவதி, புதூர்.

* சோள மாவு 2 கப் அளவுடன் கோதுமை மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு தலா ¼ கப் சேர்த்து தயிர், உப்பு, மிளகாய் விழுது, வெள்ளரிக்காய்த் துருவல், எள், எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து சற்று கனமாக, சிறிய பூரிகளாகத் தயாரித்து, எண்ணெயில் பொரித்து எடுக்க வெள்ளரிக்காய் பூரி தயார்.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

* இருபது ஏலக்காயுடன் நான்கு ஸ்பூன் கசகசா சேர்த்து வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாயசம் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் போது இந்த பொடியை சேர்த்தால் வாசனையாக இருக்கும்.
- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.

* ரசம் செய்து இறக்கி வைக்கும்போதுதான் கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும். தவிர ரசத்தில் தாளிக்க நெய் பயன்படுத்தினால் ரசம் வாசனையாக இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.

* செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அது சிறுநீரக கற்கள் உருவாகுதல், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் தடுக்கிறது. செவ்வாழையில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் எடையைக் குறைக்க நினைப்போர்க்கு மிகவும் உதவியாக இருக்கும். நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் செவ்வாழையை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு  வர குணமாகும்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

குலோப் ஜாமூன் டிப்ஸ்

* பாகு வைக்கும்போது, பொதுவாக  சம  அளவு சர்க்கரை, தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாவை அழுத்திப் பிசையக் கூடாது. உள்ளே கெட்டியாக இருப்பதால் சரியாக வேகாது.
* பாகு, ஜாமூன் இரண்டுமே சூடாக இருக்கும்போதுதான் நன்றாக இருக்கும். ஆறிய பாகில் போட்டால் ஜாமூன் சரியாக ஊறாமல் போகும் வாய்ப்புள்ளது.
* கலமான பாத்திரத்தில் பாகை ஊற்றி அதில்தான் ஜாமூன்களை போட வேண்டும். அப்போதுதான் எடுக்கும்போது கரண்டி பட்டு  ஜாமூன்கள் உடையாமல் இருக்கும்.
*மாவை தளரப் பிசைந்தாலும், சரிவர பிசையாமல் இருந்தாலும் ஜாமூன் உடையும்.
* டிரை குலோப்ஜாமூன் செய்யும் போது சிரப்பை நன்கு திக்காக வைத்து அதில் ஊறியதும் எடுத்து சர்க்கரைப் பவுடரில் பிரட்டி வைக்க நன்றாக இருக்கும்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.